Published:Updated:

புதுக்கோட்டை: 'சொந்த செலவில் 12 செவிலியர்கள் நியமனம்;அசத்தும் எம்.எல்.ஏ முத்துராஜா!'

எம்.எல்.ஏ முத்துராஜா
எம்.எல்.ஏ முத்துராஜா

மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் பலரும் இரண்டு ஷிஃப்ட் தொடர்ந்து வேலை பார்த்து சோர்வடைந்து போயிருக்கின்றனர். அவர்களின் பாரத்தை சற்றே குறைக்கும் வகையில் என்னுடைய சொந்த செலவில் செவிலியர்களை நியமித்து மக்களுக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்துள்ளேன்.

நாடு முழுவதுமே கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஜூன்.7ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத்தின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

முதலுதவி சிகிச்சை
முதலுதவி சிகிச்சை

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர். முத்துராஜா, தன்னுடைய சொந்த செலவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் எம்.எல்.ஏ, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள் வார்டினை ஆய்வு செய்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அங்கு சிகிச்சையிலிருந்த 50வயது நோயாளி ஒருவருக்கு இருதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மயங்க அங்கு பணியிலிருந்த மருத்துவர் நோயாளியின் மார்புப் பகுதியைத் தனது கைகளால் அழுத்தி (சி.பி.ஆர்) முதலுதவி சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்.

நீண்ட நேரம் போராடி மருத்துவர் சோர்ந்து போனார். இதனைப் பார்த்த எம்.எல்.ஏ முத்துராஜா உடனே கொரோனா முழு கவச உடையை அணிந்து கொண்டு அந்த மருத்துவருடன் சேர்ந்து தானும் அந்த தொற்றாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின், அந்த தொற்றாளரை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றார். தொடர்ந்து அவருக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா தொற்றாளர் எனத் தெரிந்தும் நோயாளியின் அவசரத் தேவை அறிந்து சற்றும் தயங்காமல் முதலுதவி சிகிச்சை அளித்த எம்.எல்.ஏவை அங்கிருந்த பிற நோயாளிகள் பாராட்டினர்.ஒருபுறம் எம்.எல்.ஏ களத்தில் இறங்கி வேலை பார்க்க, மறுபுறம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 3 தன்னார்வலப் பணியாளர்களை தன்னுடைய சொந்த செலவில் நியமித்திருக்கிறார்.

செவிலியர்களுடன் எம்.எல்.ஏ முத்துராஜா
செவிலியர்களுடன் எம்.எல்.ஏ முத்துராஜா

அவர்கள் அட்மிசன் தொடங்கி , பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர். அதோடு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெறும் நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் வகையில், 12 செவிலியர்களை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்கிறார். 12 செவிலியர்களுக்கும் எம்.எல்.ஏ தன்னுடைய சொந்த செலவிலேயே ஊதியம் வழங்கி செவிலியர்களின் குடும்பத்தை நெகிழ வைத்திருக்கிறார். எம்.எல்.ஏவின் தொடர் செயல்பாடுகளால் தொகுதி மக்கள் நெகிழ்ந்து போய் இருக்கின்றனர்.

புதுக்கோட்டை: 'சொந்த செலவில் 12 செவிலியர்கள் நியமனம்;அசத்தும் எம்.எல்.ஏ முத்துராஜா!'

இதுபற்றி எம்.எல்.ஏ டாக்டர் முத்துராஜாவிடம் கேட்டபோது,

" நம்முடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானவர்கள் கிராமத்தினர் . பலருக்கும் அட்மிசன் தொடங்கி சிகிச்சைகள் சம்பந்தமான பல்வேறு குழப்பங்கள் இருக்கு. சில தினங்களுக்கு முன், மருத்துவமனையை ஆய்வு செய்த போது எப்படி மருத்துவமனையில் அட்மிசன் செய்வது எனத் தெரியாமல் நோயாளி ஒருவர் அலைந்து திரிந்ததைப் பார்த்தேன் அவங்களுக்கு உதவிக்கென 3 பேரை நியமித்தேன். பலரும் கொரோனா தங்களுக்கு வந்துவிட்டதென மனதளவில் உடைந்து போகிறார்கள். அவங்களுக்கு ஆறுதல் அளிக்கும் உறவினர்களாகவும் அவங்க பணியாற்றுகின்றனர். நம் மருத்துவமனையைப் பொறுத்தவரை தற்போது தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

எம்.எல்.ஏ முத்துராஜா
எம்.எல்.ஏ முத்துராஜா

ஆனாலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் பலரும் இரண்டு ஷிஃப்ட் எனத் தொடர்ந்து வேலைபார்த்து சோர்வடைந்துள்ளனர். அவர்களின் பணிச்சுமையைச் சற்றே குறைக்கும் வகையில் என்னுடைய சொந்த செலவில் செவிலியர்களை நியமித்து மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளேன். கொரோனா என்கிற பேரிடர் காலத்தில் தன்னார்வமாகப் பலரும் உதவி செய்கிறார்கள். ஒரு எம்.எல்.ஏவாக மக்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்கிறேன். தொடர்ந்து இன்னும் நிறைய செய்ய வேண்டும்."என்றார்

அடுத்த கட்டுரைக்கு