Published:Updated:

`திரும்பவும் எல்லாருக்கும் சேவை செய்யணும்!' - திடீரென இருண்ட வாழ்க்கை; மீள போராடும் செவிலியர்

பரம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் வீதிகளில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்த செந்தாமரைச் செல்வி, தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பொய்யாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைச் செல்வி (27). இதே மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை அருகே பரம்பூர் கிராமத்தில் கிராம சுகாதாரச் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். கொரோனா காலகட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர முடியாத கர்ப்பிணிகளின் வீட்டிற்கே சென்று உடல் பரிசோதனை செய்வது, முதியவர்களுக்கு உடல் பரிசோதனை செய்வது, குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசிகளைப் போடுவது எனக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரையிலும் பரம்பூரைச் சுற்றி இவரின் பணிகள் தொடர்ந்தன. இந்த நிலையில்தான் திடீரென ஒரு நாள் இவரின் இரண்டு கால்களும் செயலிழந்து போயின. கால்களை அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்ற நிலையில் தற்போது அவை அகற்றப்பட்டுள்ளன.

பரம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் வீதிகளில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தவர், தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். `செயற்கைக் கால்கள் பொருத்தி எப்படியாவது இயல்பு நிலைக்குத் திரும்பிட மாட்டோமா?’ என்கிற எதிர்பார்ப்புடன் நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.

செந்தாமரைச் செல்வி
செந்தாமரைச் செல்வி
Covid Questions: கொரோனாவிலிருந்து மீண்டுள்ளேன்; என் ஆரோக்கியத்தை மீட்க என்ன டயட் பின்பற்றலாம்?

செந்தாமரைச் செல்வியிடம் பேசினோம். ``நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் பொய்யாமணி கிராமம்தான். அப்பாவுக்கு ரெண்டு தாரம். பெரியம்மாவுக்கு (முதல் தாரம்) குழந்தை இல்லை. அதனால ரெண்டாவது தாரமா வாக்கப்பட்டவங்கதான் எங்கம்மா. அவங்களுக்கு என்னோட சேர்த்து மொத்தம் மூணு பொம்பளைப் பிள்ளைங்க. நான்தான் மூத்தவ. நான் 7-வது படிக்கும்போதே அப்பா இறந்து போயிட்டாரு. அப்பா இறந்த பிறகு அம்மா மனநலம் பாதிக்கப்பட்டுப் போயிட்டாங்க. பெரியம்மாதான் அம்மா மாதிரி எங்களை பார்த்துக்கிட்டாங்க. இப்பவும் பார்த்துக்கிறாங்க. ரொம்ப கஷ்டப்பட்டாலும் எங்களையெல்லாம் படிக்கவும் வெச்சாங்க.

ஏ.என்.எம் (ANM - Auxiliary Nurse & Midwife) நர்சிங் கோர்ஸ் படிச்சு முடிச்ச எனக்கு, குடும்பத்தைக் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்துச்சு. எப்படியாவது கவர்ன்மென்ட் வேலைக்குப் போயிடணும்னு இருந்தேன். ரொம்ப காலமா முயற்சி செஞ்சு, அரசு வேலையும் கிடைச்சிருச்சு.

2017-ல் பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏரியா நர்ஸா பணிக்குச் சேர்ந்தேன். 2018-ல கல்யாணம் ஆகி, வாழ்க்கை ரொம்ப நல்லா போயிக்கிட்டு இருந்துச்சு'' என்பவருக்கு, விதியின் விளையாட்டு அப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது.

``கல்யாணமான சில மாதங்கள்லயே வாழ்க்கையில ஒரு பூகம்பம்… 2018 டிசம்பர்ல ஒரு விபத்துல சிக்கிட்டேன். மூக்குக்குக் கீழ தாடையெல்லாம் கிழிஞ்சு போய் தொங்குச்சு. தனியார் மருத்துவமனையில சேர்த்தாங்க. அறுவை சிகிச்சை செஞ்சு ரெண்டு கன்னத்திலும் பிளேட் வச்சாங்க. கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் வரையிலும் செலவாச்சு. லோன் போட்டுதான் அந்தப் பணத்தைக் கட்டினேன். ஒவ்வொரு மாசமும் சம்பளத்துல பாதிப் பணம் அதுக்குப் போயிடும். கஷ்டத்தோட கஷ்டமா 2019-ல என்னோட முதல் தங்கச்சிக்கு, எல்லா பொறுப்புகளையும் ஏற்று, கல்யாணம் முடிச்சு வச்சேன். அதுல பெரிய மன நிம்மதி இருந்துச்சு.

செந்தாமரைச் செல்வி
செந்தாமரைச் செல்வி

கல்யாணமாகி மூணு வருஷமாகுது. எனக்குக் குழந்தை இல்ல. ரெண்டு வருஷமா அதுக்காக தொடர்ச்சியா டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இருந்தேன். 2021 மார்ச் 27-ம் தேதி, எனக்கு கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டுச்சு. மூணு வருஷத்துக்கு அப்புறம் நான் கர்ப்பமானதால வீட்டிலயும் எல்லாருக்கும் அளவு கடந்த சந்தோஷம்'' என்பவருக்கு அடுத்த நாளே மீண்டும் விளையாட்டு காட்டியிருக்கிறது விதி.

``அடுத்த நாள், நிலைமை அப்படியே மாறிப்போச்சு. திடீர்னு என்னோட ரெண்டு கால்களும் மரமரத்துப் போச்சு. படுக்கையை விட்டுத்தான் கீழே இறங்குனேன்... உணர்ச்சியே இல்லாம கீழே விழுந்து மயங்கிட்டேன். விராலிமலை ஜி.ஹெச்க்கு அழைச்சிக்கிட்டுப் போனா, அங்க பாக்கமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. திருச்சி ஜி.ஹெச்க்குப் போனா, அங்கயும் பாக்க முடியாதுன்னு சொல்லி மதுரை ஜி.ஹெச்சுக்கு அனுப்பிட்டாங்க. அங்க போய் பார்த்தப்போதான், `கால்ல உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கு. இதயத்துல அட்டாக் வர்ற மாதிரி, கால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கு'ன்னு சொல்லி அதிர்ச்சி கொடுத்தாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கால் அடைப்பை சரி செஞ்சிட்டாங்க. கால் முட்டிக்குக் கீழே கிழிச்சு பரிசோதனை பண்ணினாங்க. ஒரு கட்டத்துல, ரெண்டு காலையும் எடுக்கணும், இல்லனா உயிருக்கே ஆபத்தாகிடும்னு சொன்னாங்க. வேற வழியில்லாம காலை எடுக்க சம்மதிச்சேன். கிட்டத்தட்ட ஒரு மாசம் மருத்துவமனையிலேயே இருந்துட்டு, வீட்டுக்கு வந்தேன். நல்லா ஓடி, ஆடி திரிஞ்சிட்டு திடீர்னு கால் இல்லாம போனதை இன்னைக்கு வரைக்கும் என்னால ஏத்துக்க முடியலை'' என்று கலங்கும் செந்தாமரைச்செல்விக்கு, இப்போது தினசரி வாழ்க்கைக்கே ஓர் ஆள் துணை தேவைப்படுகிறது.

``பாத்ரூம் போறதுல இருந்து எல்லாத்துக்கும் ரொம்பவே சிரமப்படுறேன். பெரியம்மாதான் எல்லாமுமா இருக்காங்க. மதுரை ஆஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிட்ட கணவர், இப்ப எங்க இருக்காருன்னே தெரியல.

கால் இல்லாம மத்தவங்களுக்கு சிரமத்தைக் கொடுத்துக்கிட்டு இனி ஏன் நாம வாழணும்ங்கிற நெனப்பு, தனிமையில இருக்கும்போது தோணும். அப்பதான், என்னோட வேலைபார்க்கிற தோழி ஒருத்தவங்க வந்து, `செயற்கை கால்களை வெச்சுக்கிட்டு பழையபடி மீண்டு வரலாம்'னு ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்தாங்க.

செந்தாமரைச் செல்வி
செந்தாமரைச் செல்வி
Covid Questions: கோவிட் தொற்றுக்குப் பிறகு நல்ல வாசனைகூட துர்நாற்றமாகத் தெரிகிறதே; ஏன்?

எலும்பு டாக்டரைப் பார்த்தப்ப, செயற்கை கால் செஞ்சு மாட்ட 4 லட்ச ரூபாய் வரையிலும் செலவாகும்னு சொன்னாரு. எனக்குத் தூக்கிவாரிப் போட்டுடுச்சு. அவ்வளவு பணத்துக்கு எங்க போறது? கிட்டத்தட்ட 4 மாசமா சம்பளம் வேற வரலை. ஏற்கெனவே வாங்கிய கடனும் கட்டலை. என்ன செய்யுறதுனே தெரியாம இருந்தப்பதான், எங்க பி.ஹெச் டாக்டர்ஸ், ஸ்டாஃப், வைத்தியம் பார்க்க வந்த மக்கள்னு பலரும் எனக்கு ஆறுதல் சொன்னதோட, சிலர் பண உதவியும் செய்தாங்க. கிட்டத்தட்ட 85,000 ரூபாய் வரையிலும் பணம் கிடைச்சிருக்கு. தொடர்ந்து, சிலர் என்னைப் பத்தி கேள்விப்பட்டு உதவிட்டு வர்றாங்க. என்னைக்கும் அவங்கள எல்லாம் மறக்கமாட்டேன்'' என்று மேற்கொண்டு தேவைப்படும் பணத்துக்காகக் காத்திருக்கும் சூழலிலும், தன்னுடைய செவிலியர் குணம் கொஞ்சமும் மாறாமல், தன் அனுபவத்தையே மற்றவர்களுக்கு அறிவுரையாகவும் சொல்கிறார்-

``குழந்தை இல்லாததற்காக நான் எடுத்துக்கொண்ட ஹார்மோன் ஊசி, மாத்திரைகளால்கூட இப்படி ரெண்டு கால்களும் பாதிக்கபட்டிருக்கலாம்னு நண்பர்கள் சிலர் சொன்னாங்க. என்னுடைய அனுபவத்துல சொல்றேன்... திருமணமான சில ஆண்டுகளுக்குள்ளேயே குழந்தைப் பேற்றுக்கான சிகிச்சைகளை எடுக்க ஆரம்பிக்காம தவிர்க்கிறது நல்லது. காலப்போக்குல அது தானாவே நடக்கலாம். நம்ம பாட்டிங்க, அம்மாங்க பலருக்கும் அப்படித்தான் நடந்திருக்கு” என்று சொன்ன செந்தாமரைச்செல்வி, நிறைவாக சொன்னது நம் நெஞ்சில் நிலைகுத்தி நிற்கிறது, அவரிடம் விடைபெற்று வந்தபின்பும்.

அது,

``இப்போ என் மனசுல இருக்குற வேண்டுதல் எல்லாம்... செயற்கை கால் வெச்சி நடந்தாவது பழையபடி எல்லாருக்கும் ஒரு நர்ஸா சேவை செய்ய வாய்ப்புக் கிடைச்சா… அதுவே போதும்கிறதுதான்"

Note

செந்தாமரைச் செல்விக்கு உதவ விரும்பும் வாசகர்கள் Help@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொண்டு அவருக்கு செய்ய விரும்பும் உதவிகள் குறித்து தெரிவிக்கலாம். செந்தாமரைச் செல்வியின் உரிய விவரங்கள் உடனடியாக தரப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு