Published:Updated:

``போலீஸார் ரொம்பவே கஷ்டப்படுறாங்க!" -புதுக்கோட்டை ஆசிரியர்களின் கொரோனா விழிப்புணர்வு

விழிப்புணர்வு செய்யும்  ஆசிரியர்கள்
விழிப்புணர்வு செய்யும் ஆசிரியர்கள்

புதுக்கோட்டையில் காவல்துறை, வருவாய்த்துறையுடன் சேர்ந்து 250 ஆசிரியர்கள் தன்னார்வலர்களாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளைச் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை தவிர்த்து யாரும் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நோயின் தீவிரத்தைக் கருதி அத்தியாவசியத் தேவைகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் இடங்களில் தனிமனித சமூக விலகலைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

விழிப்புணர்வு செய்யும்  ஆசிரியர்கள்
விழிப்புணர்வு செய்யும் ஆசிரியர்கள்

ஆனாலும், நோயின் தீவிரம் குறித்து தெரியாத பலரும் சமூக விலகலைச் சரியாக கடைப்பிடிப்பதில்லை. பொறுப்பற்ற சிலர் தேவையின்றி வீதிகளில் சுற்றுத் திரிவதைக் கட்டுப்படுத்துவதில் போலீஸார் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் சமூக விலகளின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களில் தன்னார்வலர்கள் இருந்தால், அவர்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பினார்.

இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் புதுக்கோட்டையில் இலுப்பூர், அறந்தாங்கி, புதுக்கோட்டைக் கல்வி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் இதுபற்றி தகவல் கொடுத்தார். இதையடுத்து, பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், இளம் செஞ்சிலுவைச் சங்கத்தினர், மாணவர் படையின் பொறுப்பாளர்கள் பலரும் தானாக முன்வந்து காவல்துறையினருடன் சேர்ந்து பணி செய்து வருகின்றனர்.

விழிப்புணர்வு செய்யும்  ஆசிரியர்கள்
விழிப்புணர்வு செய்யும் ஆசிரியர்கள்

புதுக்கோட்டையில் காவல்துறை, வருவாய்த்துறையுடன் சேர்ந்து 250 ஆசிரியர்கள் தன்னார்வலர்களாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளைச் செய்து வருகின்றனர். நியாய விலைக்கடை, காய்கறிக்கடைகளில் பொதுமக்களை வரிசையாக நிறுத்தி சமூக விலகலைக் கடைப்பிடிக்க வைப்பது, தணிக்கைச் சாவடிகளில் பாதுகாப்புப் பணி, சாலைகளில் சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.

இதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டபோது, ``சமூக விலகலைக் கடைப்பிடிக்க பொதுமக்கள்கிட்ட தொடர்ந்து வலியுறுத்திக்கிட்டு வர்றோம். பலரும் நம்ம சொல்ற அறிவுரைகளைப் புரிஞ்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பு முக்கியம்கிறதால, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்களோடுதான் பணி செய்கிறோம். இதுபோன்ற நேரத்தில் நமக்கென்ன என்று இருக்காமல், நமக்குத் தெரிந்த விழிப்புணர்வுகளைப் பொதுமக்களிடம் ஏற்படுத்துவது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.

விழிப்புணர்வு செய்யும்  ஆசிரியர்கள்
விழிப்புணர்வு செய்யும் ஆசிரியர்கள்

கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதுதான் நம்மோட நோக்கம். ஊரடங்கு நேரத்தில எல்லாரும் அவங்க, அவங்க பிள்ளைகளோட வீட்டில் இருக்கிறோம். ஆனா, மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு சாலையில் நின்னு, எதுக்காகப் போலீஸார் போராடுறாங்க, எதுக்கு வெளிய வரக்கூடாதுன்னு சொல்றாங்கன்னு பொதுமக்கள் சிந்திக்கணும். தேவையில்லாமல், வெளியே வருவதைத் தவிர்க்கணும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால், அதிகளவிலான கொரோனா பாதிப்பு ஏற்படாமல் கொரோனாவை அடியோடு அடித்து விரட்டிவிடலாம்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு