Published:Updated:

விஜயபாஸ்கர் குவாரி உட்பட 16 குவாரிகள்... கனிமவளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!

அரசு அனுமதித்த அளவைவிட 1,02,241 கன மீட்டர் அளவுக்குக் கற்களும், 71,912 கன மீட்டர் அளவுக்கு கிராவல் மண்ணும் எடுத்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 2019-ல் குத்தகைதாரருக்கு ரூ.6.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் எழுந்தபோது, தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், குவாரிகளில் கடந்த 2017-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, சில ஆவணங்களைக் கைப்பற்றினர். அதில், திருவேங்கைவாசலிலுள்ள கல்குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. திருவேங்கைவாசலிலுள்ள கல்குவாரி, குத்தகைதாரர்களின் பெயரில் இயங்கிவருகிறது. இங்குள்ள குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட 1,02,241 கன மீட்டர் அளவுக்குக் கற்களும், 71,912 கன மீட்டர் அளவுக்கு கிராவல் மண்ணும் எடுத்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 2019-ல் சுப்பையா என்ற குத்தகைதாரருக்கு ரூ.6.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

கல்குவாரி
கல்குவாரி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 இடங்களில் இந்தக் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த நிலையில், இலுப்பூர் மற்றும் குளத்தூர் வட்டங்களில் திருவேங்கைவாசல், ஆயிங்குடி, மேலூர், பெருஞ்சுனை உள்ளிட்ட இடங்களில் குத்தகைதாரர்களின் பெயரில் செயல்பட்டுவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்குச் சொந்தமான ஆறு குவாரிகள் உட்பட மாவட்டத்தில் செயல்படும் 16 குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கோரி கனிமவளத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில், கனிமவளத்துறை துணை இயக்குநர்கள், வேதியப்பன், ரமேஷ் தலைமையிலான ஒன்பது பேர்கொண்ட குழு புதுக்கோட்டையிலுள்ள குவாரிகளில் ஆய்வு செய்துள்ளது.

Tamil News Today: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

ஏற்கெனவே, கடந்த 2019-ல் அபராதம் விதிக்கப்பட்டதுபோல் தற்போது, கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது பற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ``அனைத்து குவாரிகளிலும் அரசு அனுமதித்த அளவைவிட வெட்டப்பட்டிருக்கிறதா... எவ்வளவு தூரம் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்திருக்கிறோம். இது குறித்த அறிக்கையை விரைவில் கனிமவளத்துறை இயக்குநரிடம் ஒப்படைப்போம்.

விஜயபாஸ்கர் குவாரி உட்பட 16 குவாரிகள்... கனிமவளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!

தேவைப்பட்டால், மீண்டும் குவாரிகளில் சோதனையில் ஈடுபடுவோம். இயக்குநரின் ஆலோசனையின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்" என்றனர்.

கடந்த அக்.18-ம் தேதி தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் வீடு, அலுவலகம், அவரின் ஆதரவாளர்கள் உட்பட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர். அடுத்த சில தினங்களிலேயே விஜயபாஸ்கருக்குச் சொந்தமான குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி விஜயபாஸ்கருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு