Published:Updated:

தொழிலாளியின் கண்ணும் மூக்கும் சேருமிடத்தில் சிக்கிய இரும்புத்துகள்; அகற்றிய அரசு மருத்துவர்கள்!

சிகிச்சை செய்த அரசு மருத்துவர்கள்
சிகிச்சை செய்த அரசு மருத்துவர்கள்

வலது கண்ணும், மூக்கும் சேரும் இடத்தில் இரும்புத் துகள்கள் புதைந்து நோயாளிக்குத் தீராத தலைவலியைக் கொடுத்திருக்கிறது. இது தெரியாமலேயே தலைவலிக்கு மருந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், கும்முப்பட்டி முள்ளூரைச் சேர்ந்தவர் முருகேசன் (36). இவர் நீண்ட நாள்களாகத் தனக்குத் தலைவலி உள்ளதாகக் கூறி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காது, மூக்கு தொண்டை பிரிவில் சிகிச்சை பெற வந்துள்ளார்.

அப்போது, காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், எந்தவித நோயும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதையடுத்து, மருத்துவர் பரிந்துரையின் பேரில், சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், வலது கண்ணும், மூக்கும் சேரும் இடத்தில் இரும்பு துகள் இருப்பது தெரியவந்தது.

சி.டி.ஸ்கேன்
சி.டி.ஸ்கேன்
புதுக்கோட்டை: பிறந்த உடனே பச்சிளங்குழந்தைக்கு குடல் அறுவைசிகிச்சை... அரசு மருத்துவர்கள் அசத்தல்!

இதையடுத்து, காது மூக்கு தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் ராஜா கணேஷ் தலைமையில் மருத்துவர்கள் ஆறுமுகம், அருணகிரி, ராயப்பன்குமார் அடங்கிய அறுவை சிகிச்சை குழுவினர் மற்றும் செந்தில்குமார், கணேசன், மதிநிறைசெல்வி அடங்கிய மயக்க மருந்து மருத்துவர்கள் குழு, முருகேசனுக்கு முழு மயக்கம் கொடுத்து மூக்கு வழியாக எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் கண்ணுக்குள் உள்ள கொழுப்பில் புதைந்திருந்த இரும்புத் துகளை மைக்ரோடுபிரைடர்(microdebrider) கருவிகள் மூலம் பார்வைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் 4 மணி நேரம் போராடி மிகத் துல்லியமாக எடுத்தனர். தற்போது முருகேசன் நலமுடன் உள்ளார்.

மருத்துவக் கல்லூரி டீன் பூபதி இதுகுறித்துக் கூறும்போது, ``நீண்ட நாள்களாகவே நோயாளிக்கு தலைவலிப் பிரச்னை இருந்திருக்கிறது. சி.டி.ஸ்கேனில் இரும்புத் துகள் இருப்பது தெரியவந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு நோயாளி மலேசியாவில் வேலை பார்த்தபோது கியர் பாக்ஸ் தெறித்து சில இரும்புத் துகள்கள் வலது கண்ணின் வெளிப் பாகத்தில் புதைந்துள்ளன. அதற்கு அங்கு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறினார். ஆனால், அங்கு அவர் சி.டி.ஸ்கேன் எடுக்காமல் விட்டுவிட்டார். வலது கண்ணும், மூக்கும் சேரும் இடத்தில் இரும்புத் துகள்கள் புதைந்து நோயாளிக்குத் தீராத தலைவலியைக் கொடுத்திருக்கிறது. இது தெரியாமலேயே தலைவலிக்கு மருந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்.

சிகிச்சை செய்த அரசு மருத்துவர்கள்
சிகிச்சை செய்த அரசு மருத்துவர்கள்
சிறுமி தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்... அறுவைசிகிச்சையின்றி அகற்றிய அரசு மருத்துவர்கள்!

இந்நிலையில்தான் ஒரு வருடத்துக்கும் மேலாகத் தலைவலியால் சிரமப்பட்டுக்கொண்டிருந்த நோயாளியின் தலைவலியை நம் மருத்துவக் குழுவினர் நிரந்தரமாகப் போக்கியுள்ளனர். பார்வையிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. பார்வை நன்றாக உள்ளதாகவும் நோயாளி தெரிவித்துள்ளார். அரிய அறுவை சிகிச்சை செய்த காது, மூக்கு, தொண்டை குழுவின் பணி பாராட்டுக்குரியது. இந்த சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டுமென்றால், சுமார் ரூ.1.5 லட்சம் வரையிலும் செலவாகும். ஆனால், நம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலுமாக இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு