Published:Updated:

ரூ.7,000 சேமிப்புப் பணத்தில் 1,000 மாஸ்க்குகள்! - கலெக்டரை நெகிழ வைத்த புதுக்கோட்டை சகோதரர்கள்

சேமிப்புப் பணத்தில் மாஸ்க்குகள் கொடுத்த சகோதரர்கள்
சேமிப்புப் பணத்தில் மாஸ்க்குகள் கொடுத்த சகோதரர்கள்

சிறுவர்கள் இருவரும் தங்களது சேமிப்புப் பணம் ரூ.7,000-க்கு 1,000 மாஸ்க்குகள் வாங்கிச் சென்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் கையில் ஒப்படைத்து நெகிழ வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன்கள் தர்ஷன் (10), பிரணவ் (9). இதில், தர்ஷனுக்குப் பார்வைக் குறைபாடு உள்ளது. சிறுவயதிலேயே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட இருவரும் பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தைச் சேமித்து வைத்திருந்தனர். தற்போது கொரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.

மாஸ்க்குகள் கொடுத்த சகோதரர்கள்
மாஸ்க்குகள் கொடுத்த சகோதரர்கள்

முகக்கவசம் வாங்க முடியாதவர்களுக்கும் முகக்கவசம் கிடைக்கும் வகையிலும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சிறுவர்கள் இருவரும் தங்களது சேமிப்புப் பணம் ரூ.7,000-க்கு 1,000 மாஸ்க்குகள் வாங்கிச் சென்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் கையில் ஒப்படைத்து நெகிழ வைத்தனர்.

இதுபற்றி சிறுவர்களின் தந்தை பாஸ்கரிடம் கேட்டபோது, "விவரம் தெரிஞ்ச உடனே எங்க பிள்ளைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைச் சொல்லிக் கொடுத்திட்டோம். நாங்க அப்பப்ப கொடுக்கிற காசை செலவு செய்யாம உண்டியல்ல போட்டு வச்சிருவாங்க. பிள்ளைகளோட மூணு வருஷ சேமிப்பு அது.

"ஏழு வயதுச் சிறுமியைக் காத்த மாஸ்க்!" - மூன்று வகை முகக் கவசத்தில் எது பெஸ்ட்?

எதுக்கு காசு சேமிச்சு வைக்கிறீங்கன்னு கேட்டால், எங்க மேல்படிப்புக்கு உங்கள கஷ்டப்படுத்த மாட்டோம். இந்தச் சேமிப்புப் பணத்தை வச்சே படிச்சிக்குவோம்னு சொல்வாங்க. அப்போ வழக்கத்தைவிட கூடுதலாகக் காசு கொடுக்கணும்னு தோணும். ஊரடங்கு நேரத்தில தொடர்ச்சியாக 51 நாள் எங்களால் முடிஞ்ச அளவிற்கு வீட்டிலேயே சாப்பாடு செஞ்சு ஆதரவற்றோர், ஏழை எளியோருக்குக் கொடுத்தோம்.

கபசுரக் குடிநீர் கொடுத்தோம். இந்த நேரத்தில்தான் மாஸ்க் இல்லாம, வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்னு கலெக்டர் அறிவித்த செய்தியைப் பார்த்த சின்ன பையன், நாங்க சேமிச்சு வச்சிருக்க பணத்தில் இருந்து மாஸ்க் வாங்கிக் கொடுப்போம்னு சொன்னான். பிள்ளைகளுடைய ஆர்வத்தைப் பார்த்து உடனே ஓகே சொல்லிட்டேன்.

சேமிப்புப் பணத்தில் மாஸ்க்குகள் கொடுத்த சகோதரர்கள்
சேமிப்புப் பணத்தில் மாஸ்க்குகள் கொடுத்த சகோதரர்கள்

அபராதம் விதிக்கிறதோட, மாஸ்க் இல்லாம வர்றவங்ககிட்ட மாஸ்க் கொடுத்து அனுப்பினா நல்லா இருக்கும்னு சொன்னான். பெரியவன் 5,000 ரூபாய், சிறியவன் 2,000 ரூபாய்னு சேமித்து வச்சிருந்தாங்க. மொத்தமாக 7,000 ரூபாய் பணத்தை வச்சு 1,000 மாஸ்க் வாங்கினோம். அவற்றை கலெக்டர்கிட்ட கொடுத்திட்டோம். அவங்களும் உரியவர்களிடம் கொண்டு போய் சேர்த்திட்டாங்க. பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி" என்றார் நெகிழ்ச்சியுடன்.

இதுபற்றி கூறிய மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, "சிறு வயதிலேயே இதுபோன்ற ஆர்வம் மற்றும் சேவை மனப்பான்மையுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்றுதான் இருக்க வேண்டும். சிறுவர்கள் கொடுத்த மாஸ்க், ஏழை எளியோர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

`சீட்டுக்கு நடுவில் தடுப்பு, இலவச மாஸ்க், சானிடைஸர்!' - கரூர் இளைஞரின் டாக்ஸி சர்ப்ரைஸ்
அடுத்த கட்டுரைக்கு