Published:Updated:

`என் உசுரு இருக்கிற வரைக்கும் இவங்கல மறக்க மாட்டேன்!’- மாற்றுத்திறனாளி பெண்ணை நெகிழவைத்த இளைஞர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைக்குப் பெயர் சூட்டுவிழா
குழந்தைக்குப் பெயர் சூட்டுவிழா

பையன் பிறந்து கூட்டிக்கிட்டு வந்த கொஞ்ச நேரத்துல மூச்சுத்திணறல் வந்திருச்சு. குழந்தை ஏற்கெனவே எடை குறைவு வேற. என்ன செய்றதுன்னே தெரியலை. உடனே, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர், சாவித்திரி (38). பார்வையற்ற மாற்றுத்திறனாளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தான் எங்கு செல்வது என்று தெரியாமல் புதுக்கோட்டைக்கு வந்துவிடுகிறார். இதுபற்றி அறிந்த புதுக்கோட்டை 'துணைவன்' என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், சாவித்திரியை மீட்டு அவருக்கு சிகிச்சையளித்து, வளைகாப்பு நடத்தி, பிரசவமும் பார்த்து, இன்று குழந்தைக்குப் பெயர் சூட்டு விழாவையும் நடத்தி சாவித்திரியை நெகிழ வைத்துள்ளனர். பேருந்து நிலையத்தில் அன்று ஆதரவற்ற நிலையில் புலம்பித் தவித்துக்கொண்டிருந்த சாவித்திரிக்கு இன்று, மகன், அப்பா, அம்மா, தங்கை, அண்ணன் என புதுப்புது சொந்தங்கள் கிடைத்திருக்கின்றன. நிர்க்கதியாகத் தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்களின் இந்தச் செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

குழந்தையுடன் சாவித்திரி
குழந்தையுடன் சாவித்திரி

இதுபற்றி துணைவன் அமைப்பைச் சேர்ந்த செல்வாவிடம் பேசினோம், `வழக்கமாக இதுமாதிரி இருக்கிறவங்களை மீட்டு, அவங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொடுத்து காப்பகத்தில் சேர்த்துவிடுவோம். ஆனா, சாவித்திரியோட நிலைமை வேறு. பார்வையற்ற பெண். அதோட நிறைமாத கர்ப்பிணி வேறு. அதனால, எங்களால அப்படி விட முடியலை. அரசு மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டு போய் அட்மிட் பண்ணி பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டோம். அதுக்கப்புறம், மெல்ல விசாரித்தபோது தான், சாவித்திரிக்கு செல்வராஜ்ங்கிற கணவர் இருந்ததும் அவர் கைவிட்டுட்டு போனதும் தெரிய வந்துச்சு. எங்க போறதுன்னு தெரியாம தான் புதுக்கோட்டைக்கு வந்தது எங்களுக்கு தெரியவந்துச்சு. செல்வராஜைக் கண்டுபிடிச்சு பேசி சாவித்திரியோட சேர்த்து வைக்கணும்.

அதுவரைக்கும் நாங்களே பார்த்துக்கணும்னு முடிவு பண்ணோம். எங்க உறவினர்களை வரவழைத்து வளைகாப்பு நடத்தினோம். சாவித்திரிக்கு ரொம்பவே சந்தோஷம். அதற்கப்புறம் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் வைத்து பிரசவம். பிரசவத்தப்ப சாவித்திரிக்கு பதற்றம் இருந்துச்சோ, இல்லையோ குழந்தை நல்ல படியா பிறக்கணும்னு எங்களுக்கு பெரிய பதற்றம் இருந்துச்சு. நல்ல படியா பையன் பிறந்தான். ஆனாலும், கொரோனா நேரம் என்பதுதான் பெரிய பிரச்னையாக இருந்துச்சு. பிரசவம் முடிஞ்ச 4 நாளிலேயே டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க. வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம்.

துணைவன் அமைப்பினர்
துணைவன் அமைப்பினர்

பையன் பிறந்து கூட்டிக்கிட்டு வந்த கொஞ்ச நேரத்துல மூச்சுத்திணறல் வந்திருச்சு. குழந்தை ஏற்கெனவே எடை குறைவு வேற. என்ன செய்யிறதுன்னே தெரியலை. உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். இப்போ ஒரு மாச சிகிச்சைக்கு அப்புறம் இப்போ எந்த பிரச்னையும் இல்லாமல் நல்லபடியா இருக்கான். சாவித்திரியால குழந்தையைப் பார்த்துக்க முடியாது. அதனால, எங்க செலவில் குழந்தையைப் பார்த்துக்க ஒருத்தங்கள கூட்டிக்கிட்டு வந்தோம். அவங்களும் தன்னோட பிள்ளை போல பார்த்துக்கிறாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாவித்திரியும் குழந்தைகளும் எங்களோட அரவணைப்பில்தான் இருக்காங்க. சாவித்திரியை மீட்டு நல்லபடியாகக் குழந்தை பெற்றெடுக்கும் வரைக்கும் நிறைய உதவிகளை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் செய்து கொடுத்தாரு. அதனால, அவர் தலைமையிலேயே பெயர் சூட்டுவிழாவை நடத்தினோம். குழந்தைக்கு ஸ்ரீபதி என்ற பெயரைச் சூட்டி இனிப்பு வழங்கினார். செல்வராஜை கண்டுபிடிக்கணும். சாவித்திரி சொந்தக்காலில் உழைக்க வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கணும்" என்கிறார்.

குழந்தைக்குப் பெயர் சூட்டுவிழா
குழந்தைக்குப் பெயர் சூட்டுவிழா

சாவித்திரியிடம் பேசினோம், "அப்பா, அம்மாவுக்கு அப்புறம் புருஷன் நல்லபடியா பார்த்துக்குவாருன்னு தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, அவரு கைவிட்டுட்டாரு. ஈரோட்டுல சொந்தக்காரங்கன்னு நிறைய பேரு இருந்தும், அனாதையாகத் தான் இருந்தேன். அன்னைக்கு மனசு வெறுத்து, எங்காயவது போயி செத்துப்போயிறலாம்னு தான் பஸ் ஏறுனேன். இன்னைக்கு அப்பா, அம்மா, அக்கா, தங்கைன்னு இங்க நிறைய உறவுகள் கிடைச்சிருக்கு. இப்போ, நல்லா வாழணுங்கிற எண்ணம்தான் வருது. குழந்தையும் நல்ல படியாகப் பெத்து எடுத்திட்டேன். என்னையும், என் குழந்தையையும் ரொம்பவே நல்லா பார்த்துக்கிறாங்க. அப்பா, அம்மா இல்லைங்கிற குறையைப் போக்கிட்டாங்க. என் உசுரு இருக்கிற வரைக்கும் இவங்க உதவியை மறக்க மாட்டேன்" என்கிறார் ஆனந்தக் கண்ணீருடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு