Published:Updated:

பசுவுக்கு கிராம மக்களுடன் சேர்ந்து வளைகாப்பு; விவசாயி சொல்லும் நெகிழ்ச்சி காரணம்!

பசுவுக்கு கிராம மக்கள் நடத்திய வளைகாப்பு
பசுவுக்கு கிராம மக்கள் நடத்திய வளைகாப்பு

``வீட்டுல இருக்கிற எல்லா பசுவும் எங்க வீட்டுப் பிள்ளைகளாக இருந்தாலும் ஐஸ்வர்யாவுக்கு கூடுதல் செல்லம் கொடுத்தோம். அதனாலயோ என்னவோ என் பொண்ணுக்கு மாதிரி எல்லா சடங்குகளையும் ஐஸ்வர்யாவுக்கு செய்யணும்னு தோணுச்சு".

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மூங்கிதாப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் தனது வீட்டில் 4-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். தனது பசுமாடுகளுக்கு வீட்டுப் பிள்ளை போல பெயர் வைத்திருக்கிறார். இதில், இவர் வீட்டில் வளர்த்து வரும் ஐஸ்வர்யா என்ற பசுவை, குடும்பத்தினர் குழந்தை போல் வளர்த்து வந்த நிலையில், அந்தப் பசு தற்போது 9 மாத சினையாக உள்ளது.

இந்நிலையில்தான், தங்கள் வீட்டுப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல, சினையாக உள்ள தன் பசுமாட்டுக்கும் உறவினர்கள், கிராம மக்களை அழைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அசத்தியிருக்கிறார் அண்ணாமலை. பெண்கள் பசுவின் நெற்றியில், கன்னத்தில், சந்தனம் குங்குமம் பூசி, இரண்டு கொம்புகளிலும் வளையல்களை அணிவித்தனர். தொடர்ந்து அனைவருக்கும் வளைகாப்பு சாப்பாடு போடப்பட்டது.

வளைகாப்பு நிகழ்ச்சி
வளைகாப்பு நிகழ்ச்சி

இதுபற்றி அண்ணாமலையிடம் பேசினோம்.

``எங்களுக்கு மாடுகள் மேல ரொம்ப உசுரு. வீட்டுல ஏதாவது ஒரு பெரிய விசேஷம்னா அப்ப பசு மாடோ, கன்னுக்குட்டியோ வாங்கி வந்திடுவோம். என்னோட கல்யாணத்தின்போது ஒரு கன்னுக்குட்டியை வாங்கி வந்தோம். 10 வருஷம் ஆச்சு.

அது பெரிய பசுமாடாகி, மொதல்ல 4 காளைக் கன்றுகளை ஈன்றுச்சு. ரொம்ப வருஷம் பசுங்கன்று போடும்னு காத்திருந்தோம். 5-வதாகத்தான் ஒரு பசுக்கன்றை ஈன்றுச்சு. 5-வதாகப் போட்ட அந்தப் பசுங்கன்றுக்குட்டிக்கு ஐஸ்வர்யான்னு பேரு வச்சு, அதை எங்க வீட்டுல உள்ள பொம்பள பிள்ளையாகத்தான் வளர்த்துக்கிட்டு வந்தோம்.

பசுவுக்கு கிராம மக்கள் நடத்திய வளைகாப்பு
பசுவுக்கு கிராம மக்கள் நடத்திய வளைகாப்பு

வீட்டுல இருக்கிற எல்லா பசுவும் எங்க வீட்டுப் பிள்ளைகளாக இருந்தாலும் ஐஸ்வர்யாவுக்கு கூடுதல் செல்லம் கொடுத்தோம். அதனாலயோ என்னவோ என் பொண்ணுக்கு மாதிரி எல்லா சடங்குகளையும் ஐஸ்வர்யாவுக்கு செய்யணும்னு தோணுச்சு. இப்போ ஐஸ்வர்யா 9 மாச சினையா இருக்கு. எங்க குடும்பத்துல எல்லார்கிட்டயும் பேசி ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு நடத்த முடிவு செஞ்சோம். திட்டமிட்ட மாதிரியே கிராம மக்கள் எல்லாரையும் கூப்பிட்டு வளைகாப்பு நடத்தியிருக்கோம். நம்மை வாழவெச்சிக்கிட்டு இருக்கும் பசுமாட்டுக்கு நாம மரியாதை செலுத்துறது ரொம்ப முக்கியம். நம்ம முன்னோர்கள் இதுமாதிரி பசுமாட்டுக்கு எல்லா சடங்குகளையும் செஞ்சிருக்காங்க. இனி நாங்களும் எல்லா பசுக்களுக்கும் செய்வோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு