Published:Updated:

`3 மாவட்டங்களாகப் பிரிப்பதில் சிக்கல்; தேன் கூட்டில் கை வெச்சுட்டீங்க!’ - எச்சரிக்கும் வேலூர் மக்கள்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

`சட்டமன்றத் தொகுதிகளின் வாரியாகவா அல்லது வருவாய் வட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, வேலூர் மாவட்டத்தை, 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்போகிறீர்களா என்பதை விரிவாகத் தெளிவுபடுத்தவேண்டும்' என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கருத்துக் கேட்பு கூட்டம்
கருத்துக் கேட்பு கூட்டம்

பரப்பளவில் மிகப்பெரியதாகவும், வளர்ச்சியில் மிகமிக பின்தங்கியதாகவும் உள்ள வேலூர் மாவட்டத்தை, நிர்வாக காரணங்களுக்காக திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும் என்று சுதந்திர தினவிழா உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக வேலூர் அடுக்கம்பாறை மற்றும் வாணியம்பாடியில் இன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால்
வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால்

கூடுதல் தலைமைச் செயலரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்தியகோபால், கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமை வகித்து பொதுமக்கள், வணிகர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டனர். சிலரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அதிகாரிகள் மழுப்பினர். தாலுகா வாரியாகவா அல்லது சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவோ மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறதா என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. தவிர, மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்கும்போது எல்லைகளை வகுப்பதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. 

சட்டமன்ற தொகுதி வாரியாக மாவட்டம் பிரிக்கப்பட்டால், தாலுகா வாரியாக பல ஊராட்சிகள் சிதையும். வேலூருக்கு மிக அருகில் உள்ள கணியம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட 12 ஊராட்சிகள், ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் இடம்பெறுகின்றன. ராணிப்பேட்டையை மாவட்டமாக உருவாக்கிய பிறகு அதனுள் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி அடங்கிவிடும். அப்படியெனில், கணியம்பாடியில் உள்ள குறிப்பிட்ட அந்த 12 ஊராட்சிகளும் சிதையும். எனவே, அந்த ஊராட்சிகளைச் சீரமைத்து வேலூர் மாவட்டத்துக்குள்ளேயே இருக்கச் செய்யவேண்டும்.

கருத்துக் கேட்பு கூட்டம்
கருத்துக் கேட்பு கூட்டம்

மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளை அளவுகோலாக எடுத்துக்கொண்டு மாவட்டங்களைப் பிரிப்பதைவிட வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்கினால் மட்டுமே மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள். புதிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை சரியாகச் சீரமைத்து அருகில் இருக்கும் கிராமங்களை அந்தந்த மாவட்டங்களிலேயே இணைக்கவேண்டும். அதேபோல், பேரணாம்பட்டு ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வாலாஜாபேட்டை தாலுகா மற்றும் சோளிங்கர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளும் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வருவதால் நான்கு எல்லையிலும் சிக்கல் கோத்துக் கிடக்கிறது. அதுமட்டுமல்லாமல், புதியதாக உருவாகும் மாவட்டங்களில் புதிய வருவாய் கோட்டங்கள், கல்வி மாவட்டங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அமைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. ‘தேன்’ கூட்டில் கை வைக்கும் கதையாக புதிய மாவட்டங்களை உருவாக்குவதில் சவால் காத்திருப்பதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

பொதுமக்கள்
பொதுமக்கள்

கலெக்டர் சண்முக சுந்தரம் கூறுகையில், ``கருத்து கேட்புக் கூட்டம் என்பது நாங்கள் முடிவெடுத்துவிட்டு உங்கள் மீது திணிப்பதில்லை. உங்களின் கருத்துகளை கேட்ட பிறகே முடிவெடுப்போம். உத்தேச முடிவு எடுப்பதற்கு முன்பே அரக்கோணத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது’’ என்றார். வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கூறுகையில், ``வேலூர் மாவட்டத்தை சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் பிரிப்பதா அல்லது வருவாய் வட்டங்களின் அடிப்படையில் பிரிப்பதா என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை’’ என்றார்.