Published:Updated:

`1,000 கிலோ ஆட்டுக்கறி; 4 கோடி வசூல்!' - புதுக்கோட்டையில் களைகட்டிய மொய் விருந்து விழா

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் மொய்விருந்து திருவிழாவில், விவசாயி ஒருவர் நடத்திய மொய் விருந்தில் 1,000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. அந்த விவசாயிக்கு ரூ.4 கோடி மொய்ப்பணம் வசூலாகியுள்ளது.

மொய் வசூல்
மொய் வசூல்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட மொய் விருந்து கலாசாரம், மெல்ல மெல்ல பரவி தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. 20,000 பேர் வரையிலும் மொய்விருந்து கணக்கு வைத்துள்ளனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருவர் விழா நடத்துகிறார். தற்போது, இங்குள்ள பகுதிகளில் ஆடி 1-ம் தேதி முதல் மொய் விருந்து திருவிழா தொடங்கி, தற்போது களைகட்ட ஆரம்பித்துள்ளது.

விருந்து
விருந்து

பொருளாதாரத்தில் பின் தங்கி, சிரமப்படுவார்களுக்கு உதவுவதற்காகவே, தொடங்கப்பட்ட மொய் விருந்தில் இன்று வணிகமயமாகி கோடிகள் புரளும் திருவிழாவாக உருவெடுத்துவிட்டது. பணம் எண்ணுவதற்கு இயந்திரம், பந்தலைச் சுற்றி கண்காணிப்புக் கேமராக்கள், மொய் எழுதும் இடங்களில் வங்கி சேவை மையம், தனியார் செக்யூரிட்டி கார்டு எனக் கடந்த சில வருடங்களாகவே மொய்விருந்து விழா முற்றிலும் டிஜிட்டல் மயமாகி வருவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மொய் விருந்து திருவிழாவில் கலந்துகொள்பவர்களுக்கு கம கம கறி விருந்து நிச்சயம்.

இந்தப் பகுதி மக்களே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த வடகாட்டைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் மொய் விருந்து விழா நடைபெற்றது. முன்னதாக 50,000 அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விநியோகித்து இருந்தார். ஒரே நேரத்தில் 1,000 பேர் வரையிலும் அமர்ந்து சாப்பிடும் வகையில் வடகாட்டில் பந்தல் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 20 இடங்களில் மொய் எழுதுவதற்காகப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர். தனியார் வங்கி தனது சேவை மையத்தை அமைத்து இருந்தது. 10-க்கும் மேற்பட்ட தனியார் செக்யூரிட்டிகள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 பாதுகாப்புப் பணியில் செக்யூரிட்டி
பாதுகாப்புப் பணியில் செக்யூரிட்டி

சுமார் 1,000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. 100 பணியாளர்கள் மொய் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு அசைவ விருந்து பரிமாறினர். சுமார் 8,000-க்கும் மேற்பட்டோர் விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்டுவிட்டு மொய்ப் பணத்தை எழுதிவிட்டுச் சென்றனர். முடிவில் வசூலான மொய்ப்பணம் எண்ணப்பட்டது. இதில், விவசாயி கிருஷ்ண மூர்த்திக்கு ரூ.4 கோடி மொய்ப்பணம் வசூலானது. இந்த ஆண்டில் தனி ஒருவருக்குக் கிடைத்த அதிகபட்ச மொய் வசூலாகும். ஆனாலும், இந்த வருடம் கஜா புயல் காரணமாகவே மொய் வசூல் குறைந்துள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

மொய் விருந்து
மொய் விருந்து

விவசாயி கிருஷ்ணமூர்த்தியிடம், ``4 கோடி வந்திருக்கிறது என்றால், அந்தளவுக்கு நான் அனைவருக்கும் மொய் செய்து இருப்பதால்தான் கிடைத்துள்ளது. சிலர் நான் செய்த மொய்ப் பணத்தை செலுத்தி புதுநடை அதிகமாகச் செய்யாமல் போய் இருப்பதால் வசூல் குறைந்துவிட்டது. ரூ.5 கோடிக்கும் அதிகமாகவே மொய் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். 4 கோடி வரையிலுமே மொய் வந்துள்ளது. கஜா புயல் பாதிப்புதான் மொய் குறைந்ததற்கு முக்கியக் காரணம்" என்கிறார்.