Published:Updated:

ஆசியாவின் பெரிய குதிரைச் சிலைக்கு தயாராகும் பிரமாண்ட மாலைகள்! புதுக்கோட்டைத் தொழிலாளர்கள் மும்முரம்

மாலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
மாலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்

"என் குறையைப் போக்கு ஐயனாரேன்னு என்ன குறையென்று அவரிடம் சொல்லிவிட்டு, குதிரைச் சிலைக்கு மாலை நேர்த்திக்கடன் செலுத்துகிறதா வேண்டிக்கிட்டு போனா போதும் கண்டிப்பா அந்தக் குறையை நிவர்த்தி பண்ணிக்கொடுத்திடுவாரு."

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் அருகே வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயில். மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயிலின் முன்பகுதியில் 35அடி உயரத்திலான குதிரைச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குதிரைச் சிலை என்றும் இது போற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் மாசிமகத் திருவிழா 2 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாகக் குதிரைச் சிலையின் கழுத்து வரைக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பூ மற்றும் வண்ணக் காகிதங்களால் ஆன மாலைகளைச் செலுத்துவார்கள்.

குதிரைச் சிலைக்குப் போடப்பட்ட மாலைகள்
குதிரைச் சிலைக்குப் போடப்பட்ட மாலைகள்

இதற்கென கீரமங்கலம், குளமங்கலம், வடகாடு, மாங்காடு, ஆவணத்தாங்கோட்டை போன்ற சில சுற்றுவட்டார கிராமங்களில் பிரத்தியேகமாகப் பிரமாண்ட மாலைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வருடம் மாசிமகத் திருவிழாவிற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், மாலை கட்டும் தொழிலாளர்கள் மும்முரமாக நேர்த்திக்கடன் மாலைகளைக் கட்டி வருகின்றனர். குளமங்கலம் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதுபற்றி மாலை கட்டும் தொழிலாளர்கள் கூறும்போது," அய்யனாரு ரொம்பவே சக்தி வாய்ந்த தெய்வம். என் குறையைப் போக்கு ஐயனாரேன்னு என்ன குறையென்று அவரிடம் சொல்லிவிட்டு, குதிரைச் சிலைக்கு மாலை நேர்த்திக்கடன் செலுத்துகிறதா வேண்டிக்கிட்டு போனா போதும் கண்டிப்பா அந்தக் குறையை நிவர்த்தி பண்ணிக்கொடுத்திடுவாரு.

அதனாலதான் நாளுக்கு நாள் ஐயனாருக்கு விழும் மாலைகளின் எண்ணிக்கை கூடிக்கிட்டு இருக்கு. நாங்களும் கூட மாலை நேர்த்திக்கடன் வேண்டிக்கிட்டு குதிரைக்கு மாலை போடுவோம். உள்ளூர் மட்டுமல்லாம, வெளியூரிலிருந்தும் எங்களுக்கு நேர்த்திக்கடன் மாலை ஆர்டர் வந்திருக்கு. ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சிட்டோம். இப்ப ரெண்டு, மூணு வருஷமா பிளாஸ்டிக் மாலைகள் கட்டுகிறதில்லை. பூ மற்றும் வண்ணக் காகித மாலைகள்தான் கட்டிக்கொடுக்கிறோம். இதற்குத் தேவையானவற்றை மதுரையிலிருந்து வாங்கிக்கிட்டு வந்து கட்டுறோம்.

மாலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
மாலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்

ஐயனாருக்கு மாலை கட்டுறதுன்னா சும்மா இல்லை, விரதம் இருந்து பயபக்தியோடதான் கட்டணும். காகித மாலைகளை 2 நாளுக்கு முன்னால நிறுத்திட்டுத் தொடர்ந்து மலர் மாலைகளைக் கட்டுவோம். முன்பு இருந்தது போல இப்போ இல்லை. வெளியூரிலிருந்து வரும் ஆர்டர் எங்களுக்குக் குறைஞ்சிருக்கு. வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக எங்ககிட்டதான் ஆர்டர் கொடுக்கிறாங்க. வெளியூரிலும் சிலர் மாலை கட்டுறதா சொல்றாங்க. இந்தத் தொழிலை நம்பிதான் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கிறோம். இதுவரையிலும் தொடர்ந்து எங்களையும், எங்க தொழிலையும் காப்பாத்திக்கிட்டு இருக்காரு. இனியும் காப்பாத்தணும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு