புதுக்கோட்டை மாவட்ட ஆவணத்தாங்கோட்டையில், ஆவணத்தாங்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களை அழைத்து வர வேன் வசதி, ஸ்மார்ட் கிளாஸ், மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் வகையில் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு பயிற்சி வகுப்புகள் எனப் பல்வேறு வசதிகளுடன் தனியார் பள்ளிக்கு நிகராகச் செயல்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வோர் ஆண்டும் இங்கு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், இந்தச் சுற்றுவட்டாரத்தில் வேறெந்தப் பள்ளியிலும் இல்லாத வகையில், மாணவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் ஆரோக்கியம் காக்கும் திட்டமாக `காலை ஆரோக்கிய உணவுத் திட்டம்' என்பதைக் கையில் எடுத்திருக்கின்றனர். தற்போது, இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குக் காலையில் கேப்பைக் கூழ், கம்மங்கூழ், சத்துமாவு, கொழுக்கட்டை, கொண்டைக்கடலை சுண்டல், பாசிப்பயறு பாயசம், பட்டாணி சுண்டல், தினை மாவு கொழுக்கட்டை என ஒவ்வொரு நாளும் இந்த உணவுகளைப் பிரித்து மாணவர்களுக்குக் கொடுத்து நெகிழ வைத்து வருகின்றனர்.
பள்ளி ஆசிரியர்களிடம் பேசினோம். ``வழக்கமாகப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் உண்டு. ஆனாலும், அம்மா அப்பா அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவது, மேலும் குடும்பச் சூழ்நிலையால் பல பிள்ளைகள் சரிவர காலையில் சாப்பிடுவதில்லை எனத் தெரிந்தது. இதனால், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் கற்றலில் தேக்கம் ஏற்படுகிறது. எனவே, மாணவர்களின் ஆரோக்கியம் காக்கும் பொருட்டு முதல் கட்டமாகக் காலை உணவு, அதுவும் சத்தான உணவை வழங்க முடிவெடுத்துதான், நம் பாரம்பர்ய உணவுகள் மற்றும் தானியங்களை வழங்க முடிவெடுத்தோம்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தத் திட்டத்தை தொடங்கிவிட்டாலும், கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி இல்லாததால், தொடர முடியவில்லை. தற்போது 73 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள். சில பள்ளி ஆசிரியர்களுடன் சில தன்னார்வலர்களும் கரம் கோத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். தொடர்ந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மாணவர்களின் ஆரோக்கியமும், பசியால் தொந்தரவுக்கு உள்ளாகும் அவர்களின் கற்றல் திறனும் மேம்பட வேண்டும்" என்றனர்.