Published:Updated:

`கலெக்டராக என்ன செய்ய வேண்டும்; வாட்ஸ் அப் மெசேஜ்’ - சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்

சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்
சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்

`கலெக்டர் மேடம் எங்க காலேஜ்க்கு அடிக்கடி வருவாங்க. அவங்களோட பேச்சு எனக்குப் பிடிக்கும். அப்பத்தான் ஐ.ஏ.எஸ் ஆக என்ன செய்ய வேண்டும் என கலெக்டரிடமே கேட்கலாம்னு முடிவு பண்ணி மெசேஜ் அனுப்புனேன்.

புதுக்கோட்டை மாவட்டம் மதியநல்லூரைச் சேர்ந்தவர் கோமதி (22) புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் உயிரியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயது முதலே ஐ.ஏ.எஸ் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று லட்சியம் கொண்டுள்ள கோமதி சரியான வழிகாட்டுதல் இன்றி தவித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான், தான் ஐ.ஏ.எஸ் படிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்தான் வழிகாட்ட வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணுக்கு இதுபற்றிய மெசேஜ் ஒன்றையும் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, அவரிடமிருந்து ஆட்சியரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு மெஜேஜ் வரவே, மாணவியை நேரடியாகத் தனது அலுவலகத்துக்கு கல்லூரி பேராசிரியர்கள் மூலம் வரவழைத்த ஆட்சியர், மாணவியை ஊக்கப்படுத்தியதோடு ஐ.ஏ.எஸ் ஆவதற்கான வழிகாட்டுதல் புத்தகங்களையும் கொடுத்து மாணவியை நெகிழ்ச்சியடைய வைத்தார்.

சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்
சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்
230750825053102

இதுபற்றி பேசிய மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, ``என்னோட அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்குக் குறைகள், கோரிக்கைகள் எனத் தினமும் ஏராளமான மெசேஜ்கள் வரும். அதைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, உண்மைத் தன்மையைப் பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சூழலில்தான் கல்லூரி மாணவி ஒருவர் என்னுடைய வழிகாட்டுதல் வேண்டித் தொடர்ந்து மெசேஜ் அனுப்பினார். மாவட்ட ஆட்சியராக இதுவும் நம்முடைய கடமைதானே, அதான் அந்த மாணவியை உடனே அலுவலகம் வரச் சொல்லிவிட்டேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவிலான மாணவிகள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ரொம்பவே ஆர்வமாக இருக்கின்றனர்.

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. தற்போது, கோமதியின் பல சந்தேகங்களுக்கு விடை கொடுத்துவிட்டேன். ஐ.ஏ.எஸ் மெட்டீரியல்கள் சிலவற்றையும் கொடுத்துள்ளேன். தொடர்ந்து, கோமதிக்கு வழிகாட்டத் தயாராக இருக்கிறேன். அரசு மகளிர் கல்லூரியில் 50 மாணவிகளுக்கு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவது எப்படி என்பது பற்றி வழிகாட்டல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோமதி போன்று ஆர்வமுள்ள அனைவருக்கும் பயிற்சி கொடுக்க வலியுறுத்தியுள்ளேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி 65 பேருக்கு வழிகாட்டல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பயிற்சி மற்றும் மெட்டீரியல் வழங்கப்படுகிறது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்" என்றார்.

சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்
சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்

இதுபற்றி பேசிய கோமதி, ``எல்லாருக்கும் போல எனக்கும் ஐ.ஏ.எஸ் படிக்கணும்னுதான் ஆசை. காலேஜ் படிக்கும்போதே பயிற்சி எடுத்துக்கணும்னு ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்க. வீட்டுலயும் என்னை படிக்க வைக்க ஆசைதான். ஆனா, என்ன படிக்கணும், எப்படிப் படிக்கணும்னு வழிகாட்ட யாரும் இல்லை. அந்த நேரத்துலதான் கலெக்டர் மேடம் எங்க காலேஜ்க்கு அடிக்கடி வருவாங்க. அவங்களோட பேச்சு எனக்குப் பிடிக்கும். அப்பத்தான் ஐ.ஏ.எஸ் ஆக என்ன செய்ய வேண்டும் என கலெக்டரிடமே கேட்கலாம்னு முடிவு பண்ணி மெசேஜ் அனுப்புனேன். என்னோட மெசேஜ்க்கு உடனே கலெக்டர் மேடத்திடமிருந்து பதில் வரும்னு நெனச்சுக்கூட பார்க்கலை. நேரடியாகக் கூப்பிட்டு எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. அவங்களோட சந்திப்புக்கு அப்புறம் இப்போ ரொம்ப நம்பிக்கை வந்திருக்கு. கண்டிப்பாக புதுக்கோட்டைக்கு கலெக்டராக ஆகணும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு