Published:Updated:

`இதோடு முடங்கமாட்டேன்; எல்லாம் அனுபவம் தான்’ - ஆடு மேய்க்கும் பொறியியல் பட்டதாரி இளைஞர்!

புதுக்கோட்டையில் இன்ஜினீயரிங் முடித்த இளைஞர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று வீட்டிலேயே முடங்காமல் ஆடு வளர்த்தல், தென்னங்கீற்று முடைதல், எனக் கிடைக்கின்ற வேலைகளைச் செய்து அதிகளவில் வருமானம் ஈட்டி அசத்தி வருகிறார்.

ஆடு வளர்க்கும் இன்ஜினீயர் வேல்வேந்தன்
ஆடு வளர்க்கும் இன்ஜினீயர் வேல்வேந்தன் ( ஆர்.வெங்கடேஷ் )

நாடு முழுவதும் இன்று தலையாய பிரச்னையாக இருப்பது வேலையில்லாத் திண்டாட்டம்தான். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைகிடைக்காமல் தடுமாறும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, இன்ஜினீயரிங் முடித்த மாணவர்கள் பலருக்கும் படித்த வேலை கிடைக்கவில்லை என்பதுதான் அவலம். சிலர் குறைந்தபட்ச ஊதியம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை செய்து வருகின்றனர்.

ஆடுகளுக்குத் தீவனம் கொடுத்தல்
ஆடுகளுக்குத் தீவனம் கொடுத்தல்
ஆர்.வெங்கடேஷ்

பலரும் எங்கும் வேலை கிடைக்கவில்லை என்று கூறி சொந்த ஊரிலேயே வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். மாணவர்களின் பெற்றோர்களோ, பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து தினம் தினம் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், புதுக்கோட்டை அருகே சிலட்டூரைச் சேர்ந்த இன்ஜினீயரிங் முடிந்த இளைஞர் வேல்வேந்தன், எந்த வேலை கிடைத்தாலும், கிடைக்கின்ற வேலைகளை ரசித்துச் செய்து இன்ஜினீயரிங் படித்த இளைஞர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

ஆரம்பத்தில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடிச் சென்ற இடங்களில் எல்லாம் வேலை கிடைக்காத ஏமாற்றம் வேல்வேந்தனுக்கு. ஆனாலும், சோர்ந்து போகவில்லை. ஆடு மேய்ப்பது, நாற்று நடுவது, தென்னங்கீற்று பின்னுவது, கேட்டரிங்க் வேலை என முழு மனதோடு செய்து அதில் வருமானமும் ஈட்டி வருகிறார். இவரின் செயலைப் பார்த்து கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுதல்
ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுதல்
ஆர்.வெங்கடேஷ்

பரபரப்பான பணிகளுக்கிடையே வேல்வேந்தனிடம் பேசினோம், "அறந்தாங்கி பக்கத்தில் சிலட்டூர்தான் எனக்குச் சொந்த ஊரு. ரொம்ப ஏழ்மையான குடும்பம்தான். புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில், சிவில் இன்ஜினீயரிங் படிச்சேன். அப்பா, அம்மா கூலி வேலைக்குப் போய், ரொம்ப கஷ்டப்பட்டுதான் என்னை படிக்க வச்சாங்க. நானும் குடும்ப கஷ்டத்தையெல்லாம் புரிஞ்சிக்கிட்டுதான் படிச்சேன். படிக்கும்போதே கல்லூரி விடுமுறை நாள்களில் கிடைக்கிற சின்னச் சின்ன வேலையைப் பார்ப்பேன். அதில் கிடைக்கும் பணத்தை அப்படியே சேமிச்சு வச்சுக்குவேன்.

இரண்டு வருஷம் நல்லாதான் போயிக்கிட்டு இருந்துச்சு. மூணாவது வருஷம் அம்மா, அப்பாவால காலேஜ் பீஸ் கட்ட முடியாமல் போச்சு. அந்த நேரத்துல, நான் அப்போ சேமிச்சு வச்ச சேமிப்பு பணம்தான் தொடர்ந்து படிக்கிறதுக்கு உதவுச்சு. ஒரு வழியாக இன்ஜினீயரிங் படிச்சி முடிச்சிட்டு, இனி குடும்பத்தைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு சென்னைக்கு வேலை தேடிப்போனேன். ஒவ்வொரு கம்பெனியா வேலை கேட்டு ஏறி இறங்கினேன். போன இடத்தில் எல்லாம் ஏமாற்றம்தான். வேலை கிடைக்கலை.  

அம்மாவுடன் வேல்வேந்தன்
அம்மாவுடன் வேல்வேந்தன்
ஆர்.வெங்கடேஷ்

இன்னும் கொஞ்ச நாளு அங்கேயே இருந்து வேலை தேடுவதற்கும் போதுமான பணம் இல்லை. சின்னச் சின்ன வேலை செஞ்சு எடுத்துக்கிட்டு வந்த பணம் எல்லாம் முடிஞ்சு போச்சு. வேற வழியில்லை ஊருக்குக் கிளம்பி வந்துட்டேன். ஊருலயும் வந்து ஏறி இறங்காத கன்ஸ்ட்ரக்ஷனே இல்லை. சிவில் இன்ஜினீயர் முடிச்சிருக்கேன். ஆனாலும், என்னை உதவியாளராகக்கூட வச்சிக்க தயங்குறாங்க. அப்பறம் எப்படி என்னை நம்பி பில்டிங் கான்ட்ராக்ட் எல்லாம் கொடுப்பாங்க. எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே வெளியூர்ல இருந்து சிலர் வந்து ஆடு கிடை போட்டுருக்காங்க. வீடு வழியாகத்தான் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிக்கிட்டுப் போவாங்க.

அதைப் பார்த்துதான் நாம ஆடு வளர்க்கலாம்'ங்கிற ஐடியா எனக்கு வந்துச்சு. ஏற்கெனவே சின்னச் சின்ன வேலை செஞ்சு சேமிச்சு வச்ச பணம் கொஞ்சம் இருந்துச்சு. அந்தப் பணத்தை வச்சுதான் மொதல்ல இரண்டு ஆட்டுக்குட்டிகள் வாங்கி விட்டேன். தினமும் அதிகாலையே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டு போயிட்டு, வெயில் வர்றதுக்கு முன்னால, திரும்பவும் மாலை ஒட்டிக்கிட்டு போய் பொழுது சாயும் நேரத்தில் திரும்ப ஓட்டிக்கிட்டு வந்து விடுவேன். 2 ஆடுகள்ல இருந்து இப்போ 18 ஆடுகளாகப் பெருகி இருக்கு. ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு பெயர் வச்சிருக்கேன். இவங்களோட இருக்கும்போது நேரம் போகிறதே தெரியாது. இதுக்கு இடையில் நிறைய நேரம் இருக்கு. அந்த நேரத்தில என்ன செய்யலாம்னு யோசித்தபோதுதான் கேட்டரிங்க் வேலை தேடி வந்துச்சு.

ஆரம்பத்துல ஆடு வாங்கி வளர்க்கப்போறேன்னு சொன்னதும் அப்பா, அம்மாவுக்குக் கொஞ்சம் சங்கடம்தான். இன்ஜினீயரிங் முடிச்சிட்டு ஆடு மேய்க்கிறானே! என்று சொல்லி பக்கத்து வீட்டுக்காரவங்க எல்லாம் கிண்டல் செஞ்சிருக்காங்க. அதை நான் பெரிசா எடுத்துக்கலை. அப்போ என்னைக் கிண்டல் செஞ்சவங்க எல்லாம், இப்போ என்னை ரொம்பவே பாராட்டுறாங்க.
வேல்வேந்தன்
ஆடு வளர்க்கும் இன்ஜினீயர் வேல்வேந்தன்
ஆடு வளர்க்கும் இன்ஜினீயர் வேல்வேந்தன்
ஆர்.வெங்கடேஷ்

அந்த வேலையை அப்படியே கெட்டியாகப் புடிச்சிக் கிட்டேன். சமையல்ல ஆரம்பிச்சு, சப்ளை வரைக்கு அனைத்து வேலைகளையும் பார்த்திருவேன். ஆர்வமாகப் பாக்குறேங்கிறதால, என்னை வீடு தேடி வந்து அழைத்து போயிருவாங்க என்று கூறிக்கொண்டு இருந்தபோதே'', வேல் வேந்தனுக்கு அடுத்த வாரத்துக்கான கேட்டரிங்க் வேலைக்கு  அழைப்பு வருகிறது. போன் பேசி முடித்துவிட்டுத் தொடர்ந்தவர், ``கேட்டரிங்க் வேலை இல்லாத சமயத்தில் தென்னங்கீத்து முடையிற வேலையைப் பார்ப்பேன். அப்பப்போ, அப்பா கூட கூலி வேலைக்கும் போவேன்.

இப்போ, கொஞ்ச நாளா போட்டித் தேர்வுக்காகப் படிச்சிக்கிட்டு இருக்கேன். ஆடு மேய்க்கப் போகும்போதே புத்தகத்தை எடுத்துக்கிட்டுப் போயிடுவேன். படிச்சி முடிச்சிட்டு ராஜா மாதிரி வேலை பார்க்கணும்ங்கிறது அப்பா-அம்மாவோட ஆசை. ஆரம்பத்துல ஆடு வாங்கி வளர்க்கப்போறேன்னு சொன்னதும் அப்பா, அம்மாவுக்குக் கொஞ்சம் சங்கடம்தான். இன்ஜினீயரிங் முடிச்சிட்டு ஆடு மேய்க்கிறானே! என்று சொல்லி பக்கத்து வீட்டுக்காரவங்க எல்லாம் கிண்டல் செஞ்சிருக்காங்க. அதை நான் பெரிசா எடுத்துக்கலை. அப்போ என்னைக் கிண்டல் செஞ்சவங்க எல்லாம், இப்போ என்னை ரொம்பவே பாராட்டுறாங்க. அதே நேரத்துல அவங்க வீட்டுப் பையன் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு சரியான வேலை கிடைக்காம சென்னையில் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான்.

ஆடு வளர்க்கும் இன்ஜினீயர் வேல்வேந்தன்
ஆடு வளர்க்கும் இன்ஜினீயர் வேல்வேந்தன்
ஆர்.வெங்கடேஷ்

கௌரவத்துக்காக அவனை ஊருக்கு வரக்கூடாதுன்னு சொல்லி, மாசம், மாசம் இங்க இருந்து பணம் அனுப்பி வைக்கிறாங்க. கௌரவம் எல்லாம் பார்த்தால், நிச்சயம் நம்ம உயர்ந்த நிலையை அடைய முடியாதுங்கிறது மட்டும் எனக்கு நானே சொல்லிக்குவேன். படித்த படிப்புக்கான வேலை எனக்கு ஏன் கிடைக்கலை? என்ற கேள்வியும் எனக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு. அதற்கான விடையையும் தினம் தினம் தேடிக்கிட்டு இருக்கேன். இதோடு முடங்க மாட்டேன். எல்லாமும் ஒரு அனுபவம்தான். நிச்சயம் நான் படித்த துறையில் சாதனையாளனாக வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அரசும் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கணும்" என்று முடித்தார் தன்னம்பிக்கையுடன்.