Election bannerElection banner
Published:Updated:

புதுக்கோட்டை: பாம்புகடித்து உயிருக்குப் போராடிய அண்ணன்- தங்கை ... மீட்ட அரசு மருத்துவர்கள்!

மருத்துவர்கள் குழு
மருத்துவர்கள் குழு

ரத்தம் உறையும் தன்மை குறைந்த நிலையிலும், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து, விஷ முறிவு மருந்து கொடுத்தனர். ஆனாலும், நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், இருவரின் நுரையீரலும் செயலிழந்து போய் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் டெல்பின் ஜோவிதா (8), அருளானந்த ஜெரோம் (14). இருவரும் கடந்த 10-ம் தேதி வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது கண்ணாடி விரியன் பாம்பு இருவரையும் கடித்துள்ளது. விஷமேறிய நிலையில் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். உடனே, சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சைகளை ஆரம்பித்தனர்.

டெல்பின் ஜோவிதா
டெல்பின் ஜோவிதா

இருவருக்கும் ரத்தம் உறையும் தன்மை குறைந்த நிலையிலும், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து, விஷ முறிவு மருந்து கொடுத்தனர். ஆனாலும், நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், இருவரின் நுரையீரலும் செயலிழந்து போய் உள்ளது. உடனடியாக அவர்களுக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தி தொடர்ந்து செயற்கை சுவாசம் அளித்துள்ளனர். 5 நாள்களுக்குப் பிறகு மூச்சுத் திணறல் சீரானதைத் தொடர்ந்து, செயற்கை சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டு இருவரும் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்களின் இரண்டு வார தொடர் சிகிச்சைக்குப் பின்பு தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளையும் உரிய நேரத்தில் விரைவாகத் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார்.

 Snake (Representational Image)
Snake (Representational Image)

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி கூறும்போது, ``உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் வசந்த்குமார், ஆசைத்தம்பி, பொது மருத்துவ நிபுணர்கள் ஜோதி, ஆனந்த், மயக்கவியல் மருத்துவர்கள் கார்த்திகேயன், டேனியல் என மருத்துவர்கள் குழுவின் கூட்டு முயற்சியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த இரண்டு குழந்தைகளின் உயிரும் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இந்த சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள சுமார் 3 லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்தச் சிகிச்சை நம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு