Published:Updated:

`ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்த மாணவிகள்!'- பத்திரமாக வீடு சேர உதவிய புதுக்கோட்டை அதிகாரி #Lockdown

ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்த மாணவிகள்!
ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்த மாணவிகள்!

`டாக்ஸிக்கு காசு கொடுத்து அனுப்புகிறது பெருசு இல்லை. பத்திரமா அந்தப் பிள்ளைங்க வீடு போய் சேர்வதுதான் முக்கியம். நல்லபடியாக வீட்டுக்குப் போய் சேர்ந்துட்டாங்கன்னு. அவங்க போன் பண்ணிச் சொன்னதுக்கு அப்புறம்தான் நிம்மதியே வந்துச்சு’.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணிபுரிந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். போக்குவரத்துத்துறை சார்பில் முக்கியமான சில பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனாலும், நேற்று 24-ம் தேதி மாலை 6 மணிக்கெல்லாம், போக்குவரத்து முடக்கப்பட்டது. பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பொதுமக்கள்
பொதுமக்கள்

அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே மார்ச் 31-ம் தேதி வரையிலும் விடுமுறை அறிவித்தபோதிலும், நர்சிங் கல்லூரிகள் மட்டும் செயல்பட்டு வந்தன. தற்போது நர்சிங் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், சீர்காழியைச் சேர்ந்த மாணவிகள் 5 பேர், நர்சிங் மாணவிகள் என்று கூறப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக புதுக்கோட்டைக்கு வந்துள்ளனர். புதுக்கோட்டையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படாததால், புதுக்கோட்டையில் மாட்டிக்கொண்டனர். இதனிடையே, ஒரு சில டாக்ஸி ஓட்டுநர்களிடம் கார் வாடகைக்குக் கேட்டுள்ளனர்.

ஓட்டுநர்கள், `அதிகமாக செலவாகும். அதோடு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், காரில் அவ்வளது தூரம் சென்று வருவது சிரமம்’ என்று சொல்லியிருக்கின்றனர். இதையடுத்து, டாக்ஸியில் செல்வதற்குப் பணமும் இல்லை. பேருந்தும் இயக்கப்படவில்லை. எப்படி ஊர் செல்லப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு சோகத்துடன் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது, துப்பரவுப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் போக்குவரத்தைச் சரிசெய்துகொண்டிருந்த போலீஸார் மாணவிகளிடம் இதுபற்றி விசாரிக்க, மாணவிகள் நடந்ததைக் கூறியுள்ளனர்.

ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்த மாணவிகள்!
ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்த மாணவிகள்!

இதையடுத்து, உடனே டாக்ஸி ஒட்டுநரை வரவழைத்த நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், ஓட்டுநர் கேட்ட பயணச் செலவு பணத்தை தன் கையிலிருந்து கொடுத்து பொதுமக்கள் துணையோடு அனுப்பி வைத்தார். அதோடு, தன்னுடைய மொபைல் எண் மற்றும் போலீஸாரின் எண்ணையும் அந்தப் பெண்களிடம் கொடுத்து அனுப்பினார். நகராட்சி ஆணையரின் மனிதநேய செயலை அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

இதுபற்றி நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனிடம் பேசினோம். ``பஸ்கள் ஒவ்வொண்ணா டெப்போக்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனாலும், பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் குறையவேயில்லை. அதற்கப்புறம் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ஒரு சில பேருந்துகளை மட்டும் கூடுதலாக இயக்கி, இருந்த மக்களை அனுப்பி வைத்தோம். அந்த நேரத்தில்தான், இந்தப் பெண்கள் புதுக்கோட்டையில் சிக்கிக்கொண்டது தெரிஞ்சது. சீர்காழி போகணும்னு சொன்னாங்க. இங்க இருந்து சீர்காழி வரை போகணும்னா 3 பஸ் மாறணும். அதோட 3 மாவட்டங்களைக் கடக்கணும். பாவம் அந்தப் பிள்ளைங்ககிட்ட கையில காசு இல்லை. அவங்கிட்ட இல்லைங்கிறதால, கொடுத்து உதவுனேன் அவ்வளவுதான்.

ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்த மாணவிகள்!
ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்த மாணவிகள்!

ஆனா, டாக்ஸிக்கு காசு கொடுத்து அனுப்புறது பெருசு இல்லை. பத்திரமா அந்தப் பிள்ளைங்க வீடு போய் சேர்வதுதான் முக்கியம். டிரைவர் போன் நம்பரை வாங்கிக்கிட்டு என்னோட நம்பரைக் கொடுத்தேன். அதேபோல, இன்ஸ்பெக்டர் நம்பர், என்னோட நம்பரையும் அந்தப் பிள்ளைங்ககிட்ட கொடுத்து அனுப்பினோம். டிரைவரும் எங்க போறோம்னு அடிக்கடி போன் பண்ணி சொன்னாரு. நல்லபடியாக வீட்டுக்குப் போய் சேர்ந்துட்டாங்க. அவங்க போன் பண்ணி சொன்னதுக்கு அப்புறம்தான் நிம்மதி. நம்ம பிள்ளைங்களா இருந்தா அப்டியே விட்டுடுவோமா? என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவியைச் செய்தேன் அவ்வளவு தான்" என்றார். மாணவிகளிடம் பேசியபோது,``இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே, எப்படி வீட்டுக்குப் போகப்போறோம்னு தெரியாம பரிதவிச்சுக்கிட்டு இருந்த எங்களைப் பத்திரமா வீட்டுக்கு வரவழைக்க உதவிய அவர்களை என்றைக்கும் மறக்கமாட்டோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு