Published:Updated:

புதுக்கோட்டை: விபத்துக்குள்ளான இளைஞர்; வீட்டுக்கு அனுப்பிய அரசு மருத்துவமனை... உதவிய இளைஞர்கள்!

மருத்துவ உதவியால் நெகிழும் குடும்பம்
மருத்துவ உதவியால் நெகிழும் குடும்பம்

"இன்னும் ரெண்டு மூணு நாள் போயிருந்தால், கால எடுக்க வேண்டிய சூழல் வந்திருக்கும்னு சொன்னாங்க. சரியான நேரத்தில் கூட்டிக்கிட்டுப் போய் பையனை பொழைக்க வச்சு, அந்தக் குடும்பத்தையே வாழ வச்சிட்டோம்னு நெனைக்கும்போது மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருக்கு."

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சி சவேரியார்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன். பெரியண்ணன் - வாசுகி தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். கூலி வேலை செய்து தான் பெரியண்ணன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். பெரியண்ணனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் போனது. வறுமை நிலையில் உள்ள குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியின்றி மூத்த மகன் ராம்குமார் (18) பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிட்டு கூலி வேலைக்குப் புறப்பட்டான். தனது வருமானத்தில் குடும்பத்தைக் கவனித்து வந்ததோடு, தனது தம்பி, தங்கையைப் படிக்கவும் வைத்து வந்தார்.

ராம்குமார்
ராம்குமார்

இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்று வீடு திரும்பும் போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த வாகனம் ஒன்று ராம்குமார் வந்த டூவிலரில் கடுமையாக மோதியுள்ளது. இதில், நிலை தடுமாறி விழுந்த அவருக்கு வலதுகாலில் பலத்த காயம் ஏற்பட்டுப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கொரோனா பிரச்னை காரணமாக ராம்குமாருக்குக் கால் சரியாவதற்குத் தேவையான சிகிச்சைகள் அங்கு கொடுக்கப்படாமலேயே டிஸ்சார்ஜ் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வசதி இல்லாமலும், என்ன செய்வதென்றே தெரியாமலே தவித்துக்கொண்டிருந்த அந்த இளைஞரின் குடும்பத்திற்குப் புதுக்கோட்டையைச் சேர்ந்த சில இளைஞர்கள் இணைந்து தக்க சமயத்தில் உதவியிருக்கின்றனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த 'பாரதப் பறவைகள்' அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் குழு ஒவ்வொருவரிடம் நிதி திரட்டி தனியார் மருத்துவமனையில் வைத்து அறுவைசிகிச்சை அளிக்க உதவியிருக்கின்றனர். அறுவைசிகிச்சை முடிந்து தற்போது ராம்குமார் நலமுடன் உள்ளார்.

விபத்தால் காயமடைந்த கால்
விபத்தால் காயமடைந்த கால்

இதுபற்றி 'பாரதப் பறவைகள்' அமைப்பைச் சேர்ந்த மெய்யநாதனிடம் பேசினோம், "எங்களது சேவைகளை ஃபேஸ்புக்கில் பார்த்துவிட்டுதான் எங்களை அழைச்சாங்க. மகனுக்கு நடந்த விபத்துல கால் போச்சு உதவி பண்ணுங்கன்னு கேட்டுக்கிட்டாங்க. உண்மையாக இருந்தால் உடனே உதவி செய்வோம்னு சொல்லிட்டு நேரடியாகச் சென்று பார்த்தோம். பனங்கீற்றுகளால் வேயப்பட்ட கூரை வீடு. ரொம்பவே கஷ்டப்படுகிற குடும்பம். அரசு மருத்துவமனையிலிருந்து விரட்டிவிட்டுட்டாங்கன்னு சொல்லி புலம்புனாங்க. அடிபட்ட காலை வச்சிக்கிட்டு ஒருவாரத்துக்கும் மேலாக வீட்டிலேயே சும்மாகவே இருந்துள்ளனர். உடனே, டாக்டர் ஒருத்தரைக் கூட்டிக்கிட்டுப் போய் ஆலோசனைகள் கேட்டோம். காலில் பெரிய அடியாகதான் பட்டிருக்கு, உடனே அவருக்கு அறுவைசிகிச்சை செய்யணும்னு சொல்லிட்டாரு.

புதுக்கோட்டை: வாடிக்கையாளர் தவறவிட்ட தங்க செயின்! - கைதியின் நேர்மைக்குக் குவியும் பாராட்டு

அப்படி இல்லையின்னா, காலைக்கூட எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்னு சொன்னாரு. உடனே, அந்தப் பையனுக்கு எங்களால முடிஞ்ச சின்ன உதவி பண்ணலாம்னு முடிவு செஞ்சு எங்க நண்பர்கள்கிட்ட கலந்து பேசினேன். உடனே, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். அறுவை சிகிச்சைக்காக எங்களால முடிஞ்ச ரூ.35 ஆயிரம் பணத்தையும் மருத்துவமனைக்குக் கட்டினோம். மருத்துவமனை நிர்வாகமும் அந்தப் பையனைக் காப்பாற்ற ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இப்போ, அறுவைசிகிச்சை முடிந்து ராம்குமார் ரொம்ப நல்லாவே இருக்காரு. இன்னும் ரெண்டு மூணு நாள் போயிருந்தால், காலக்கூட எடுக்க வேண்டிய சூழல் வந்திருக்கும்னு சொன்னாங்க.

மருத்துவ உதவியால் நெகிழும் குடும்பம்
மருத்துவ உதவியால் நெகிழும் குடும்பம்

சரியான நேரத்தில் பையனை பொழைக்க வச்சு, அந்தக் குடும்பத்தையே வாழ வச்சிட்டோம்ங்கிறது மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருக்கு. அது மட்டும் எங்களுக்குப் போதும்!" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

ராம்குமாரின் பெற்றோரிடம் கேட்டபோது, "அரசு மருத்துவமனையிலிருந்து அனுப்பி விட்டாங்க. எங்க போறது என்ன செய்யிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல கடவுள் மாதிரி வந்து இந்த இளைஞர்கள் உதவியிருக்காங்க. அடிபட்டுக்கிடந்த எங்க பிள்ளைக்குச் சொந்தக்காரங்களே யாரும் உதவ முன்வராத நிலையில், முகம் தெரியாத இந்த இளைஞர்களோட உதவியை எங்க ஆயுசு உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம். என்னைக்கும் நன்றிக்கடன் பட்டிருப்போம்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு