Published:Updated:

`விசாரிச்சப்பதான் தெரிஞ்சது!’- 200 மாணவர்களின் குடும்பங்களை நெகிழவைத்த புதுக்கோட்டை ஆசிரியர்கள்

200 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
200 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

`நம்ம மாணவர்களுக்கு இந்த நேரத்தில நம்மால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்னு சக ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள்கிட்ட சொன்னேன். சொன்ன உடனே, அனைவரும் சற்றும் தயங்காமல் தங்களால் இயன்ற தொகையைக் கொடுத்துவிட்டனர்'.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே.17ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமானமின்றிச் சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் தவிக்கும் அன்றாடக் கூலித்தொழிலாளர்களுக்குத் தன்னார்வலர்கள் சிலர் தாமாக முன்வந்து உதவிகள் செய்து வருகின்றனர். இந்தநிலையில்தான், புதுக்கோட்டை அருகே வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் சொந்தச் செலவில், பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் 200 பேரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி செய்து அசத்தி உள்ளனர். தங்கள் பள்ளியில் படிக்கும் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களின் குடும்பங்கள் என 200 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்த ஆசிரியர்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.500 மதிப்பிலான பலசரக்கு மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்கினர். நிவாரண உதவியைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.

200 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
200 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

இதுபற்றி தலைமையாசிரியர் ஜெயராஜிடம் பேசினோம். ``எங்க பள்ளியில படிக்கிற மாணவர்களை வீட்டில் இருந்தே படிக்க வைக்கலாம்னு நெனச்சு, சிலரிடம் விசாரிச்சோம். அப்பதான், எங்க மாணவர்கள் பெரும்பாலானோர் இந்த நேரத்தில் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் ரொம்பவே சிரமப்படுவதாகத் தெரிய வந்துச்சு. மொதல்ல இதைச் சரிசெய்யணும். அதற்கப்புறம் தான் அவர்களைப் படிக்க எல்லாம் வைக்க முடியும்னு தோணுச்சு. கொரோனா சமயத்துல எல்லாருக்கும்தான் சிரமம் என்றாலும், எங்க மாணவர்களுக்கு எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யணுங்கிற எண்ணம் வந்துச்சு. நம்ம மாணவர்களுக்கு இந்த நேரத்தில நம்மால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்னு சக ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள்கிட்ட சொன்னேன். சொன்ன உடனே, அனைவரும் சற்றும் தயங்காமல் தங்களால் இயன்ற தொகையைக் கொடுத்துவிட்டனர். ரூ.1 லட்சம் வசூலானது. அதை வச்சு முதல்கட்டமாக ரொம்பவே கஷ்டப்படுற மாணவர்களின் குடும்பங்களுக்கு எங்களால முடிஞ்ச சிறிய உதவியைச் செஞ்சிருக்கோம். தொடர்ந்து, எல்லாருக்கும் உதவணும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு