Published:Updated:

ரேஷன் கடை இருப்பில் கோல்மால்; திடீர் ஆய்வு! -தப்பியோடிய புதுக்கோட்டை ஊழியர்

திடீர் ஆய்வு
திடீர் ஆய்வு

ரேஷன் கடையில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் இருப்புக் கணக்கின்படி இல்லை. கணக்கினைவிட மிகவும் குறைவாக இருப்பதைக்கண்டு அதிகாரிகளே அதிர்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை அருகே மேட்டுப்பட்டியில் பகுதிநேர நியாயவிலைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. `குறித்த நேரத்திற்குக் கடை திறப்பதில்லை, பொருள்கள் சரிவரக் கிடைப்பதில்லை' எனக் குடிமைப்பொருள் அதிகாரிகளுக்கு இந்தக் கடை தொடர்பாக ஏராளமான புகார்கள் சென்றன.

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட கடையில் ரகசியமாக ஆய்வு நடத்தத் திட்டமிட்ட ஆலங்குடி குடிமைப்பொருள் தாசில்தார் பிரமினா மேரி அலுவலர்களுடன் கடையில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இந்தத் திடீர் ஆய்வு குறித்துத் தகவலறிந்த கடையின் விற்பனையாளர் கடையைத் திறந்து வைத்தவாறு தலைமறைவாகிவிட்டார்.

ஆய்வில் அதிகாரிகள்
ஆய்வில் அதிகாரிகள்

இதையடுத்து, அருகே உள்ள நியாயவிலைக்கடை பணியாளர் ஒருவரை வரவழைத்து அந்தக் கடையில் அனைத்துப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் இருப்புக் கணக்கின்படி இல்லை. கணக்கினைவிட மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டு அதிகாரிகளே அதிர்ச்சியடைந்தனர்.

வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது, அதிலும் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து நியாயவிலைக்கடை இழுத்து மூடப்பட்டது. பகுதி நேர நியாயவிலைக்கடை கடை மூடப்பட்டதால், பொருள்கள் வாங்க வந்த நுகர்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

அச்சுறுத்தும் டிக்-டாக் வீடியோ டு கொரோனா தடுப்புப் பணி! - புதுக்கோட்டை இளைஞரை மாற்றிய இன்ஸ்பெக்டர்

இதுபற்றிப் பொதுமக்கள் கூறுகையில், "வழக்கமாகவே ரேஷன் கடை சரியான நேரத்திற்குத் திறக்க மாட்டாங்க. எப்போதுமே கிடைக்க வேண்டிய பொருள்கள் முழுமையாகக் கிடைக்காது. எப்ப கேட்டாலும், விற்பனையாளரிடமிருந்து இப்போதைக்கு இருப்பு இல்லை என்று பதில்தான் வரும். கொடுக்கிற அரிசி, பருப்பு எல்லாம் எடை குறைவாகத்தான் இருக்கும். இந்த ரேஷன் கடையில் பல்வேறு முறைகேடுகள் நடக்குது. அதிகாரிகள்கிட்ட பலமுறை புகார் கூறியிருக்கோம். இப்போதான் விடிவுகாலம் வந்திருக்கு" என்றனர்.

Vikatan

குடிமைப்பொருள் தாசில்தார் பிரமினா மேரியிடம் பேசினோம். "ரேஷன் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இருப்பு வந்தவுடன் மாற்று விற்பனையாளரைக் கொண்டு பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே இருந்த விற்பனையாளர் பல்லாயிரக்கணக்கான ரூபாய் கையாடல் செய்துள்ளார். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு