Published:Updated:

`ஆண்டில் 3 மாதங்கள்தான் வருமானம்; வாழ்வாதாரமே கேள்விக்குறி!’ -கலங்கும் புதுவைக் கலைஞர்கள்

கலைஞர்கள்
கலைஞர்கள்

எங்களுக்கு ஓராண்டில் வாழ்வாதாரமாக விளங்குவது பங்குனி, சித்திரை, வைகாசி, மாதங்களில் நடைபெறக்கூடிய கோயில் திருவிழாக்கள்தான்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வாழ்கின்ற மேடை இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள், தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

தங்கவேலு
தங்கவேலு

காரைக்கால் மாவட்ட கலைஞர்களின் மாமன்றத்தின் தலைவர் தங்கவேலுவிடம் பேசினோம். ``அனைத்துவகை கலைஞர்களாக புதுவையில் சுமார் 10,000 பேரும், காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 5,000 பேரும் வசிக்கிறோம். எங்களுக்கு ஓராண்டில் வாழ்வாதாரமாக விளங்குவது பங்குனி, சித்திரை, வைகாசி, மாதங்களில் நடைபெறக்கூடிய கோயில் திருவிழாக்கள்தான். இவை அத்தனையும் இன்று கொரோனா ஊரடங்கால் முற்றிலுமாய் முடங்கிவிட்டது. எப்போதாவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கிட்டும். கலைஞர்கள் முகத்தில் அரிதாரம் பூசிவிட்டால் வேறு எந்த வேலைக்கும் போக முடியாது. வேறு வேலையும் தெரியாது.

தமிழ்நாட்டிலாவது நாட்டுப்புறக் கலைஞர்களுக்குத் தனி வாரியம் வைத்திருக்கிறார்கள். அங்கு கலை பண்பாட்டுத்துறை சிறப்பாகச் செயல்பட்டு கலைஞர்களுக்கு உதவி செய்கிறார்கள். இங்கு கலை பண்பாட்டுத்துறை செயலிழந்து நிற்கிறது. வருடத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் தருவார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 5,000 -ம்தான். ஆனால் அதைப் பெறுவதற்கு 3 மாதங்கள் அலைய வேண்டும்.

3 மாதங்களில்தான் வருமானம்
3 மாதங்களில்தான் வருமானம்

தமிழ்நாட்டில்கூட அரசும், கருணை உள்ளம் கொண்ட நடிகர்களும் ஏராளமான உதவிகள் செய்கிறார்கள். புதுவை அரசிடமிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடையாது. எனவே இந்த இக்கட்டான நேரத்தில் கலைஞர்களுக்கு உடனடியாக அரசு ரூ.15,000 நிவாரணத் தொகையாக வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

குதிரையிலிருந்து ஹென்ரா, வவ்வாலிலிருந்து கொரோனா... வைரஸ்களின் திகில் ஃப்ளாஷ்பேக்!

இதுகுறித்து புதுவை மாநில கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் ராகிணியிடம் பேசினோம். ``கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது பற்றி நேற்றுதான் கலைஞர்கள் என்னிடம் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்வேன். இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது அரசுதான். மற்றபடி நான் இப்பொழுதுதான் பதவி ஏற்றுள்ளேன். எங்கள் துறை சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு இனி உடனுக்குடன் பணம் கிடைக்க ஆவன செய்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு