Published:Updated:

`ஓட்டு போடல.. பாதை அடைப்பு!' -புதுக்கோட்டை அ.ம.மு.க பிரமுகருக்கு எதிராகக் கொதிக்கும் கிராமம்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

எங்க மக்களோட ஓட்டு அவருக்குக் கிடைக்கலைன்னு, மக்களைப் பழிவாங்கும் நோக்கோடு பொதுப்பாதையைத் தன்னோட சொந்தப் பாதைன்னு சொல்லி அடைச்சிருக்காரு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது, வடகாடு கிராமம். வடகாட்டில் உள்ள மாங்குடிபட்டி, தெற்குப்பட்டி ஆகிய பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ளவர்கள், வடகாடு கடைத்தெருவுக்கு வருவதற்கு மாங்குடிப்பட்டி- தெற்குப்பட்டி இணைப்புச் சாலையைத்தான் பயன்படுத்திவருகின்றனர். 50ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சாலையில் சென்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், இந்த பொதுப் பாதையை இப்பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க பிரமுகர் முத்துசாமி என்பவர், தன்னுடைய நிலம் என்று கூறி அடைத்துவைத்துள்ளார். இதுபற்றி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கொந்தளித்த இப்பகுதி மக்கள், வடகாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனு
மனு

இதையடுத்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததால், கலைந்துசென்றனர். அ.ம.மு.க பிரமுகர், உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்ததால், அந்த விரக்தியில்தான் பாதையை அடைத்துள்ளார் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபற்றி அந்தப் பகுதி மக்கள் கூறும்போது, "கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பாதையைத் தான் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். இது பொதுப்பாதை. இப்போ, திடீர்னு பாதை அடைக்கப்பட்டதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்பவே கஷ்டம்.

இந்தப் பகுதியில், அ.ம.மு.க முத்துசாமி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நின்னாரு. அவருக்கு குறைவான வாக்குகள்தான் கிடைச்சது. எங்க மக்களோட ஓட்டு அவருக்கு கிடைக்கலைன்னு சொல்லி, மக்களைப் பழிவாங்கும் நோக்கோடு பொதுப்பாதையைத் தன்னோட சொந்தப் பாதைனு சொல்லி அடைச்சிருக்காரு. அவர் நிலமே இல்லை. அரசு புறம்போக்கு நிலம். அவர் நிலம்னு நிரூபிச்சா, நாங்க யாரும் அந்தப் பாதையைப் பயன்படுத்த மாட்டோம்னு சொல்லிட்டோம். ஆனா, அதற்கு அவர் தயாராக இல்லை.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

அதன்பிறகுதான், வட்டாட்சியர்கிட்ட மனுகொடுத்தோம். ஆனா, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். தொடர்ந்து, பிரச்னைக்குத் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டம் நடக்கும்" என்றனர்.

போலீஸாரிடம் கேட்டபோது, " இதுபற்றி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருந்தோம், கொடுத்துள்ளனர். மனுமீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்னை சரிசெய்யப்படும்" என்றனர்.

இதுபற்றி அ.ம.மு.க பிரமுகர் முத்துச்சாமி கூறும்போது, ``பஞ்சாயத்து ரெக்கார்டின் படி அது பொது பாதையே கிடையாது. அங்கு 4 செண்ட் நிலம் நாங்கள் கிரயம் வாங்கி இருக்கிறோம். தார் சாலையை இணைக்கும் பாதையாகப் இதனைப் பயன்படுத்தி வந்தனர். தேர்தல் தோல்வியால் பொதுப்பாதையை அடைத்துவிட்டதாக என் மீது இப்பகுதியைச் சேர்ந்த சிலர் வீண்பழி சுமத்தி உள்ளனர். அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வக்கீல்களிடம் பேசி வருகிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு