Published:Updated:

`நம்ம நலனுக்காகப் போராடுறாங்க!’ - காவலர்களுக்கு பிரியாணி விருந்து படைத்த விஜய் மக்கள் இயக்கம்

தயார் செய்யப்பட்ட பிரியாணி பொட்டலங்கள்
தயார் செய்யப்பட்ட பிரியாணி பொட்டலங்கள்

`200 பிரியாணி பொட்டலங்களைத் தயார் செய்து, நகர் ஸ்டேஷன், கணேஷ் நகர் ஸ்டேஷன், டிராஃபிக் போலீஸ் அலுவலகம்னு போலீஸார் இருக்க இடங்களுக்கு நேரடியாகப் போய் பிரியாணி பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்திட்டு வந்தோம்'.

உலக நாடுகளையே அச்சுறுத்திய, கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை தவிர்த்து வேறு யாரும் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் அத்துமீறல்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, ஊரடங்கினைப் பொதுமக்கள் சரியாகக் கடைப்பிடிக்கும் வகையில் காவல்துறையினர் 24 மணி நேரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவலர்களுக்கு பிரியாணி விருந்து
காவலர்களுக்கு பிரியாணி விருந்து

குறிப்பாக, ஏராளமான போலீஸார் நல்ல சப்பாடுதான் வேண்டும் என்று நினைக்காமல் கிடைக்கின்ற சாப்பாடுகளைச் சாப்பிட்டு தங்களது பணியினைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காவலர்களுக்கு ஒரு நாளாவது பிரியாணி விருந்து போட வேண்டும் என்று விரும்பிய புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்டத்தில் உள்ள 200 போலீஸாருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கின்றனர்.

இதுபற்றி விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பர்வேஸிடம் பேசினோம்,``கொடூரமான கொரோனாவைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும், கொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில், டாக்டர்கள், நர்ஸ், தூய்மைப் பணியாளர்கள், போலீஸாருடைய பங்குதான் அதிகம். ஊரடங்கைச் சரியாக கடைப்பிடிக்க வைக்க தினமும் சாலையில் நின்னு போலீஸார் நமக்காகப் போராடுறாங்க. போலீஸ் வேலை பார்க்குற நண்பர்கள்கிட்ட கேட்டோம். சாப்பாடு எல்லாம் கிடைச்சிரும். ஆனா, நேரத்துக்குக் கிடைக்காது. கிடைக்கிறப்ப சாப்பிடணும். பிரியாணி எல்லாம் கண்ணுல பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு சொன்னாங்க.

காவலர்களுக்கு பிரியாணி விருந்து
காவலர்களுக்கு பிரியாணி விருந்து

அப்பதான் போலீஸாருக்கு பிரியாணி விருந்து போடலாம்னு முடிவு பண்ணோம். இதுக்காக, 200 பிரியாணி பொட்டலங்களைத் தயார் செய்து, நகர் ஸ்டேஷன், கணேஷ் நகர் ஸ்டேஷன், டிராஃபிக் போலீஸ் அலுவலகம்னு போலீஸார் இருக்கும் இடங்களுக்கு நேரடியாகப் போய் பிரியாணி பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்திட்டு வந்தோம். எல்லாரும் ரொம்பவே சந்தோஷமாக வாங்கிக்கிட்டாங்க. எங்களுக்கும் ரொம்பவே சந்தோஷம். தொடர்ந்து, நமக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு