Published:Updated:

``கிராமம்தோறும் `கிராம கலெக்டர்' இருக்கணும்!" - அரசுக்கு பரிந்துரைத்த மாணவி; பாராட்டிய நீதிபதிகள்!

கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்த பள்ளி மாணவி
கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்த பள்ளி மாணவி

``ஒரு கிராமத்துல வி.ஏ.ஓ, கிராமத் தலைவர் இருக்காங்க. எல்லா விவரமும் அவங்களுக்குத் தெரியும். ஆனா, அவங்க நடவடிக்கையும் எடுப்பதில்ல. நடவடிக்கை எடுத்திருந்தா, ஏன் கலெக்டர் ஆபீஸூக்கு மக்கள் அலையணும்?''

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்விராயன்விடுதியைச் சேர்ந்தவர் 10-ம் படிக்கும் மாணவி கௌரி. சிறுவயதிலேயே சமூக அக்கறைகொண்ட கௌரி, ஒரு கிராமத்தின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து `தேசிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம்' என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார். இதில், ஒவ்வொரு கிராமத்துக்கும் உரிய பாரம்பர்யம், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

தன்னுடைய பூர்வீக கிராமமான சின்ன அம்மங்குடி என்ற கிராமத்தை ஆய்வுக்குட்படுத்திய கௌரி, அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், குடிநீர், நீர்நிலைகள் மேம்பாடு குறித்தும் அதில் விவரித்துள்ளார். குறிப்பாக, கிராமத்தின் அனைத்து நிகழ்வுகளையும் கணினியில் பதிவு செய்யும் கிராமப் புள்ளி விவர பதிவேடு மற்றும் அதைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும் அனைத்துக் கிராமங்களிலும் கிராம ஆட்சியர் (கிராம கலெக்டர்) நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்.

பள்ளி மாணவி தயாரித்த கிராம வளர்ச்சித் திட்டம்
பள்ளி மாணவி தயாரித்த கிராம வளர்ச்சித் திட்டம்

கிராமங்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் தனது திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே அமல்படுத்துவதுடன், கிராமப்புற மேம்பாடு ஆய்வறிக்கை நூலை 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முன்னாள் முதல்வர், உயர் அதிகாரிகள் பலருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

எங்கிருந்தும் பதில் கடிதம் கிடைக்காத நிலையில், இதுகுறித்த விவரங்களுடன் இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கோரி கௌரியின் தந்தை லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திட்டங்கள் அடங்கிய நூலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இந்தத் திட்டத்தைத் தயாரித்த கௌரியை நீதிபதிகள் வெகுவாகப் பாராட்டினர். சில தினங்களில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கச் சொல்லியிருப்பதுடன், இன்னும் சில தகவல்களைக் கேட்டிருக்கின்றனர்.

நீதிபதிகள் பாராட்டிய உற்சாகத்திலிருந்த கௌரியிடம் பேசினோம்.

``அப்பா உடன் கலெக்டர் ஆபீஸ், ஆர்.டி.ஓ ஆபீஸ்னு பல ஆபீஸ்களுக்குப் பல தடவை போயிருக்கேன். அப்பயெல்லாம், ஏதாவது ஒரு பிரச்னையோட எங்க ஊர் கிராம மக்கள் மனு கொடுக்கவே கால்கடுக்க நின்னுக்கிட்டு இருப்பாங்க. மாசக்கணக்குல அலைஞ்சும் இன்னும் தீர்வு கிடைக்கலைன்னு அப்பாகிட்ட சொல்வாங்க. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கும். ஒரு கிராமத்துல வி.ஏ.ஓ, கிராமத் தலைவர் இருக்காங்க. எல்லா விவரமும் அவங்களுக்குத் தெரியும். ஆனா, அவங்ககிட்ட மனு கொடுத்தா சரியான பதில் கிடைக்கிறதில்ல. நடவடிக்கையும் எடுப்பதில்ல. நடவடிக்கை எடுத்திருந்தா, ஏன் கலெக்டர் ஆபீஸிக்கு மக்கள் அலையணும்? அதற்காகத்தான் கிராமம்தோறும் மாவட்ட கலெக்டர் போல, கிராம கலெக்டர் என்ற ஒரு பதவியை உருவாக்கணும்.

கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்த பள்ளி மாணவி
கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்த பள்ளி மாணவி

கிராம கலெக்டருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் நன்கு எழுதப், படிக்கத் தெரிஞ்சிருக்கணும் என்பது மட்டும் தகுதியா இருந்தால் போதுமானது. தேர்வுகள் நடத்தி அவர்களைத் தேர்ந்தெடுக்கணும். அவர்களைப் பொதுமக்கள் எளிதில் அணுகி தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும். தவறு செய்யும் அதிகாரிகளின் பணியிடை நீக்கத்துக்கு பரிந்துரைக்கும் உரிமை கிராம கலெக்டருக்கு இருக்கணும். அரசின் திட்டங்களை நான் மாற்றச் சொல்லலை. அதே நேரத்துல திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்க வழிவகை செய்யணும்.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புனு மூணுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கேன். கிராமத்தில் உள்ள ஒரு ஏரியைச் சீரமைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தா, பலருக்கும் வேலைவாய்ப்பு, கிராம நிர்வாகத்துக்கு நீர் மேலாண்மை மூலம் வருவாய், மின்சார வருவாய், கால்நடை வருவாய், விவசாய வருவாய்னு கிடைக்கும். ஆனா, எதுவும் சீரமைக்கப்படுறதில்ல. அரசோ தனியாரோ, கிராமங்களிலேயே தரமான கல்வி கொடுக்கணும். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனைகளைக் கிராமத்தில் அமைக்கணும். மின்சாரத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில, சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனங்களை அரசே குறைந்த விலையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கணும்.

பள்ளி மாணவி தயாரித்த கிராம வளர்ச்சித் திட்டம்
பள்ளி மாணவி தயாரித்த கிராம வளர்ச்சித் திட்டம்

இப்படி, கிராமங்களிலேயே பல்வேறு வசதிகளைக் கொண்டு வரும்பட்சத்தில் நகரமயமாதல் தவிர்க்கப்படும். நகரத்தில்தான் தரமான கல்வி, மருத்துவம் கிடைக்குது என்ற நிலை மாறும். நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதுதான் ஆய்வு மேற்கொண்டு, ஒரு வருஷத்துக்கும் மேலா இந்த நூலை உருவாக்கினேன். என்னைப் போன்ற மாணவிகள் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ள என்னுடைய ஆய்வு நூல் குறித்து 5-வது மற்றும் 8-வது பாடத்திட்டத்தில் விவரமா வெளிவரணும். கிராம வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். என் கிராமம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினா நாடு வளர்ச்சியடையும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு