Published:Updated:

`கண்மாயில் 37 ஏக்கர் ஆக்கிரமிப்பு; 30 ஆண்டுகள்!' புதுக்கோட்டை அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே கோதை மங்கலத்தில் கண்மாயை ஆக்கிரமித்து 37 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நடவுப்பயிர்களை அழித்து ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நடவுப்பயிர்களை அழித்து ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே கோதைமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான கோதைமங்கலம் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் மழை நீரைத் தேக்கி, இதன் மூலம்தான் இந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில வருடங்களாகவே நிலவும் வறட்சியால், கண்மாயிலேயே போதுமான தண்ணீர் தேங்குவதில்லை. கோதைமங்கலம் விவசாயிகள் பலரும் விவசாயம் செய்யாமலேயே இருந்து வந்தனர்.

 ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த நிலையில்தான், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிறுகனூர் கிராமத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் கண்மாயில் 37 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்துக் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்துள்ளனர். இது கோதைமங்கலம் விவசாயிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி, சிறுகனூரைச் சேர்ந்தவர்களிடம் கோதைமங்கலம் விவசாயிகள் ஆக்கிரமிப்புகளைத் தாங்களே அகற்றிவிட்டு ஊருக்குச் சென்றுவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனாலும், பல ஆண்டுகளாக சிறுகனூரைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அங்கு விவசாயம் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இதுபற்றி கோதைமங்கலம் விவசாயிகள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோதைமங்கலம் விவசாயிகள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியைச் சந்தித்து உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி மனுக்கொடுத்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனே மனு மீது விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால், உடனடியாக அகற்றக் கோரி உத்தரவிட்டார். அதனடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

அறந்தாங்கி கோட்டாட்சியர் குணசேகரன், வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு 37 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கண்மாய் முழுவதும் சம்பா நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. போலீஸார் உதவியுடன் ஜேசிபி வாகனங்களைக் கொண்டு நடவுப்பயிர்களை முழுமையாக அழித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

 ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதனால், கோதைமங்கலம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில், ``அரசு அதிகாரிகள் நெற்பயிர்களை நாங்கள் நடவு செய்வதற்கு முன்பாகவே, எங்களுக்கு அறிவிப்பு கொடுத்திருக்கலாம். அறுவடைக்கு சில நாள்களுக்கு முன்பு பயிர்களை முழுமையாக அழித்திருப்பது வேதனையளிக்கிறது" என்று கூறி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் புலம்பி வருகின்றனர்.