Published:Updated:

``மருத்துவர்களே கடவுள்” -காலில் விழுந்து வணங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ
எம்.எல்.ஏ

``கொரோனா தொற்றைப் பொறுத்தவரை மருத்துவர்கள்தான் கடவுள்” என்று கூறிய புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயமூர்த்தி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மக்களைச் சந்திப்பதாலும், இலவச அரிசி, காய்கறிகளை வழங்குவதாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அத்துடன் நேற்று காலை 9 முதல் 11 மணி வரை நடக்கும் பரிசோதனையில் மக்கள் பிரதிநிதிகள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று கூறியிருந்தது.

முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை
முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை

அதனடிப்படையில் நேற்று காலை முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அன்பழகன், பாஸ்கர், பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள் சாமிநாதன், சங்கர் ஆகியோர் பரிசோதனை செய்துகொண்டனர். அவர்களுக்கு ஆர்.டி-பி.சி.ஆர் (RT-PCR) முறையில் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அரியாங்குப்பம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவான ஜெயமூர்த்தி, பரிசோதனை செய்ய வந்திருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கால்களில் விழுந்து வணங்கி பாராட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயமூர்த்தி
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயமூர்த்தி

இதுகுறித்து நம்மிடம் பேசிய எம்.எல்.ஏ ஜெயமூர்த்தி, ``எனது அரியாங்குப்பம் தொகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் மட்டும்தான் உயிரைப் பணயம் வைத்து அந்தப் பகுதிக்குள் சென்று அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்துவந்தனர். அதேபோல அந்தப் பகுதியில் 24 மணி நேரமும் முகாம் அமைத்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கவனித்துக்கொண்டார்கள். உலகம் முழுக்க இருக்கும் மருத்துவர்கள் இதேபோல அர்ப்பணிப்பு உணர்வுடன்தான் பணியாற்றி வருகின்றனர். அவர்கள்தான் கடவுள். அவர்களின் சேவையைப் பாராட்டித்தான் அவர்களின் காலில் விழுந்தேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு