Published:Updated:

`சட்டப்பிரிவுகளுடன் குறியீடு!' - விபத்துகளைத் தடுக்க கறம்பக்குடி எஸ்.ஐ-யின் அசத்தல் முயற்சி

விபத்துகள் நடைபெறும் சாலை ஓரங்களில் எச்சரிக்கை பலகை இருக்கும். அதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால்,அந்தச் சாலையிலேயே பெயின்டால், விபத்துப் பகுதி என்று எழுதி வைப்பதால், அவர்களின் கவனம் அங்கு செல்லும். உடனே வேகத்தைக் குறைத்துவிடுவார்கள்.

எஸ்.ஐ எடுத்த புதிய முயற்சி
எஸ்.ஐ எடுத்த புதிய முயற்சி

சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப சாலை விபத்துக்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சாலை விபத்துகளைக் குறைக்க, போக்குவரத்து காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு வாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தாலும், சாலை விபத்துகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. விபத்து நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்தாலும், வாகன ஓட்டிகள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை.

எஸ்.ஐ எடுத்த புதிய முயற்சி
எஸ்.ஐ எடுத்த புதிய முயற்சி

இந்த நிலையில்தான், கறம்பக்குடி எஸ்.ஐ சரவணன், விபத்துகளைத் தடுக்க தற்போது புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியுள்ளார். வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து வானங்களை ஓட்ட வேண்டும் என்பதற்காக, விபத்து நேரிட்ட இடங்களில் சாலையிலேயே அந்தக் குறிப்பிட்ட இடத்தை மட்டும் வட்டமிட்டுக் காட்டி விபத்துப் பகுதி என்று எழுதுவதுடன், அந்த இடங்களில் விபத்துகளுக்கான சட்டப்பிரிவுகளையும் எழுதி வைத்து அசத்தியுள்ளார். இது வாகன ஓட்டிகளைச் சிந்திக்க வைத்திருப்பதுடன், வாகன ஓட்டிகளிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது. வாகன ஓட்டிகள் பலரும் இதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பதிவு செய்து வருவதாக எஸ்.ஐ சரவணன் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.

தொழுதூர் டு மதுரை... விபத்து, கால் சிதைவு... ஒரு தாயின் உயிரைக் காக்க நடந்த ரியல் போராட்டம்!

இதுகுறித்து எஸ்.ஐ சரவணனிடம் பேசினோம். ``புதிய திட்டம் எல்லாம் ஒண்ணும் இல்ல. காவல்துறை அதிகாரிங்க கூட்டத்தில், எங்க உயர் அதிகாரி இவற்றையெல்லாம் செயல்படுத்தலாம்னு சொன்னார். அதை அப்படியே புடிச்சிக்கிட்டேன். சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, வாழ வேண்டிய வயதில் இளைஞர்கள் பலரும் சாலை விபத்துகளில் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இந்த விபத்துகளையெல்லாம் பார்க்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், விபத்துகள் குறைய வாய்ப்பு இருக்குன்னு தோணுச்சு. உடனே அதைச் செஞ்சேன்.

எஸ்.ஐ சரவணன்
எஸ்.ஐ சரவணன்

வாகன ஓட்டிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்னு நெனச்சேன். நெனச்ச மாதிரியே நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. மொதல்ல, வெறும் குறியீடு போட்டு விபத்துப் பகுதின்னு தான் எழுதலாம்னு நெனச்சேன். அப்புறம்தான், அதோடு விபத்துக்கான பிரிவுகளையும் எழுதலாம்னு முடிவு பண்ணி, விபத்தில் காயம் ஏற்படுத்தியமைக்கான சட்டப்பிரிவு 337, கவனக் குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துதலுக்கான சட்டப் பிரிவு 279, விபத்தில் உயிரிழந்தால் அதற்கான சட்டப் பிரிவு 304 (ஏ) ஆகியவற்றை எழுதினேன். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கறம்பக்குடி காவல் நிலைய சரகத்தில் 33 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில், 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்தான் இந்த இடங்களில் எல்லாம் தற்போது, சாலைகளில் எழுதியுள்ளோம். பெயின்ட், லேபர் செலவு என ரூ.5,000 வரையிலும் செலவாகி இருக்கிறது. செலவு முக்கியம் அல்ல. விபத்துகள் குறைய வேண்டும் என்பதுதான் முக்கியம்" என்றார்.