Published:Updated:

மூக்குக்குள் கொலுசு முத்து; மூச்சுவிட சிரமப்பட்ட சிறுமி! - லாகவமாக அகற்றிய அரசு மருத்துவர்

சிறுமி மூக்குக்குள் கொலுசு முத்து
சிறுமி மூக்குக்குள் கொலுசு முத்து

"கொலுசு முத்து மூச்சுக்குழாய்க்குள் சென்றிருந்தால், உயிருக்கே ஆபத்தாகி இருக்கக்கூடும். மூக்கின் துவாரத்தில் உள்ளே மாட்டிக் கொண்டதால், சிறிது நேரத்தில் அகற்ற முடிந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தீயத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மகள் மிதுனா ஸ்ரீ(3). இவர் விளையாடிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாகக் காலில் அணிந்து இருந்த கொலுசு முத்து ஒன்று சிறுமி மூக்கிற்குள் சென்றுவிட்டது. இதனால், சற்றே மூச்சுவிடச் சிரமப்பட்டிருக்கிறார். இதையடுத்து, சிறுமியின் மூக்கிற்குள் ஏதோ பொருள் சென்றுவிட்டது என்பதை அறிந்த பெற்றோர் உடனே சிறுமியை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். வழக்கம்போல் மூச்சுவிட முடியாமலும், லேசான வலியுடன் சிறுமி துடித்துள்ளார். அப்போது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர் முகமது ரபீக், சிறுமியின் மூக்கிற்கு உள்ளே கொலுசு முத்து இருப்பதைக் கண்டுபிடித்தார்.

சிறுமியின் வேதனையைப் போக்கிய அரசு மருத்துவர்
சிறுமியின் வேதனையைப் போக்கிய அரசு மருத்துவர்

உடனே அதை எடுக்கத் திட்டமிட்டார். செவிலியர்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் உதவியுடன் சிறுமியின் மூக்கிற்குள் இருந்த கொலுசு முத்தை லாகவமாக எடுத்து சிறுமியின் வேதனையைப் போக்கினர். கொலுசு முத்து எடுக்கப்பட்டதற்குப் பின்பு மிதுனா ஸ்ரீ நலமுடன் உள்ளார்.

இதுபற்றி மருத்துவர் கூறும்போது,``கொலுசு முத்து மூச்சுக்குழாய்க்குள் சென்றிருந்தால், உயிருக்கே ஆபத்தாகி இருக்கக்கூடும். சிறுமியின் மூக்கிற்குள் ஏதோ ஒரு பொருள் சென்றுவிட்டது என்று தெரிந்தவுடன் உடனே பெற்றோர்கள் அதை எடுக்க முயற்சி செய்யாமல், மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளது பாராட்டுக்குரியது. மூக்கின் துவாரத்தில் உள்ளே மாட்டிக் கொண்டதால், சிறிது நேரத்தில் அகற்ற முடிந்தது. சிறுமி தற்போது நலமுடன் பழைய நிலைக்குத் திரும்பி விட்டார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு