Published:Updated:

`எரிந்தது சீமைக்கருவேல மரம், ராணுவ ஹெலிகாப்டர் அல்ல!' -வதந்தியால் கொதித்த புதுக்கோட்டை கலெக்டர்

சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட இடம்
சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட இடம்

கண்மாயில் உள்ள கருவேலமரங்கள் தீப்பற்றி எரிந்ததையும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானிலிருந்து வந்த பயங்கர சத்தத்தையும் இணைத்து, விஷமிகள் சிலர் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள பேயாடிக்கோட்டை மேல வசந்தனூர் பகுதியில், சிறிய வகை ராணுவ ஹெலிகாப்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும், ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேர் பலியாகிவிட்டனர் என்பது போன்ற தகவல்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதேநேரம், கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானிலிருந்து வெடிகுண்டு வெடித்தது போல பயங்கர சத்தம் கேட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அறந்தாங்கி வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தீ
தீ

விசாரணையில், அதுபோன்ற விபத்து ஏதும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் கண்மாயில் உள்ள கருவேலமரங்கள் தீப்பற்றி எரிந்ததையும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானிலிருந்த வந்த பயங்கர சத்தத்தையும் இணைத்து கலிஃபோர்னியாவில் ஜனவரி மாதம் நடைபெற்ற விமான விபத்தின் புகைப்படங்களை வைத்து, புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகச் சித்திரித்து, விஷமிகள் சிலர் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பியுள்ளனர்.

இதை நம்பிய பொதுமக்கள் பலரும் பலருக்கு அனுப்பவே, தகவல் வைரலாகிவிட்டது. சூப்பர் சோனிக் விமானம் பறந்ததால்தான் வானிலிருந்து பயங்கர சத்தம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதுக்கோட்டையில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

`பெங்களூரு, திருப்பூரைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை!' -`திடீர்' சத்தத்தால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

இதுபற்றி பேசிய மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, " விமானம் விபத்துக்குள்ளானதாகத் தவறான தகவல் தொடர்ந்து பரவி வருகிறது. அங்குள்ள கண்மாயில் புற்களுடன் சேர்ந்து கருவேலமரம் எரிந்துள்ளது. மற்றபடி விமானம் தீப்பற்றியதற்கான எந்த தடயங்களும் இல்லை. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியிருக்கின்றனர். இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு