Published:Updated:

`150 ஆண்டுகளுக்கு முந்தைய வீரவாள்!' - தனி ஒருவனின் சாகசத்தைப் பதிவு செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்

விவசாயியைப் பாராட்டிய ஜமீன், கூர்வாளைப் பரிசாகக் கொடுத்துள்ளார். 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சுவாரஸ்ய சம்பவத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

ஆவணப்படுத்திய அரசுப் பள்ளி  மாணவர்கள்
ஆவணப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், `தொன்மை பாதுகாப்பு மன்றம்' செயல்படுகிறது. இந்த மன்றத்தில் உள்ள மாணவர்கள் நம் முன்னோர்களின் காலங்களில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பழங்கால வீட்டு உபயோகப்பொருள்கள், ஓலைச்சுவடிகள், பழைமையான நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகளை அடையாளம் கண்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆவணப்படுத்திய அரசுப் பள்ளி  மாணவர்கள்
ஆவணப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்

பள்ளி ஆசிரியர் மற்றும் மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மாணவர்களுக்கு ஆலோசனைகளை அளித்து வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில்தான், மாணவன் சக்திமகேஸ்வரன், அவரது நண்பன் ஜனார்த்தனனுடன் சேர்ந்து தன்னுடைய வீட்டில் இருந்த கூர்வாள் குறித்து பல்வேறு தகவல்களை திரட்டியிருக்கிறார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சக்தி மகேஸ்வரன், ``என்னுடைய வீட்டில் ஒரு பழைமையான கூர்வாள் ஒன்று நீண்ட நாள்களாக இருந்தது. இதுபற்றி அப்பா, அம்மாவிடம் கேட்டபோது சரியான தகவல் கிடைக்கவில்லை.

உடனே, ஆசிரியரிடம் கூறினோம். சில வழிமுறைகளைக் கூறி அதன்படி தகவல்களைச் சேகரிக்கச் சொன்னார். அதன்படி, நானும் நண்பன் ஜனார்த்தனும் தீவிரமாகத் தகவல் சேகரித்தோம். இதற்காகப் பல நாள்கள் எடுத்துக்கொண்டோம். கந்தர்வகோட்டை ஜமீன் எல்லைக்குட்பட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக திருடர்களின் அராஜகத்தால் தங்களுடைய பொன் பொருள்களையும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் இழந்து தவித்துள்ளனர். மேலும், இரவில் தூக்கமின்றி சிரமப்பட்டு வந்துள்ளனர். அப்போதுதான், கந்தர்வகோட்டை ஜமீன் நிர்வாகம் தரப்பில் ஓர் அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பரிசளிக்கப்பட்ட வீரவாள்
பரிசளிக்கப்பட்ட வீரவாள்

`திருடர்களைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும்' - இதுதான் அந்த அறிவிப்பு. சன்மானம் வழங்கப்படும் தகவல் ஊர் மக்கள் பலருக்கும் தெரிந்து இருந்தாலும், காட்டு நாவல் கிராம விவசாயி நல்லபெருமாள் ஐயாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும், ஊர்மக்களின் நலனுக்காகப் போராடுபவர். வழக்கம் போல் ஊர் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்து திருட்டில் ஈடுபட்ட கும்பலை மடக்கிப் பிடித்தார் நல்லபெருமாள்.

உயிரைப் பற்றி அஞ்சாமல் திரைப்பட ஹீரோவைப் போன்று தனி மரமாக திருட்டுக் கும்பலை விரட்டியடித்ததோடு அக்கும்பலின் தலைவனை ஓட ஓட விரட்டியடித்து, பொது இடத்தில் அவனது கைகால்களை கட்டிப்போட்டுள்ளார். இந்தச் சம்பவத்தின் போது ஏற்பட்ட இரைச்சலால் விழித்துக்கொண்ட கிராம மக்கள் அங்கு ஒன்று கூடி, அனைவரும் சேர்ந்து அவனைக் கந்தர்வகோட்டை அரண்மனைக்குக் கொண்டு சென்று ஜமீனிடம் ஒப்படைத்தனர்.

அரசுப் பள்ளி  மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

நீண்ட நாள்களாக மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த திருட்டுக் கும்பலை தனி ஆளாகப் பிடித்த காட்டுநாவல் கிராம விவசாயி நல்லபெருமாளுக்கு, பண்டாரத்தார் வம்சாவளி ஜமீன்தாரர் மாலை சூடி பாராட்டியதோடு அவருக்கு நெல் உள்ளிட்ட உணவுப்பொருள்களையும் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கினார். நல்லபெருமாள் ஐயாவின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் ஜமீன், கூர்வாள் ஒன்றையும் பரிசளித்துள்ளார். ஒரு தனி மனிதன் நினைத்தால் இந்தச் சமூகத்திற்குப் பல நல்ல விஷயங்களைச் செய்ய முடியும்.

இந்தக் கூர்வாள் ஒரு விவசாயின் வீரத்தை தெரிந்துகொள்ள எங்களுக்கு உதவியது. இதைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளோம்" என்றார் நெகிழ்ச்சியோடு.

அரசுப் பள்ளி  மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

ஆசிரியர் மணிகண்டனிடம் பேசினோம். ``இது மாணவர்களுக்குக் கிடைத்த வாய்மொழித்தகவல்கள்தான். ஆனாலும், மாணவர்கள் இதற்காக உழைத்துள்ளனர். இதுபோன்று நம் முன்னோர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் உற்சாகத்துடன்.