Published:Updated:

அனுமதி பெற்றது 561; அனுமதியில்லாதது 2,000! - தட்டுப்பாடு காரணமாக உச்சத்தில் கேன்வாட்டர் விலை

கேன்வாட்டர்
கேன்வாட்டர்

சென்னையில் 20 லிட்டர் கேன் குடிநீர், 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேன் வாட்டர் பிரச்னைக்கு அரசு சுமுகத் தீர்வு காணவில்லை என்றால் மக்களின் தாகத்தை தணிக்க முடியாத சூழல் ஏற்படும்.

குடிக்கும் குடிநீர்கூட விற்பனைக்கு வந்தபோது அதை மக்கள் ஆச்சர்யமாகவே பார்த்தனர். குடிநீர் விற்பனையைத் தொடர்ந்து சுத்தமான காற்றும் விற்பனைக்கு வந்துள்ளது. குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு நீர்நிலைகளில் ஏற்பட்ட மாசுவே காரணம் எனலாம். பாதுகாக்கப்பட்ட குடிநீரை பருகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. 2000-ம் ஆண்டில்தான் 20 லிட்டர் கேன் வாட்டர் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது. அப்போது, மத்திய அரசின் சுற்றுச்சூழல், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்திய தரக்கட்டுபாட்டு ஆணையம் (ஐஎஸ்ஐ) மற்றும் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்று 20 லிட்டர் கேன் வாட்டர் உற்பத்தி கம்பெனிகள் செயல்படத் தொடங்கின. ஆனால், இன்று கேன் வாட்டர் வாங்காத குடும்பங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

கேன் வாட்டர்
கேன் வாட்டர்

இந்தச் சூழ்நிலையில் 20 லிட்டர் கேன் உற்பத்தி கம்பெனிகள் புற்றீசல் போல முளைத்தன. அதனால் நிலத்தடி நீர் அதிகளவில் ஊறிஞ்சப்படுவதாக புகார்கள் அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் செல்லத் தொடங்கின. இதையடுத்து, கேன் வாட்டர் உற்பத்திக்கு சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது. 2014-ம் ஆண்டில் அரசு ஆணை எண் 142 பிறப்பிக்கப்பட்டது. அதில், கேன் வாட்டர் உற்பத்திக்கென பூமியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக வழிகாட்டுதல் நெறிமுறைகள் உள்ளன. அதனால் 2014-ம் ஆண்டு முன் தொடங்கப்பட்ட கேன் வாட்டர் உற்பத்தி கம்பெனிகள் அனுமதியில்லாமல் தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்தன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் ஊறிஞ்சப்படுவது தொடர்பாக நடந்த பொதுநல வழக்கில் பிப்ரவரி 26-ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் அனுமதியில்லாமல் செயல்பட்ட 300-க்கும் மேற்பட்ட கேன்வாட்டர் கம்பெனிகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த அதிரடி காரணமாக கேன் வாட்டர் கம்பெனிகளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் மக்களுக்கு 20 லிட்டர் கேன் வாட்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.

சென்னை குடிநீர் வாரியம்
சென்னை குடிநீர் வாரியம்

இது குறித்து தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலத் தலைமை ஆலோசகர் பிரபாகரன் கூறுகையில், ``தமிழகம் முழுவதும் 1,689 கேன் வாட்டர் கம்பெனிகள் செயல்பட்டுவருகின்றன. இதில் 561 கம்பெனிகள் மட்டும்தான் பொதுப்பணித்துறை அனுமதி பெற்றவை. 1,128 கம்பெனிகள் அனைத்தும் பொதுப்பணிதுறை அனுமதியில்லாமல் ஐஎஸ்ஐ மற்றும் எஃப்.எஸ்.எஸ்.ஐ அனுமதியோடு செயல்பட்டு வந்தன. ஆனால், எந்தவித அனுமதியும் இன்றி 2,000 கம்பெனிகள் உள்ளன.

13.10.2018-ல் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், `அரசாணை 142, 2014-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் தொடங்கிய கம்பெனிகளையும் முறைப்படுத்த வேண்டும்' என்று கூறினார். நீதிபதியின் உத்தரவை அரசு பின்பற்றியிருந்தால் எந்தவித பிரச்னையும் ஏற்பட்டிருக்காது. குறிப்பாக ஐஎஸ்ஐ சான்றிதழ், உணவு பாதுகாப்பு துறை அனுமதியோடு செயல்படும் கம்பெனிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக செயல்படும் வாட்டர் கேன் கம்பெனிகள் குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன. எங்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு விசாரணையின்போது சரியான புள்ளி விவரங்களோடு நீதிமன்றத்தில் தகவல்களைச் சமர்ப்பிக்கவுள்ளோம். அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த கேன்வாட்டர் சங்கப் பிரதிநிதிகள் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. ஏனெனில் பொதுப்பணித்துறையின் செயலாளர் மற்றும் முதல்வரை இப்பிரச்னை தொடர்பாக சந்தித்துள்ளோம்.

பிரபாகரன்
பிரபாகரன்

கேன் வாட்டர் கம்பெனிகள், மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கிவருகின்றன. ஆனால், எங்களைவிட நிலத்தடி நீரை ஊறிஞ்சி வணிக ரீதியாக தண்ணீரை அதிகளவில் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மக்கள் நலன் கருதி உடனடியாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், மேலும், அரசு உத்தரவு வெளிவருவதற்கு முன் செயல்பட்டு வந்த கேன் வாட்டர் கம்பெனிகளுக்கான வழிமுறைகள் குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

ரூ.25-ல் இருந்து ரூ.70-க்கு உயர்ந்தது

20 லிட்டர் கேன் வாட்டர் உற்பத்தி நிறுத்தம், சட்டவிரோதமாக செயல்பட்ட கம்பெனிகளுக்கு சீல் ஆகிய காரணங்களால் சென்னையில் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்ட குடிநீர் கேன்கள், இன்று 70 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 75 ரூபாய் கொடுக்க மக்கள் தயாராக இருந்தாலும் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 20 லிட்டர் கேன் வாட்டர் கிடைப்பதில்லை.

கேன் வாட்டர்
கேன் வாட்டர்

இதுகுறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், ``தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம், 2003- ல் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி கிணறுகள் அமைக்கும்போது அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி நிலத்தடி நீரை ஓர் இடத்திலிருந்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடாது. இந்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் 2013-ல் இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்துதான் அரசாணை 142-ல் நிலத்தடி நீர்தொடர்பாக சில வழிமுறைகள் விதிக்கப்பட்டன. அதில், நிலத்தடி நீரை வணிக நோக்கத்துக்காக எடுப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் உள்ளன.

பாதுகாப்பான இடம், செமி கிரிட்டிக்கல் இடம், கிரிட்டிக்கல், நிலத்தடி நீரை எடுக்கக்கூடாத இடம் என 4 பிரிவுகளாக நிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடலிலிருந்து குறிப்பிட்ட கி.மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் தண்ணீரை எடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் கேன் வாட்டர் கம்பெனிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுப்பணித்துறையிலிருந்து தடையில்லாத சான்றிதழையும், மாவட்ட கலெக்டரிடமிருந்து அனுமதியும் கம்பெனிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், சட்டவிரோதமாக எந்தவித அனுமதியில்லாமல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கேன் வாட்டர் கம்பெனிகள் செயல்பட்டுவருகின்றன. அதனால்தான் அரசுக்குத் தெரிந்த வாட்டர் கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்திய போதிலும் மக்களுக்கு கூடுதல் விலைக்கு கேன் வாட்டர்கள் விற்கப்படுகின்றன' என்றனர்.

representational image
representational image

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 20 லிட்டர் கேன் வாட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சென்னை மக்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தினமும் 700 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் குடிநீர் வடிகால் வாரியத்தின் தண்ணீரை பருக பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆர்.ஓ.வுக்கு தடை

வீட்டு உபயோகத்துக்கான ஆர்.ஓ குடிநீருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மணி நேரத்துக்கு 500 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் ஆர்.ஓ-வைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடிநீர் கேன் கம்பெனிகளில் ஒரு மணி நேரத்துக்கு 500 லிட்டர் முதல் 25,000 லிட்டர் வரை குடிநீரை சுத்திகரிக்கும் ஆர்.ஓ. இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு