Election bannerElection banner
Published:Updated:

`சவுதி ஜெயில்ல இருக்குற மகனை மீட்டுக் கொடுங்க!' - ஒரு தாயின் கண்ணீர் மனு

தாய் காந்திமதி
தாய் காந்திமதி ( ம.அரவிந்த் )

``பொழைக்கப் போனவனுக்கு வந்த சோதனையை நெனச்சு கண்ணீர் விடாத நாளில்ல. ஜெயிலுக்குப் போய் ஒரு வருஷம் ஆகிடுச்சு, மீட்க நானும் போராடி வர்றேன்.''

பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவரின் ஒரே மகன், சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். அவர் வேலைபார்த்த கம்பெனியில், அந்த நாட்டு லைசென்ஸ் இல்லாமல் அவரை லாரியை ஓட்ட வைத்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அவர் ஓர் ஆண்டாக சவுதி சிறையில் இருக்கிறார். ``எம் பையனை மீட்டுக் கொடுக்கணும்...'' என்று அவர் தாய் கண்ணீர் மல்க தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு அளித்தது சோகத்தை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காந்திமதி. 100 நாள் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் கணவர் சிங்காரவேலு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரின் மூத்த மகனும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அடுத்தடுத்த தொடர் துயரங்களை சந்தித்தது காந்திமதி குடும்பம். மேலும் போதுமான வருமானம் இல்லாமல் போனதால் வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டார்.

மகன் தினேஷ்
மகன் தினேஷ்

கணவர், மூத்த மகன் எனக் குடும்பத்துக்குத் தூணாக இருந்த இருவரும் இறந்துவிட்ட நிலையில் குடும்ப பாரத்தையும் அம்மாவையும் காந்திமதியின் இளைய மகன் தினேஷ் (25) சுமக்கத் தொடங்கினார். வறுமையைப் போக்குவதற்காகத் தனது கல்லுாரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, டிரைவிங் ஸ்கூல் ஒன்றில் பயிற்சியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அதில் வந்த வருமானம் பசியாற்ற மட்டுமே பயன்பட்டது. மேற்கொண்டு வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இல்லை.

காந்திமதியிடம், `அம்மா நான் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்கிறேன். அப்பதான் நம்ம கஷ்டம் தீரும். கடைசி காலத்தில் உன்ன நல்லா பார்த்துக்க முடியும்' எனக் கூறிய தினேஷ் அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஆக்ஸட் 3-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். சவுதி அரேபியாவுக்கான டிரைவிங் லைசென்ஸ் இல்லாத நிலையில், தினேஷ் வேலைபார்த்து வந்த இடத்தில் அந்த நிர்வாகம் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல், ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரியை தினேஷை ஓட்டச் சொல்லியுள்ளது.

அப்போது தினேஷ் தன்னிடம் லைசென்ஸ் இல்லை என நிர்வாகத்திடம் கூற, 'பரவாயில்ல பார்த்துக்கலாம், விரைவில் லைசென்ஸ் எடுக்க ஏற்பாடு செய்யலாம்' என்று கூறி, லாரி ஓட்டும் பணியைத் தொடரச் செய்துள்ளனர். இதையடுத்து, 2019 அக்டோபர் 26-ம் தேதி நள்ளிரவு தினேஷ் லாரியை ஓட்டிச் சென்றபோது, எதிரே வந்த காரின் டயர் வெடித்து, தினேஷ் ஓட்டிச் சென்ற லாரி மீது மோதியதில், அரேபியர் ஒருவர் இறந்துள்ளார். விபத்தைத் தொடர்ந்து சவுதி அரேபிய போலீஸ் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கலெக்டரிடம் மனு அளித்த காந்திமதி
கலெக்டரிடம் மனு அளித்த காந்திமதி

இதையடுத்து மகனை மீட்டுத் தர வலியுறுத்தி கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி காந்திமதி கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். மேலும், தஞ்சாவூர் தொகுதி எம்.பி பழனிமாணிக்கம், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரிடமும் மனுக்களை அளித்துவிட்டு, தன் மகனுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மகனின் வருகையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், நாள்கள்தான் ஓடின. இதுநாள் வரை அவர் மகனை அழைத்து வருவதற்கான எந்த நடவடிக்கையும் அரசால் முன்னெடுக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த காந்திமதி, கலெக்டர் கோவிந்தராவிடம் தன் மகனை மீட்டுத் தரக் கூறி கண்ணீர் மல்க மனு அளித்தார். இதுகுறித்து காந்திமதியிடம் பேசினோம்.

``எனக்குனு இருந்த ஒரே ஜீவன் அவன்தான். குடும்பக் கஷ்டத்தை நினைச்சு சவுதிக்குப் போனான். அங்க அவன் வேலைபார்த்த இடத்துல லாரியை ஓட்டச் சொல்லியிருக்காங்க. அவனோட போதாத காலம், இவன் லாரி மேல கார் வந்து மோதின விபத்துல ஒரு உசுரு போயிடுச்சு.

லைசென்ஸ் இல்லாம லாரியை ஓட்ட வற்புறுத்தி நிறுவனம் செய்த தவறால என் மகன் ஒரு வருஷமா ஜெயில்ல இருக்கான். இறந்தவரோட மனைவி இந்திய மதிப்புல 90 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டாங்க. தொடர் விசாரணையில, என் மகனை லைசென்ஸ் இல்லாம லாரியை ஓட்ட வெச்சதுக்காக அவன் வேலைபார்த்த நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்புல 29 லட்சமும், என் மகன் 29 லட்சமும் அபராத தொகையை செலுத்தணும்னு நீதிமன்றம் தீர்ப்பளிச்சது.

தாய் காந்திமதி
தாய் காந்திமதி

அபராதத் தொகையை செலுத்தினா என் மகனை விடுதலை செய்வதாவும் அறிவிச்சது. அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்கே போவோம்? பொழைக்கப் போனவனுக்கு வந்த சோதனையை நெனச்சு கண்ணீர் விடாத நாளில்ல. அவன் ஜெயிலுக்குப் போய் ஒரு வருஷம் ஆகிடுச்சு. அவனை மீட்க நானும் போராடி வர்றேன். ஆனா, மகன் வேலைபார்த்த நிறுவனம்கிட்ட இது தொடர்பா கேட்டா எந்தப் பதிலும் இல்ல.

என் மகனுக்காகத்தான் என் உசுரை கையில புடிச்சுக்கிட்டு இருக்கேன். அவன் வந்துட்டா போதும்... அரை வயிறு கஞ்சி குடிச்சாலும் பரவாயில்லைன்னு இருக்குற சொச்ச காலத்த நிம்மதியா வாழ்ந்துடுவேன். அரசு உடனடியா நடவடிக்கை எடுத்து என் மகனை மீட்டுக் கொடுக்கணும்னு வேண்டிக்கிறேன்!" என அடக்க முடியாமல் கொட்டிய கண்ணீரை துடைத்தபடி தெரிவித்தார் காந்திமதி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு