புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 200 தூய்மைப் பணியாளர்களும், நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் 210 பேரும் என 400-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இவர்களில் ஒப்பந்தப் பணியாளர்களுக்குக் கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதச் சம்பளத்தை நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில்தான், கடந்த 29-ம் தேதி புதிய பேருந்து நிலையத்தில் மூன்று மாதச் சம்பளம் உட்பட முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை, சீருடை, மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கேட்டு, காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தை முடித்துவைத்த அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர். இந்தநிலையில், இரண்டு மாதச் சம்பளத்தை மட்டும் கொடுத்துவிட்டு, ஒரு மாதச் சம்பளத்தை நிறுத்திவைத்துவிட்டனர். அதேநேரத்தில், நிரந்தர தூய்மைப் பணியாளர்களின் ஒரு மாதச் சம்பளத்தையும் நிறுத்திவைத்துள்ளனர். இதையடுத்து, நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று கூடிய தூய்மைப் பணியாளர்க்ள் ஏராளமானோர் ``எப்போது பார்த்தாலும் நிதி இல்லை என்று கூறும் நகராட்சிக்கு அதன் நிர்வாகக் கட்டடத்தை ஏலம்விட்டு, நிதி திரட்டித் தருகிறோம்’’ என்று கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நகராட்சி அலுவலகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி ஜன நாயக தூய்மைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் விடுதலைக்குமரனிடம் பேசினோம். ``ஒவ்வொரு மாதமுமே சரியான தேதிக்குச் சம்பளம் கிடைப்பதில்லை. போராடித்தான் பெற்றுவருகிறோம். தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப் பணியாளர்களாகக் களத்தில் இறங்கி உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், மனசாட்சியே இல்லாமல் எங்களுக்கு மூன்று மாதச் சம்பளம் தராமல் இழுத்தடித்தனர். தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகள் பசி, பட்டினியால் வாடும் நிலையில் உள்ளனர். பலரும் பணி முடிந்து ஆங்காங்கே குப்பை பொறுக்கி, குடும்பத்தை ஓட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் எங்களது கோரிக்கைகளை மனுவாகக் கொடுத்தோம். தொடர்ந்து, கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தை நடத்தினோம். அதில், மூன்று மாதச் சம்பளத்தை உடனடியாகப் போடுவதாகப் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தைக் கலைத்தனர். ஆனால், இரண்டு மாதச் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு ஒரு மாதச் சம்பளத்தை நிறுத்திவிட்டனர். முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை தருவதாக அறிவித்தனர். கடந்த வருடமும் கிடைக்கவில்லை. இந்த வருடமும் கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதோடு, சீருடை தொடங்கி மாஸ்க், காலணி போன்ற எந்த உபகரணமும் கொடுப்பதில்லை. ஒவ்வொரு முறையும் நகராட்சி வசூல் செய்து எங்களுக்கு சம்பளம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அப்படிச் செய்யாமல் அரசே சம்பளம் வழங்கும் வகையில் வழி வகை செய்ய வேண்டும். தொடர்ந்து, சம்பளம் வழங்க நிதியில்லை என்று கூறும் நகராட்சிக்கு நிதி திரட்டுவோம் என்று விரக்தியடைந்துதான் இந்தப் போராட்டத்தைச் செய்தோம். இன்னும் ஒரு வார காலத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகச் சொல்கின்றனர். இல்லையெனில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.

நகராட்சி அதிகாரிகளிடம் இது பற்றிக் கேட்டபோது, ``நகராட்சிக்கு வரும் வரிவசூல் நிதியைக் கொண்டுதான் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. கொரோனா பிரச்னையால், வரிவசூல் செய்வதில் கடுமையான சிக்கல் நிலவியது. இந்தநிலையில்தான், அவர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஏப்ரல், மே மாதச் சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது. ஜூன் மாதச் சம்பளத்தை இன்னும் ஓரிரு நாள்களுக்குள் வழங்கிவிடுவோம். முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகைக் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம்" என்றனர்.