Published:Updated:

`தடுப்பூசி போடுங்கய்யா..!' - வடிவேலு கெட்டப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாட்டுப்புறக் கலைஞர்

கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு

மாஸ்க் அணிவது, சானிட்டைசர் கொண்டு அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்துவது, தடுப்பூசி போடுவதன் அவசியம் ஆகியவற்றை வடிவேலு பாணியில் நகைச்சுவையுடன் பொதுமக்களிடம் எடுத்துக்கூறுகிறார் இந்த நாட்டுப்புறக் கலைஞர்.

கொரோனா பரவலின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், கொரோனா தடுப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை அருகே கலபம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் ஒருவர் வடிவேல் கெட்டப் போட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மாஸ்க் அணிவது, சானிட்டைசர் கொண்டு அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்துவது, தடுப்பூசி போடுவதன் அவசியம் போன்றவற்றை வடிவேலு பாணியில் நகைச்சுவையுடன் பொதுமக்களிடம் எடுத்துக்கூறுகிறார். அதோடு, பொதுமக்களுக்கு மாஸ்க், சானிட்டைசர்களையும் இலவசமாக வழங்குகிறார். நாட்டுப்புறக் கலைஞரின் வித்தியாசமான இந்த முயற்சிக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கொரோனா விழிப்புணர்வு பணியில்
கொரோனா விழிப்புணர்வு பணியில்
மதுரை: சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடி அசத்தும் மதிச்சியம் பாலா!

இதுபற்றி நாட்டுப்புறக் கலைஞர் இளவரசனிடம் பேசினோம். ``தாத்தா, நாடக மேடைக் கலைஞர். நாடகத்துல கோமாளி வேஷம் போடுறவரு. அப்பா தவில் வித்வான். நான் 7-வது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். படிப்பு மண்டையில ஏறாததால 14 வயசுலேயே கலை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆரம்பிச்சேன். இடையில் பகல் நேரத்தில் அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிடுவாங்க. ராஜா, மந்திரி வேஷம் போட்டு கிராமங்களுக்குப் போய் மக்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தணும். குறைவான சம்பளம்தான் கிடைக்கும். ஆனாலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற வேலை பிடிச்சிப்போனதால, இப்பவும் தொடர்ந்துக்கிட்டு இருக்கேன்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கர்ப்பவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கக்கூடாது, திருநங்களை வெறுக்கக்கூடாது போன்ற கருத்துகளோட ஏராளமான விழிப்புணர்வு நிகழ்வுகளை குழுவா நடத்துவோம். அதுக்கு ஸ்கிரிப்ட் எல்லாம் நானே எழுதி இயக்குவேன். ஆனாலும், இப்ப முன்னமாதிரி அதிகமாக அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கிடைக்கலை. இப்போ கொரோனா ஊரடங்கால, தொடர்ச்சியா நிகழ்ச்சிகளும் இல்ல. இந்த ரெண்டும் இல்லாத நேரங்கள்ல பெயின்ட் வேலை, கூலி வேலைக்குப் போய்தான் குடும்பத்தை நடத்தணும்.

இளவரசன்
இளவரசன்
’கர்ணன்’ திரைப்பட பாடல் மெட்டு..  கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் தேனி ’ஹெட் கான்ஸ்டபிள்’!

இப்போ, கொரோனா மூணாவது அலை வேகமாகப் பரவ வாய்ப்பிருக்குது, அதுவும் குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கும்னு சொல்றாங்க. ஆனா, பொதுமக்கள்கிட்ட அந்த விழிப்புணர்வே இல்ல. நாம ஏதாவது செய்யணும்னு யோசிச்சப்பதான் இந்த ஐடியா வந்துச்சு.

எனக்கு வடிவேலுவை ரொம்பப் பிடிக்கும். எனக்கு இயல்பாகவே அவரோட நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாம் வரும். அதனால, அவர் கெட்டப் போட்டுக்கிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்னு எங்க ஊர்ல இருந்து துவங்கியிருக்கேன். கிராமங்களுக்குப் போனப்போ, வடிவேலுவை நேர்ல பார்த்த சந்தோஷம் சிறுவர்களுக்கு. பொதுமக்கள்கிட்டயும் நல்ல வரவேற்பு இருந்துச்சு. தொடர்ச்சியா இதைச் செய்யணும். அதே நேரத்துல அரசு இப்போ நிகழ்ச்சிகள் இல்லாத என்ன மாதிரி கலைஞர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பளிக்கணும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு