Published:Updated:

கொரோனா: `டீ, பன் மட்டும்தான்; இப்போ 3 நேரமும் சாப்பாடு!’- ஏழைக் குடும்பத்தை நெகிழவைத்த மாணவிகள்

ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள்
ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள்

`வெறும் சாப்பாடு மட்டும் போட்டால் போதாது, அவங்க வாழ்வாதாரத்துக்கு நம்மளால முடிஞ்ச உதவியைச் செய்யணும்னு முடிவு பண்ணேன். எல்லாரும் இப்போ அத்தியாவசியமாக மாஸ்க் பயன்படுத்துகிறதால, மாஸ்க் கடை வச்சுக் கொடுத்தோம்’.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றளவும் ஏராளமானோர் பிழைக்க வழியின்றி சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் தெருத்தெருவாக அட்டை, பிளாஸ்டிக் சேகரித்து, ஊசி, பாசி விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து 6 பிள்ளைகள் உட்பட குடும்பத்தைக் காப்பாற்றி வந்த வீரய்யன் குடும்பத்துக்கு, ஊரடங்கால் சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலை.

மாணவிகள் உதவி
மாணவிகள் உதவி

அட்டைகளைச் சேகரித்து விற்கும் சொற்ப வருமானத்தில்தான் வீரய்யன், தனது குழந்தைகளின் பசியைப் போக்கி வந்தார். தற்போது ஊசி, பாசிகளை விற்க முடியவில்லை. இதனால், வருமானமின்றி டீ, பன் ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டு வாழ்க்கை நடத்தி வந்த அந்தக் குடும்பம், கல்லூரி மாணவிகளின் உதவியால், தற்போது மூன்று வேளையும் சாப்பாடு சாப்பிடுகின்றனர். முதுகலை சோசியல் ஒர்க் படித்துள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த கோகிலா, சண்முகப்பிரியா இரு மாணவிகள் சேர்ந்து, சொந்த செலவில் வீரய்யனுக்கு மாஸ்க் விற்கும் கடையை ஏற்படுத்திக் கொடுத்து வாழ்வாதாரத்திற்கு உதவி செய்துள்ளனர்.

அதில் வரும் வருமானத்தை வைத்து தற்போது பிள்ளைகள் அனைவருக்கும் சாப்பாடு போடுகிறார். கஜா புயல் துவங்கி கொரோனா வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை மாணவிகள் சத்தமின்றி செய்துகொண்டிருக்கின்றனர் அந்த மாணவிகள்.

இதுபற்றி கோகிலாவிடம் பேசினோம். ``சாப்பாட்டுக்கு யாரெல்லாம் கஷ்டப்படுறாங்களோ அவங்களுக்கு எல்லாம் எங்களால் முடிஞ்ச வரைக்கும், தேடிச்சென்று சாப்பாடு கொடுத்துக்கிட்டு வர்றோம். அப்படி சாப்பாடு கொடுக்கும்போதுதான் ஒருநாள் வீரய்யன் மனைவி அறிமுகமானாங்க.

மாணவிகள் உதவி
மாணவிகள் உதவி

கைக்குழந்தை அழுதுக்கிட்டே இருந்துச்சு. `ஏன் குழந்தைக்குப் பால் கொடுக்கலையான்’னு கேட்டேன். அப்பத்தான், `கைக்குழந்தையை வச்சிக்கிட்டு ரொம்பவே கஷ்டப்படுகிறேன். பிள்ளையைப் பெத்துக்கிட்டோம். ஆனா, அதுக்கு பால் வாங்கிக் கொடுக்கக் கூட முடியலைன்’னு சொல்லி கண்கலங்குனாங்க. குடும்பத்தைப் பற்றி விசாரிச்சப்பதான், பிளாஸ்டிக் சேகரிக்குறதும், ஊசி, பாசி வித்துக்கிட்டு இருந்ததும் தெரிஞ்சது. இப்போ, ஊரடங்கால் அந்த வருமான இல்லைங்கிறதும் தெரிஞ்சது. வீரய்யன் பிளாஸ்டிக் சேகரிச்சு, அதை வித்துக் கொண்டு வருகிற காச வச்சுத் தான் பிள்ளைகள் டீ, பன் சாப்பிட்டு வயித்த நிரப்பிக்கிட்டு இருந்திருக்காங்க.

புதுக்கோட்டை: பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள்!-ஆறுதல் அளித்த விஜய் மக்கள் மன்றத்தினர்

அதுவும் கிடைக்கலைன்னா பட்டினிதான்னு அவங்க சொன்னதும், மனசுக்கு ரொம்பவே கஷ்டமாப் போயிருச்சு. வெறும் சாப்பாடு மட்டும் போட்டால் போதாது, அவங்க வாழ்வாதரத்துக்கு நம்மலால முடிஞ்ச உதவியைச் செய்யணும்னு முடிவு பண்ணேன். இப்போதைக்கு எல்லாரும் அத்தியாவசியமாகப் பயன்படுத்துகிறது மாஸ்க்தான். எனவே, மாஸ்க் கடை போட்டுக்கொடுத்தால், கண்டிப்பாகப் பிழைச்சுக்குவாங்கன்னு தோணுச்சு. உடனே எதைப்பத்தியும் யோசிக்காம, கையில இருந்த ரூ.3,000 பணத்தை முதலீடாக வச்சு பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள ரோட்டு ஓரமாக மாஸ்க் கடை போட்டுக்கொடுத்தேன்.

மாணவிகள் உதவி
மாணவிகள் உதவி

வீரய்யனும் ரொம்ப ஆர்வமாக இருந்ததால, இன்னுக்கு தினமும் ரூ.500 வரையிலும் சம்பாதிக்கிறாரு. பிள்ளைகள் 3 வேளையும் நல்ல சாப்பாடு சாப்பிடுறாங்க. அதோட தினசரி அவரை வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். இப்போ, லாபத்துல வர்ற வருமானத்தை வச்சு சானிடைசர், கிளவ்ஸ்னு நிறைய அயிட்டம் வாங்கி வச்சிருக்காரு. மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு. சாலையோரத்திலதான் வசிக்கிறாங்க. வீடு இல்லை. பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைக்கணும். அதுக்கு தொடர்ந்து எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்" என்றார் நெகிழ்வுடன்...!

அடுத்த கட்டுரைக்கு