Published:Updated:

`2 நாள்தான் கெடு!' - ஆழ்துளைக் கிணறு விவகாரத்தில் கொதித்த நாராயணசாமி

புதுச்சேரியில் ஆழ்துளைக் கிணறு விபத்துகளை தடுக்கும் வகையில் அதற்காக திறமையான பணியாளர்களை நியமிப்பதோடு, அதற்கான இயந்திரங்களும் வாங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.

கிணறு
கிணறு ( அ.குரூஸ்தனம் )

திருச்சி நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தைத் தாண்டி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீட்புப்படைக் குழுவினர் சிறுவன் சுஜித்தை மீட்க போராடிக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஆழ்துளைக் கிணறுகள் குறித்த விவாதங்களும், விழிப்புணர்வு பிரசாரங்களும் வேகமெடுத்தன.

ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அருண்
ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அருண்

இந்த நிலையில்தான், புதுச்சேரியில் 13 ஆண்டுகளாக மூடப்படாமல் இருக்கும் 50 ஆழ்துளைக் கிணறுகள் குறித்த செய்தியை எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டது விகடன். புதுச்சேரியில் கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சேதராப்பட்டு, துத்திப்பட்டு, கரசூர் பகுதிகளில் இருந்த 840 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது.

தொடர்ந்து பொருளாதார சிறப்பு மண்டலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இரண்டு தனியார் நிறுவனங்களிடம் கைமாறிய விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் குற்றம் சுமத்தின. அதைத் தொடர்ந்து சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ததால் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. முன்னதாக தங்கள் விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த போர்வெல்களில் இருந்து மோட்டார்களை மட்டும் கழற்றிக்கொண்ட விவசாயிகள், ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் அப்படியே சென்றுவிட்டனர்.

அமைச்சர் கமலக்கண்ணன்
அமைச்சர் கமலக்கண்ணன்

அதனால் அந்தக் கிணறுகளில் ஆட்டுக்குட்டிகள் விழுவதும், மாடுகளின் கால்கள் மாட்டிக் கொள்வதும் தொடர்கதையாகிவிட்டது. பள்ளி செல்லும் வயதை எட்டாத தங்கள் குழந்தைகளுடன் மேய்ச்சலுக்காக ஆடு, மாடுகளை இந்தப் பகுதிகளுக்கு ஓட்டி வரும் தாய்மார்களுக்கு இந்த மரணக் குழிகள் கடும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.

ஆழ்துளை குழி மீட்பு  கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு! - ஐ.டி.செயலர் அறிவிப்பு

கடந்த 28-ம் தேதி இதுகுறித்த செய்தியை வெளியிட்டதுடன், நாம் பார்த்த 2 ஆழ்துளைக் கிணறுகளையும் அங்கிருந்த கற்களைக் கொண்டு மூடிவிட்டு, மாவட்ட ஆட்சியர் அருணின் கவனத்துக் கொண்டு சென்றோம். அப்போது, ``சரியான நேரத்தில் கவனத்துக்கு கொண்டு வந்த விகடனுக்கு நன்றி. நமது மாநிலத்தில் அப்படியான கிணறுகள் இருக்கக் கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறியதோடு மறுநாளே உதவி ஆட்சியர், தாசில்தார், வேளாண்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளோடு சேதராப்பட்டு, கரசூர் பகுதியில் ஆய்வில் இறங்கினார்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

அப்போது அந்தப் பகுதியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தையும் உடனடியாக மூடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்காக அரசிடம் அனுமதிபெற்றவர்களின் பட்டியலையும் கேட்டுப் பெற்றார். தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து அதை மூடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், விகடன் இணையத்தளத்தில் நம் செய்தித் தொகுப்பு வெளியான சிறிது நேரத்தில், ``புதுச்சேரியில் விளை நிலங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும். அப்படி பயன்பாட்டில் இல்லாத கிணறுகளை மூடாதவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல அந்தக் கிணறுகள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு அரசு தரப்பில் பரிசு வழங்கப்படும்” என்றும் அறிவித்தார்.

சேதராப்பட்டு
சேதராப்பட்டு
அ.குரூஸ்தனம்

அதேபோல, ``புதுச்சேரியில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தையும் 2 நாள்களுக்குள் மூடி அறிக்கை தர வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர் நாராயணசாமி, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில் அதற்காக திறமையான பணியாளர்களை நியமிப்பதோடு, அதற்கான இயந்திரங்களும் வாங்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.