Published:Updated:

புதுக்கோட்டை: துப்பாக்கித் தோட்டா பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!

புதுக்கோட்டை

கடந்த 5 நாள்களாகத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை புகழேந்தி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.

புதுக்கோட்டை: துப்பாக்கித் தோட்டா பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!

கடந்த 5 நாள்களாகத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை புகழேந்தி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.

Published:Updated:
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசமுத்திரம் ஊராட்சி பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில், கடந்த 30ம் தேதி மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் 34பேர், மற்றும் தமிழக போலீஸார் 18பேர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தான், பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா, சுமார் 2கி.மீ தொலைவில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த புகழேந்தி(11) என்ற சிறுவன் தலையில் பாய்ந்தது. அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 30ம் தேதியே அனுமதிக்கப்பட்டார்.

மூளைக்கு அருகிலேயே தோட்டா பாய்ந்திருப்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்த மருத்துவர் குழு, உடனடியாக சிகிச்சையைத் துவக்கினர். கிட்டத்தட்ட, 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவர் குழு சிறுவனின் தலையிலிருந்த தோட்டாவை அகற்றினர்.ஆனாலும், சிறுவனுக்குச் சுயநினைவு திரும்பவில்லை. சிறுவன் என்பதால், எப்படியாவது உயிர் பிழைத்துக் கொள்வான் என்ற நோக்கில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து போராடி வந்தனர். கடந்த 5 நாள்களாகத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை புகழேந்தி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.

சிறுவனின் உறவினர்கள்
சிறுவனின் உறவினர்கள்

துப்பாக்கித் தோட்டா பாய்ந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் கண்முழித்துவிடுவான் என்று கூறி புகழேந்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலரும் தஞ்சாவூர் மருத்துவமனையிலேயே இரவு பகலாகக் காத்திருந்தனர். இந்த நிலையில் தான் சிறுவன் இறந்த செய்தி கேட்டி அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

எப்படியும் கண்ணு முழிச்சி, என்னைய அம்மான்னு கூப்பிடுவான்ங்கிற நம்பிக்கையில, காத்துக்கிட்டுக் கெடந்தேன்.

கடைசி வரைக்கும் கண்ணு முழிக்காமலே போயிட்டானேன்னு...கூறி அழுத அந்தத்தாயின் அழுகுரல் அங்கிருந்த அனைவரின் நெஞ்சிலும் ரணத்தை ஏற்படுத்தியது.

சிறுவனின் தாய் பழனியம்மாள், மருத்துவர்கள் கடைசி வரைக்கும் காப்பாத்திக் கொடுத்திடுவாங்கன்னு நம்பிக்கையில் இருந்தேன். திடீரென இறந்துட்டதாக சொல்றாங்க. நேத்து அமைச்சர் வந்து பார்த்தப்ப, கை, கால் அசைந்ததாக சொன்னாங்க. இப்ப எப்படி அசையாம போச்சு. இங்க எப்படியும் காப்பாத்திடுவாங்கன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, கடைசியா, என் மகனைத் தொட்டுப் பார்க்கிறதுக்குக் கூட அனுமதிக்கலை. முன்னாடியே சொல்லியிருந்த கடைசி நேரத்துலயாவது என் பிள்ளை பக்கத்துல இருந்திருப்பேன். அதுக்குக் கூட எனக்குக் கொடுத்து வைக்கலை. என்னை அனுமதிக்கவும் இல்லைங்கிறது தான் ரொம்ப வேதனையா இருக்கு: என்று கதறினார்.

போராட்டம்
போராட்டம்

இதுபற்றி பேசிய கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை, " எந்த வித முன்னெச்சரிக்கை, அறிவிப்புமின்றி தான் அன்று துப்பாக்கிச் சுடும் பயிற்சியை போலீஸார் மேற்கொண்டிருக்கின்றனர். வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பாவி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். துப்பாக்கிச் சுடும் பயிற்சி நிலையத்தை உடனடியாக மூட வேண்டும். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம், அவர்களுக்கு வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதற்கிடையே தான், புகழேந்தியின் இறப்புக்கு நீதி கேட்டும், நிவாரணம் கேட்டும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நார்த்தாமலையில் புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 1மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தான், துப்பாக்கித் தோட்டா பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் இழப்பீடு அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.இதையடுத்து, போலீஸார் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.