Published:Updated:

`டெங்குவைக் கட்டுப்படுத்தணும்; தினமும் நிலவேம்புக் கசாயம்!' - டீக்கடை உரிமையாளரின் நேசக்கரம்

வாடிக்கையாளர்களுக்கு டீக்கடன் தள்ளுபடி, இலவச மரக்கன்றுகள் கொடுத்து அசத்திய புதுக்கோட்டை வம்பன் பகவான் டீக்கடை சிவக்குமார், தற்போது, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வரக் கூடாது என்பதற்காக டீக்கடையில் தினமும் நிலவேம்புக் கசாயம் வழங்கி நேசக்கரம் நீட்டியுள்ளார்.

டீ கடை
டீ கடை

புதுக்கோட்டை அருகே வம்பனில் இருக்கிறது பகவான் டீக்கடை. பகவான் டீக்கடை உரிமையாளர் சிவக்குமார் வாடிக்கையாளர்களுக்குச் சுவையான டீ போட்டுக்கொடுப்பது மட்டுமல்லாமல், தனது அதிரடித் திட்டங்களால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களைக் குஷிப்படுத்தி வருகிறார். கஜா புயலின்போது தனது டீக்கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டீக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து அசத்தினார்.

நிலவேம்பு
நிலவேம்பு

தொடர்ந்து, பொதுமக்களுக்கு செம்மரம், சந்தன மரக்கன்றுகள் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம், முதியோர்களுக்கு இலவச டீ, பன் வழங்கும் திட்டம் என இன்னும் ஏராளம் இருக்கிறது.

இந்த நிலையில்தான், தற்போது டெங்கு காய்ச்சல் நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே, மக்களுக்கு டெங்கு காய்ச்சல் நோய் வராமல் தடுக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த சிவக்குமார், தினமும் வாடிக்கையாளர்களுக்கு நிலவேம்புக் கசாயம் கொடுக்க திட்டமிட்டு தற்போது அதை செயல்படுத்தி வருகிறார்.

சிவக்குமாரிடம் பேசினோம். ``எப்பவும் ஒருநாள் தவறாமல் கடைக்கு வந்திரும் வாடிக்கையாளர் ஒருத்தரு, மூணு நாளு நாளா தொடர்ச்சியா கடைக்கு வரலை. என்ன ஏதுன்னு விசாரிச்சா, அவருக்கு டெங்கு காய்ச்சல் வந்து ஆஸ்பிட்டல்ல இருக்காரு. அதான், கடைக்கு வரலைன்னு சொன்னாங்க. எங்க பகுதியில இப்போ டெங்கு காய்ச்சல் தீவிரமா பரவிக்கிட்டு வருது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க நம்மால என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன். ஒரு யோசனையும் வரலை. அப்புறம்தான் நண்பர்கள்கிட்ட கேட்டேன். அவங்கதான் நிலவேம்புக் கசாயம் குடிச்சா டெங்கு காய்ச்சால் வராம தடுக்க முடியும்னு சொன்னாங்க. உடனே, பொதுமக்களுக்கு நிலவேம்புக் கசாயம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணேன்.

பொதுமக்கள்
பொதுமக்கள்

இப்போ தினமும் காலையில எல்லாருக்கும் இலவசமா கொடுத்திக்கிட்டு வரேன். கடைக்கு டீ குடிக்க வர்ற வாடிக்கையாளர்கள் நிலவேம்புக் கசாயம் குடிக்கிறதால, டீ சாப்பிடாம போயிருவாங்க. நிலவேம்பு கசாயத்தால காலை வருமானம் கொஞ்சம் குறைஞ்சு போச்சு. எனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலையில்லை. எல்லாரும் நோயில்லாம இருக்கணும் அதுதான் முக்கியம். டீ கேட்கும் வாடிக்கையாளர்கிட்ட எப்ப வேணாலும் குடிக்கலாம். ஆனா, இப்போ நோய் பரவிக்கிட்டு இருக்க சமயத்துல நோயைத் தடுக்க நிலவேம்புக் கசாயத்தை குடிங்கன்னு அன்பா சொல்லுவேன். மக்களும் ரொம்ப ஆர்வமாக வந்து கசாயத்தைக் குடிக்கிறாங்க.

ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு. நான் 10 நாள் வரைக்கும் தொடரலாம்னு நெனச்சேன். 10 நாளுக்கு அப்புறம் நண்பர்கள் சிலரும் தொடர்ந்து நடத்த உதவுறதாக சொல்லி இருக்காங்க. வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் எல்லாரும் எப்பவும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கணும். அதுக்காக என்னால முடிஞ்ச அளவுக்கு உதவிகளைச் செஞ்சுக்கிட்டு இருப்பேன்.

இதேபோல, எல்லா ஊர்லயும் அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்காம இளைஞர்கள் எல்லாரும் சேர்ந்து அவங்க ஊர் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்துக்கிட்டு வந்தால் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்னு நினைக்கிறேன்" என்கிறார் உறுதியுடன்.