Published:Updated:

ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்க நூதன போராட்டம்! - எழுத்தாளர் கைது

மணிமாறன்.இரா
Vengadesh R

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காணாமல் போன குளத்தை மீட்க, அரசு அலுவலர்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர்கள் ஒட்டி நூதன பிரசாரத்தில் ஈடுபட்ட எழுத்தாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கறம்பக்குடி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்
கறம்பக்குடி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், சுமார் 8 ஏக்கர் பரப்பளவு உள்ள வெட்டுக்குளம் இருந்துள்ளது. கடந்த பல வருடங்களாக இந்தக் குளம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, தற்போது, குளம் இருந்த இடமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளது. இந்தக் குளத்தை நம்பி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தக் குளத்தை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்டுத் தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை விவசாயிகள் புகார் கொடுத்தும்,  எவ்வித நடவடிக்கையும் இல்லை.

வெட்டுக்குளம் ஆய்வுப்பணி
வெட்டுக்குளம் ஆய்வுப்பணி

இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்தாயுதக்குழுவைச் சேர்ந்த எழுத்தாளர் துரைகுணா தலைமையில் இளைஞர்கள், `வேலைக்கு ஆட்கள் தேவை' மாவட்ட ஆட்சித்தலைவர், டி.ஆர்.ஓ, ஆர்.டி.ஓ, தாசில்தார், வி.ஏ.ஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்குத் தகுதி பொதுஅறிவு, சுயமரியாதை, தன்னொழுக்கம் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கறம்பக்குடி முழுவதும் ஒட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்து பதறிப் போய் அதிகாரிகள் குளம் இருந்த இடத்தில் ஆய்வு செய்தனர். புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, கறம்பக்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு இடத்தை ஆய்வுசெய்து பார்வையிட்டனர்.

இந்த நிலையில்தான், இந்த போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது நடடிக்கை எடுக்கக்கோரி கறம்பக்குடி வி.ஏ.ஓ ஜாஸ்மின் பேகம், கறம்பக்குடி போலீஸாரிடம் புகார் கொடுத்தார். வி.ஏ.ஓ புகாரின் பேரில் அரசு அலுவலர்கள் மீது அவதூறு பரப்புதல், அரசு வேலை காலியாக இருப்பதாகக் கூறி போஸ்டர் பிரசாரம் செய்தல் என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து கருத்தாயுதக்குழுவைச் சேர்ந்த எழுத்தாளர் துரை குணாவை போலீஸார் கைது செய்தனர். அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

கறம்பக்குடி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்
கறம்பக்குடி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்

இதுபற்றி ஏற்கெனவே நம்மிடம் பேசிய கருத்தாயுதக் குழுவைச் சேர்ந்த துரை குணா, ``ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிக் காணாமல் போன குளத்தை மீட்டுத் தூர்வார வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் என அரசு அதிகாரிகள் அனைவரிடமும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இதுபற்றி பொது நல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே இந்தப் பிரசாரத்தை நாங்கள் முன்னெடுத்தோம்" என்றார்.