Published:Updated:

தாமிரபரணி ஆற்றில் மாயமான மூதாட்டி, 24 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீண்ட அதிசயம்!

தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து மீண்ட மூதாட்டி புஷ்பபாய்

"தண்ணீரின் போக்குக்கே நீந்திச் சென்றேன். அதன் பின்னர் ஆற்றில் புதருக்கு இடையே சிக்கிவிட்டேன். கையில் கிடைத்த மரத்துண்டைப் பிடித்துக்கொண்டே முகத்தை ஆகாயத்தை நோக்கி வைத்தபடி கிடந்தேன்" என்கிறார் மூதாட்டி புஷ்பபாய்.

தாமிரபரணி ஆற்றில் மாயமான மூதாட்டி, 24 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீண்ட அதிசயம்!

"தண்ணீரின் போக்குக்கே நீந்திச் சென்றேன். அதன் பின்னர் ஆற்றில் புதருக்கு இடையே சிக்கிவிட்டேன். கையில் கிடைத்த மரத்துண்டைப் பிடித்துக்கொண்டே முகத்தை ஆகாயத்தை நோக்கி வைத்தபடி கிடந்தேன்" என்கிறார் மூதாட்டி புஷ்பபாய்.

Published:Updated:
தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து மீண்ட மூதாட்டி புஷ்பபாய்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பாரதபள்ளி மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. பந்தல் கட்டும் தொழிலாளியான தங்கமணியின் மனைவி புஷ்பபாய் (55). இவர் தனது வீட்டின் அருகில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக நேற்று முன் தினம் மதிய வேளையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.

குளிக்கப்போனவரைக் காணவில்லை என உறவினர்கள் தேடிச்சென்றபோது அவரது ஆடை, பக்கெட் ஆகியவை படித்துறையிலிருந்ததை பார்த்துள்ளனர். இதையடுத்து அவர் தண்ணீரில் விழுந்திருக்கலாம் எனக் கருதிய உறவினர்கள் ஆற்றில் இறங்கித் தேடினர். அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். 30 பேர் கொண்ட தீயணைப்பு படையினர் 3 குழுக்களாகப் பிரிந்து தேடிவந்தனர்.

புதருக்கு மத்தியில் மரக்கட்டையை பிடித்தபடி மயங்கி கிடந்த புஷ்பபாய்
புதருக்கு மத்தியில் மரக்கட்டையை பிடித்தபடி மயங்கி கிடந்த புஷ்பபாய்

நேற்று மதியத்துக்கு மேல் திக்குறிச்சி பகுதியில் புதர்களுக்கு மத்தியில் ஒருவர் மிதப்பதைத் தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். அருகில் சென்று பார்த்தபோது அது திருவட்டார் பகுதியில் மாயமான புஷ்பபாய் என்பது தெரியவந்தது. அவர் ஒரு மரத்துண்டைப் பற்றியபடி மயங்கிக்கிடப்பதைக் கண்டனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் புஷ்பபாயை மீட்டு மினி டெம்போவில் படுக்க வைத்து மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சைக்குப் பின் புஷ்பபாய் நலமடைந்தார்.

புஷ்பபாய்
புஷ்பபாய்

உயிருடன் மீண்ட புஷ்பபாய் கூறுகையில், "கணவரும், மகனும் வெளியில் சென்றிருந்ததால் குளித்துவிட்டு வந்து சாப்பிடலாம் என நினைத்து தாமிரபரணி ஆற்றுக்குச் சென்றேன். குளிப்பதற்கு முன் படிக்கட்டில் துணிகளைத் துவைத்துக்கொண்டிருந்தேன். கனமான பெட்ஷீட்டை தண்ணீரில் நனைக்கப் படிக்கட்டில் இறங்கியபோது தவறி ஆற்றில் விழுந்துவிட்டேன். எனக்கு நீச்சல் தெரியும், ஆனாலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இழுத்துச் சென்றுவிட்டது. தண்ணீரின் போக்குக்கே நீந்திச் சென்றேன். அதன் பின்னர் ஆற்றில் புதருக்கு இடையே சிக்கிவிட்டேன். கையில் கிடைத்த மரத்துண்டைப் பிடித்துக்கொண்டே முகத்தை ஆகாயத்தை நோக்கி வைத்தபடி கிடந்தேன். நீண்ட நேரம் எனக்கு நினைவு இருந்தது. அதன் பிறகு மயங்கிவிட்டேன். இப்போது எனக்கு மறுபிறவி கிடைத்திருக்கிறது" என்றார்.

மீட்ட தீயணைப்பு வீரர்கள்
மீட்ட தீயணைப்பு வீரர்கள்

நேற்று முன் தினம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட புஷ்பபாய் சுமார் 24 மணி நேரத்துக்குப் பின் நேற்று மீட்கப்பட்டார். அவர் மாயமான பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் மயங்கிய நிலையில் கிடந்தார். உணவு சாப்பிடாமல் இருந்த அவர், தண்ணீரும் அதிகமாகக் குடிக்கவில்லை. புதரில் சிக்கியதாலும், மரக்கட்டையைப் பிடித்தபடி கிடந்ததாலும் தண்ணீரில் மூழ்காமலிருந்தார். மேலும் புஷ்பபாயைத் தண்ணீர் அடித்துச் சென்றதிலிருந்து அவரை மீட்கும் வரை மழை பெய்யவில்லை. இதனால் ஆற்றில் தண்ணீர் மட்டம் உயரவில்லை. எனவே புஷ்பபாய் மயங்கியபிறகும் மூழ்காமல் தப்பித்துள்ளார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி 24 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.