புதுக்கோட்டை: ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்... காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

குழந்தைகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இடதுபுறம் உள்ள நுரையீரல் பகுதியில் (உதரவிதான குறைபாட்டால்) குடல் ஏற்றம் ஏற்பட்டு நுரையீரல் சுருங்கியும், இதயம் வலதுபுறமாகத் தள்ளப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் சதீஷ்-சுகப்பிரியா, முருகேசன்-ரேவதி தம்பதிகள். சுகப்பிரியா, ரேவதிக்கு கர்ப்பகால ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில், இரண்டு பேரின் சிசுவுக்குமே நுரையீரல் பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தலைமை மகப்பேறு மருத்துவர் அமுதா மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர் ஆகியோர் இரண்டு பெண்களின் கருவில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டின் தீவிரம் குறித்து ஆராய்ந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

இதற்கிடையே, இரண்டு பெண்களுக்கும் குழந்தை பிறந்தவுடன் குழந்தைகளுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து இரண்டு குழந்தைகளும் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இடதுபுறம் உள்ள நுரையீரல் பகுதியில் (உதரவிதான குறைபாட்டினால்) குடல் ஏற்றம் ஏற்பட்டு நுரையீரல் சுருங்கியும், இதயம் வலது புறமாகத் தள்ளப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, குழந்தைகள் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மயக்கவியல் மருத்துவர்கள் அறிவரசன், சுபாஷினி ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழு, குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்தனர்.
தொடர்ந்து இடது புற உதரவிதான குறைபாடு மற்றும் குடல் ஏற்றத்தையும் சரி செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின் வென்டிலேட்டர் மூலம் குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. மூச்சுத்திணறல் சீரானதையடுத்து படிப்படியாக செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது. இரண்டு குழந்தைகளும் தற்போது நலமுடன் உள்ளனர்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி அவர்கள் இது குறித்துக் கூறும்போது, ''சிக்கலான இந்த அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சையில் மருத்துவர்களின் பணி பாராட்டுக்குரியது. தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகக் கூடிய இந்த சிகிச்சை அரசு ராணியார் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்றார்.