Published:Updated:

`70 ஆண்டுகளாக எங்களைக் காத்தது!' -அரசால் வெட்டப்பட்ட புளியமரத்துக்கு அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில், சுமார் 70ஆண்டுகளுக்கும் மேலாக சாலையின் ஓரத்தில் நின்று பலருக்கும் நிழல் கொடுத்துவந்த புளியமரம், சாலை விரிவாக்கத்திற்காக சில நிமிடங்களில் வெட்டி வீழ்த்தப்பட்டது.

வெட்டப்பட்ட மரத்துக்கு அஞ்சலி
வெட்டப்பட்ட மரத்துக்கு அஞ்சலி

கடந்த வருடம் நவம்பர் மாதம், கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் முற்றிலுமாக நிலைகுலைந்தன. இதில், லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதையடுத்து, புயலால் அழிந்த மரங்களை வெட்டி அகற்ற வந்த ஒப்பந்தக்காரர்கள் சிலர், புயலில் தப்பிப்பிழைத்து உயிரோடு இருந்த சில மரங்களையும் வெட்டிச் சென்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாகப் புகார் சென்றதன் விளைவாக, உயிருள்ள மரங்களை வெட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வெட்டப்பட்ட மரம்
வெட்டப்பட்ட மரம்

அதன்பிறகு, உயிருள்ள மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டது. இந்நிலையில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஏராளமான மரங்களை வெட்டிவருகின்றனர். போக்குவரத்து நெருக்கடியை கருத்தில்கொண்டு, அன்னவாசல் பஸ் நிலையத்திலிருந்து ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வரை உள்ள சுமார் 1 கி.மீ தூரம், ஏற்கெனவே இருந்த சாலையை சற்றே அகலப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்காக, சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குறிப்பாக, சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி 9 புளியமரங்களையும் வெட்டி அகற்றியுள்ளனர்.

`வெட்டப்பட்ட மரங்கள்; கதறிய சிறுமி!’ - அங்கீகாரம் வழங்கிய மணிப்பூர் அரசு

இதனால் அப்பகுதி இளைஞர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். இத்தனை வருடங்களாகத் தங்களுக்கு நிழல் கொடுத்துவந்த மரங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

அன்னவாசல் பகுதி இளைஞர்களிடம் பேசினோம். `` சாலை விரிவாக்கம் தேவைதான். ஆனால், சாலைக்கு வெளியே நிற்கும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றால், அந்த விரிவாக்கமே தேவையில்லை. சாலை விரிவாக்கம் என்று கூறி, 9 மரங்களை வெட்டிவிட்டனர். அதில், யூனியன் அலுவலகம் அருகில் இருந்த மரமும் ஒன்று. இந்தப் புளியமரம், 70 வருடங்களுக்கு மேலாக நிழல்கொடுத்துவந்தது. இதற்கு அருகிலேயே அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

வெட்டப்பட்ட மரத்திற்கு இளைஞர்கள் அஞ்சலி
வெட்டப்பட்ட மரத்திற்கு இளைஞர்கள் அஞ்சலி

ஏராளமான கடைகளும் உள்ளன. ஆனால், வெயிலுக்கு ஒதுங்குவதற்கு நிழற்குடை இல்லை. மாணவர்களுக்கும் ஏரியா மக்கள் அனைவருக்கும் அந்தப் புளியமரம்தான் நிழற்குடையாக இருந்தது. இப்போது அந்தப் புளியமரத்தை வெட்டிப் போட்டுவிட் டார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது. இத்தனை வருடம் நிழல்கொடுத்த புளியமரத்துக்கு நன்றிக்கடனாக மாலை அணிவித்து மரியாதை செஞ்சோம். எங்களால் செய்ய முடிந்தது இது ஒன்றுதான்" என்றனர் வேதனையுடன்.

ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளோ, "சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த மரங்களை மட்டும்தான் வெட்டி அகற்றினோம். வேறு எதற்காகவும் இல்லை" என்றனர்.