Published:Updated:

ரயில்வே சுரங்கப்பாதையை சூழ்ந்த மழைநீர்; காரில் சிக்கிக்கொண்ட மருத்துவர் பரிதாப பலி!

``சுரங்கப்பாதையைச் சுற்றி விளக்கு வசதி இல்ல. தண்ணீரை வெளியேற்றும் மோட்டார் பழுதடைந்து வேலை செய்யாமக் கிடக்கு. இது பத்தி தெரியாமல் இந்த வழியாக வந்து, பல பேரின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர் பரிதாபமா உயிரிழந்திருக்கார்." - ஊர் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே துடையூரில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. பொம்மாடி மலையிலிருந்து துடையூருக்கு ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதையை துடையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே புதுக்கோட்டை முழுவதும் தொடர் மழை பெய்தது. அதனால் இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கியிருக்கிறது. இதனையறியாமல் நேற்றிரவு இந்தச் சுரங்கப்பாதை வழியாக மகப்பேறு மருத்துவர் சத்யா, அவரின் மாமியார் ஜெயா இருவரும் காரில் சென்றுள்ளனர். அப்போது காரின் இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்து இன்ஜின் கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டது. அதே நேரத்தில் கார் தண்ணீரில் மூழ்கிய நிலையில், காரிலிருந்து வெளியே வரமுடியாமல் இருவரும் தவித்திருக்கின்றனர்.

மழைநீரில் மூழ்கிய கார்
மழைநீரில் மூழ்கிய கார்
தேனி: நேருக்கு நேர் மோதிய லாரி - ஆம்னி பேருந்து! -இரண்டு ஓட்டுநர்கள் பலி; சிகிச்சையில் 6 பேர்

அப்போது, ஜெயா பின்பக்க கதவைத் திறந்து நீச்சலடித்தபடி வெளியே வந்துள்ளார். சீட் பெல்ட் போட்டிருந்த சத்யா அதனை அகற்றி உடனே வெளியேற முடியாமல் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடினர். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சத்யாவின் மாமியார் ஜெயா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மருத்துவர் சத்யா ஓசூரில் மகப்பேறு மருத்துவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கணவர், இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கமாக மகன்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு செல்லும் சத்யா, சம்பவத்தன்று மகன்களை வீட்டிலேயே விட்டுவிட்டு மாமியாருடன் மட்டும் சென்றிருக்கிறார். மருத்துவர் சுரங்கப்பாதையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மழைநீரில் மூழ்கிய லாரி
மழைநீரில் மூழ்கிய லாரி

இதுபற்றி துடையூர் பகுதி மக்களிடம் பேசினோம். ``துடையூர் மற்றும் அதைச் சுத்தியிருக்குற 30-க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் இந்தச் சுரங்கப்பாதையைக் கடந்து போறோம். நூற்றுக்கணக்கான விவசாயிகள் நெல் மூட்டைகள இந்தப் பகுதி வழியாதான் கொண்டு போறோம். 20-க்கும் மேற்பட்ட கிரஷ்ஷர்கள் இருக்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் செல்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 2018-ல் ரூ. 3.50 கோடி செலவு செஞ்சு இந்த சுரங்கப்பாதையை ஏற்படுத்தினாங்க. அப்பவே இந்த சுரங்கப்பாதை வேண்டாம்னு சொல்லி நாங்க எதிர்ப்பு தெரிவிச்சோம். இப்பவும் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிக்கிட்டு இருக்கோம். மேம்பாலம் கட்டச் சொல்லி கோரிக்கை வச்சோம். ஆனா நடக்கல. சுரங்கப்பாதையைக் கட்டிய பிறகு இதுபோன்ற விபத்து நடக்காமல் இருக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை.

மழைநீரில் மூழ்கிய கார்
மழைநீரில் மூழ்கிய கார்
புதுக்கோட்டை: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்! -அறுவை சிகிச்சையில் பலியான சோகம்

சுரங்கப்பாதையைச் சுற்றி விளக்கு வசதி இல்ல. தண்ணீரை வெளியேற்றும் மோட்டார் பழுதடைந்து வேலை செய்யாமக் கிடக்கு. இது பத்தி தெரியாமல் இந்த வழியாக வந்து, பல பேரின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர் பரிதாபமா உயிரிழந்திருக்கார். சம்பவத்தன்று லாரி ஒண்ணும் இங்க மூழுகியிருக்கு. சுரங்கப்பாதையை நிரந்தரமா மூடணும், பழைய ரயில்வே கேட் பாதையில் சாலை அமைத்துப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.

தொடர்ந்து, பொதுமக்களைக் காவு வாங்கும் இந்த சுரங்கப்பாதையை உடனே மூட வேண்டும், பழைய ரயில்வே கேட் பகுதியில் புதிய தார்சாலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு