Published:Updated:

கொரோனா: `வெட்டிவேரில் வெரைட்டி மாஸ்க்!’ - அசத்தும் புதுக்கோட்டை இளைஞர்கள்

வெட்டிவேர் மாஸ்க்
வெட்டிவேர் மாஸ்க்

``அனைத்து தரப்பினருமே வெட்டிவேர் மாஸ்க்கை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வெட்டிவேர் மாஸ்க்கை பயன்படுத்தியவுடன் தூக்கிப்போட வேண்டும் என்ற நிலை இல்லை. அலசிக் காயவைத்து மீண்டும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’.

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் தொடர் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் நாளுக்கு நாள் தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. ஒருபுறம் வைரஸ் மனிதர்களுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் வைரஸ் பெரும்பாலான தொழில்களை எல்லாம் முடக்கி மறைமுகத் தாக்குதலையும் நடத்தியுள்ளது.

வெட்டிவேர் மாஸ்க்  தயாரிப்பு
வெட்டிவேர் மாஸ்க் தயாரிப்பு

இயல்புநிலைக்குத் திரும்ப முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், பெரிய, பெரிய நிறுவனங்களே மாற்றுத்தொழிலை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில்தான், புதுக்கோட்டையில் பேக் நிறுவனம் நடத்தி வந்த இளைஞர்கள், பொதுமக்களின் தற்போதைய தேவையறிந்து, விதவிதமான வெட்டி வேர் முகக்கவசங்களை தயார் செய்து சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்த வெட்டி வேர் முகக்கவசங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபற்றி முகக்கவசங்கள் தயாரிப்பாளர் முருகேசன் கூறும்போது, ``திருமண நிகழ்ச்சிக்கான பேக், தாம்பூலப் பைகள், நகைக்கடைகளுக்கு பேக் என ஆர்டரின் பெயரில் மொத்தமாகத் தயார் செய்து விற்பனை செஞ்சிக்கிட்டு இருந்தோம். கடந்த 5 மாசங்களுக்கு முன்பு வரையிலும் பரபரப்பாக இயங்கிக்கிட்டிருந்தோம். இப்போ, கொரோனாவால கடந்த சில மாசங்களவே வேலை இல்லை. திருமணம், திருவிழா, நகைக்கடைகள்னு எந்த ஆர்டரும் கைக்கு கிடைக்கலை. கடைக்கு வாடகை கட்டக் கூட வருமானம் இல்லை.

மாஸ்க்... சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

என்ன செய்யிறதுன்னே தெரியாம விழிபிதுங்கி நின்னப்பதான், மாஸ்க் தயார்ப்பு குறித்த ஐடியா வந்துச்சு. இன்றைய நிலைமைக்கு எல்லாருக்கும் மாஸ்க் முக்கியமான ஒண்ணா மாறிருச்சு. மாஸ்க் போடாம வெளியே போகக்கூடாதுன்னு அரசாங்கமே வலியுறுத்துகிறது. இந்த நேரத்துல மாஸ்க் தயாரிச்சு விற்பனை செய்யலாம்னு முடிவு பண்ணோம். வழக்கமாக சர்ஜிக்கல், துணி மாஸ்க் என பல்வேறு வகையான மாஸ்க்குகள் சந்தையில் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா: `மாஸ்க் அணிவோம், உயிர்களை காப்போம்!' - கூகுளின் விழிப்புணர்வு டூடுல்

ஆனாலும், அதிலும் புதுமையாகவும், அதே நேரத்தில் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதற்காகவே, வெட்டிவேர்களை நிரப்பி மாஸ்க்குகளை தயார் செய்ய முடிவு எடுத்தோம். இந்த வகை மாஸ்க்குகள் உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. முதியவர்கள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினருமே வெட்டிவேர் மாஸ்க்கை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வெட்டிவேர் மாஸ்க்கை பயன்படுத்தியவுடன் தூக்கிப்போட வேண்டும் என்ற நிலை இல்லை.

வெட்டிவேர் மாஸ்க்
வெட்டிவேர் மாஸ்க்

அலசிக் காயவைத்து மீண்டும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாங்கள் தயாரிக்கும் வெட்டிவேர் மாஸ்க்குக்கு தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெட்டி வேர் மாஸ்க் விற்பனையில் கிடைத்த வருமானத்தை வச்சுதான் இப்போ 4 மாசத்துக்கான கடை வாடகையைக் கொடுத்திருக்கிறேன். மாத்தி யோசித்தோம் இப்போ வெற்றிபெற்றுட்டோம். தொடர்ந்து,சமூக வலைத்தளங்கள் மூலமாக தற்போது ஏராளமான ஆர்டர்கள் கிடைத்து வருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு