Published:Updated:

புதுக்கோட்டை: ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள்!-போஸ்டர் ஒட்ட பசை கேட்கும் எழுத்தாளர்

எழுத்தாளர் துரை குணா
எழுத்தாளர் துரை குணா

`அரசின் சட்டங்களையும் ஆணைகளையும் துஷ்பிரயோகம் செய்துவரும் அரசு அலுவலர்களைக் கண்டித்து அவர்களின் செயல்களை மக்கள் அறியும் வண்ணம் 07.09.2020 முதல் ஆலங்குடி சரகப் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டுவதற்குப் பாதுகாப்பும், அனுமதியும், நோட்டீஸ் ஒட்ட பசையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் துரை குணா. சமூக ஆர்வலரான இவர், கடந்த 17.02.2020-ல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டப் பொறியாளர் உட்பட அரசு அலுவலர்களுக்குப் புகார் மனுக்களை அனுப்பியிருக்கிறார். அதில், `கறம்பக்குடி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனி நபர்களால் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்களை உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அகற்றி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தைப் போக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்தநிலையில், `மனு அனுப்பி பல மாதங்களாகியும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறி, தற்போது ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் குறித்து நோட்டீஸ் ஒட்ட அனுமதி கேட்டு ஆலங்குடி டி.எஸ்.பி-க்கு நூதன மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

கறம்பக்குடி
கறம்பக்குடி

அந்த மனுவில், ``புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், தனி நபர்கள் ஆக்கிரமித்துக் கட்டியிருக்கும் கட்டடங்களை அகற்றி விபத்தில்லாத நெடுஞ்சாலையாகவும், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறுகள் இல்லாத வகையில் பயன்படுத்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறைக் கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் ஆகியோருக்குக் கடந்த 17.02.2020 அன்று புகார் மனு கொடுத்தும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை சம்மந்தமான எந்த பதிலும் இல்லை.

எனவே, அரசு பாதுகாத்து, பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலைகளைத் தனி நபர்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டிக்கொள்ள மேற்கண்ட அரசு அலுவலர்கள் வழிவகை செய்து கொடுப்பதுடன்,ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பாதுகாப்பு அறனாகவும் இருந்துவருகிறார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாணைகளையும், வழிகாட்டுதல் நெறிகளையும் மதிக்காமல், அரசின் சட்டங்களையும் ஆணைகளையும் துஷ்பிரயோகம் செய்து மக்கள் விரோதப் போக்கைக் கையாண்டுவருகிறார்கள்.

நூதன மனு
நூதன மனு

மேற்கண்ட அலுவலர்களைக் கண்டித்து, அவர்கள் செயல்களை மக்கள் அறியும் வண்ணம் 07.09.2020 முதல் ஆலங்குடி சரகப் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டி எனது ஜனநாயகக் கடமையை ஆற்ற எனக்கு அனுமதியும், பாதுகாப்பும், நோட்டீஸ் ஒட்ட பசையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அரசு அலுவலர்களைக் கண்டித்து, அவர்கள் குறித்து போஸ்டர் ஒட்டப் பசை கேட்டு சமூக ஆர்வலர் ஒருவர் நூதன மனு அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு