Published:Updated:

`காரணம் கேட்டா.. சுத்திப்பார்க்க வந்தோம்னு சொல்றாங்க!’- அதிரடி காட்டும் புதுக்கோட்டை போலீஸார்

புதுக்கோட்டை போலீஸார் நடவடிக்கை
புதுக்கோட்டை போலீஸார் நடவடிக்கை

புதுக்கோட்டையில் தடைச் சட்டத்தை மீறி இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த இளைஞர்கள், பொதுமக்கள் என 120 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். 80 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில், முக்கிய நடவடிக்கையாகத்தான், பிரதமர் நரேந்திரமோடி 21 நாள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் மிகவும் அத்தியாவசியத் தேவை, தவிர வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், பொதுமக்கள் குறிப்பாக, இளைஞர்கள் பலரும் தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வலம் வந்தநிலையில், காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை போலீஸார் நடவடிக்கை
புதுக்கோட்டை போலீஸார் நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி பொதுவெளியில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், மாவட்டத்தில் தடையை மீறி பொதுவெளிகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 120 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, 80 இருசக்கர வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து, தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் போலீஸார், வெளியே சுற்றுபவர்களை 100 முதல் 150 தோப்புக்கரணம் போடச் சொல்லி அதன்பின்பு விட்டிருக்கின்றனர். இதுபற்றி போலீஸார் கூறும்போது, ``பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் பொதுவெளியில் கூட வேண்டாம். குறிப்பாக, தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் யாரும் செல்ல வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

புதுக்கோட்டை போலீஸார் நடவடிக்கை
புதுக்கோட்டை போலீஸார் நடவடிக்கை

குறிப்பாக, இளைஞர்கள் கேட்டபாடு இல்லை. என்ன செய்கிறார்கள் என்று பார்த்து சுற்றித் திரிவதற்காகவே சிலர் வருகின்றனர். காரணம் கேட்டால், சாலை எப்படி இருக்குன்னு சும்மா சுற்றிப்பார்க்க வந்ததாகக் கூறுகின்றனர். இருசக்கர வாகனங்களை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டோம். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதேபோல், தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை இருக்கும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு