Published:Updated:

`போலீஸ் மீதான பயம் போகணும்!' காவல்நிலையத்திற்கு விசிட் அடித்த மாணவர்கள்

காவல்நிலையத்திற்கு விசிட் அடித்த மாணவர்கள்
காவல்நிலையத்திற்கு விசிட் அடித்த மாணவர்கள்

`காவல்துறை மீது மாணவர்களுக்கு இதுவரை இருந்த பயம், எதிர்மறையான எண்ணங்கள் எல்லாம் இந்த விசிட்டுக்கு அப்புறம் மாறியிருக்கும்னு நிச்சயமாகச் சொல்ல முடியும்'.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கிளிக்குடி தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளி மாணவர்கள் காவல் நிலையம் குறித்தும், அங்கு நடைபெறும் பணிகள் குறித்தும் தெரிந்துகொள்ள தங்கள் ஆசிரியர்களுடன் அன்னவாசல் காவல் நிலையத்திற்கு விசிட் அடித்தனர். காவல் நிலையத்திற்கு வந்த மாணவர்களை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி உள்ளிட்ட போலீஸார் வாசலில் நின்று கைகொடுத்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். போலீஸாரின் வரவேற்பு காவல் நிலையத்திற்குள் செல்கிறோம் என்று மாணவர்களிடத்தில் இருந்த அச்சத்தைப் போக்கியது.

காவல்நிலையத்திற்கு விசிட் அடித்த மாணவர்கள்
காவல்நிலையத்திற்கு விசிட் அடித்த மாணவர்கள்

தொடர்ந்து, போலீஸார் காவல் நிலையத்தில் உள்ள அறைகள், காவல் நிலையம் செயல்படும் விதம் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கிக் கூறினர். பின்னர், காவல் நிலையத்தில் ஆய்வாளர் அறை துவங்கி, சார்பு ஆய்வாளர் அறை, பதிவேடுகள் வைப்பறை, நிலைய எழுத்தர் அறை, கைதிகள் அறை, கிடங்கு அறை, கணினி அறை ஓய்வறை, ஆயுதங்கள் அறை, ஆண் கைதிகள் அறை, வட்ட எழுத்தர் அறை என அனைத்தையும் கையோடு கூட்டிச் சென்று காண்பித்தனர்.

மேலும், ரோந்து விளக்கப்படம், குற்ற விளக்கப் படம், வாகன விளக்கப் படம் வாயிலாகக் குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்கள், கொள்ளைகள் அதிகம் நடக்கும் இடங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். பள்ளி மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி காவல் நிலையப்பணிகள் குறித்து போலீஸாரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டனர். மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் சற்றும் சளைக்காமல் போலீஸார் விளக்கம் அளித்தனர். பள்ளி சார்பில் காவல் நிலைய நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

காவல்நிலையத்திற்கு விசிட் அடித்த மாணவர்கள்
காவல்நிலையத்திற்கு விசிட் அடித்த மாணவர்கள்

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``இதுபோல பள்ளி மாணவர்கள் காவல் நிலையத்திற்கு வருவதை ரொம்பவே வரவேற்கிறோம். இன்னைக்கு வந்த பிள்ளைகள் எல்லாரும் ரொம்ப ஆர்வமா கேள்விகள் கேட்டாங்க. நாங்களும் எல்லாத்தையும் விளக்கினோம். காவல்துறை மீது மாணவர்களுக்கு இதுவரை இருந்த பயம், எதிர்மறையான எண்ணங்கள் எல்லாம் இந்த விசிட்டுக்கு அப்புறம் மாறியிருக்கும்னு நிச்சியமாகச் சொல்ல முடியும். இதுபோன்று அந்தந்த பகுதி பள்ளி மாணவர்கள் காவல் நிலையங்களுக்குச் சென்று காவல் நிலையத்தில் நடைபெறும் பணிகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வரும் இளைய தலைமுறையினர் நிச்சயம் காவல்துறையை நேசிப்பதோடு, காவல்துறையுடன் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்" என்றனர்.இதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டபோது, "பெற்றோர்கள் பலரும் குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுவதற்காக, ஒழுங்கா சாப்பிடலைன்னா, போலீஸ் புடிச்சிட்டு போயிடும்னு சொல்லியில்லாம் சோறு ஊட்டுவாங்க. குழந்தைகளுக்குப் பொதுவாகவே காவல் நிலையத்தைப் பார்த்தாலே ஒருவித பயம் வரும்.

காவல்நிலையத்திற்கு விசிட் அடித்த மாணவர்கள்
காவல்நிலையத்திற்கு விசிட் அடித்த மாணவர்கள்

பயத்தைப் போக்கும் வகையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். நிர்வாக நடைமுறைகள் குறித்தும், காவல்துறையில் உயர் அதிகாரிகளாக மாறும் வாய்ப்பு மாணவர்களுக்கு இருப்பதாகக் கூறி போலீஸார் மாணவர்களை உற்சாகப்படுத்தினர். நாங்களும் காவல் நிலையப்பணிகள் குறித்து இப்போது தான் முழுமையாகத் தெரிந்துகொண்டோம். மாணவர்கள் மட்டுமின்றி எங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு