Published:Updated:

`என்னால தாங்கிக்க முடியல!’ - மனைவி இறந்த சோகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணவர்

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல், கணவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுப்பையா
சுப்பையா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மறவாமதுரையைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். மூன்று மகன்களுக்கும் திருமணமாகி தங்களின் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். மூன்று மகன்கள் இருந்தும், யாரும் இவர்களைச் சரியாகப் பார்த்துக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே கருப்பாயிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் போகவே,  மருத்துவமனையில் அனுமதித்து கூடவே இருந்து சுப்பையா பார்த்து வந்துள்ளார்.

கருப்பாயி
கருப்பாயி

மருத்துவமனையில் கருப்பாயிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார். மனைவி இறந்த சோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத, சுப்பையா, ``என் மனைவி இறந்துவிட்டாள். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனி, மகன், மருமகள் என யாரும் என்னைக் கவனிக்க மாட்டார்கள். நான் இறந்த பிறகு, என்னை முறையாக அடக்கம் செய்துவிடுங்கள்’’ என்று உறவினர்களிடம் சொல்லி புலம்பித் தவித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மனைவி இறந்ததிலிருந்தே விரக்தியில் இருந்த சுப்பையா, கத்தியை எடுத்து கழுத்தை திடீரென அறுத்துக்கொண்டு மயங்கமடைந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பையாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.

சுப்பையா
சுப்பையா

இதுபற்றி அக்கம்பக்கத்தினர் கூறும்போது, ``இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் ரொம்பவே அன்பாக இருப்பாங்க. புள்ளைகளை எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுதான் வளர்த்தாங்க. மனைவி மேல ரொம்பவே பாசம் சுப்பையாவுக்கு. அதனாலதான் மனைவியோட சேர்ந்து போயிரலாம்னு நெனச்சுட்டாரு. ஆஸ்பத்திரியில இப்போ கொஞ்சம் நல்லா இருக்கிறதா சொல்றாங்க. இனியாவது அவரை பிள்ளைகள் நல்லா பாத்துக்கணும்" என்கின்றனர்.