Published:Updated:

புதுக்கோட்டை கல்லணைக் கால்வாய்: எலிகள் துளையால் உடைப்பு? - பொதுப்பணித் துறை

கால்வாய் உடைப்பு சரிசெய்யும் பணி
கால்வாய் உடைப்பு சரிசெய்யும் பணி

காவிரி நீர் வேம்பக்குடி கிழக்குப் பகுதிக்கு வந்த போது, சுமார் 50 அடி நீளத்துக்குக் கரை உடைப்பு ஏற்பட்டது. 300 கன அடி வரையிலும் நீர் வரத்து இருந்துள்ளது.

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர் கிளைவாய்க்கால்களில் 16ம் தேதி முதல் திறந்துவிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கியின் சில பகுதிகள் மட்டும் காவிரிப் பாசன வசதி பெறுகிறது.

இந்தநிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஈச்சன்விடுதி, நெடுவாசல், வேம்பங்குடி, மேற்பனைக்காடு வழியாக நாகுடி வரையிலும் தண்ணீர் வந்துள்ளது. இந்த இடங்களில் எல்லாம் விவசாயிகள் கூடி நின்று மலர் தூவி காவிரி நீரை வரவேற்றனர். இந்தநிலையில்தான், கல்லணைக் கால்வாயிலிருந்து வந்த காவிரி நீர் வேம்பக்குடி கிழக்குப் பகுதிக்கு வந்த போது, சுமார் 50 ம்அடி நீளத்துக்குக் கரை உடைப்பு ஏற்பட்டது.

கல்லணைக் கால்வாய் உடைப்பு
கல்லணைக் கால்வாய் உடைப்பு

300 கன அடி வரையிலும் நீர் வரத்து இருந்துள்ளது. இந்த நிலையில்தான் திடீரென ஏற்பட்ட கரை உடைப்பால், வயல் பகுதி எங்கிலும் பெருகியது. இதையடுத்து, விவசாயிகள் பலரும் அங்கு குவிந்தனர். மரக்கட்டைகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. இதற்கிடையே, முன்னதாக உள்ள கிளை வாய்க்கால்களில் தண்ணீர் கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலர்கள் மூலம் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு ஜேசிபி வாகனங்கள் மூலம் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உடைப்பைச் சரிசெய்யும் பணிகளைப் பார்வையிட்டார். சுமார் 8 மணி நேரத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு கால்வாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.

இதுகுறித்து கூறிய அப்பகுதி விவசாயிகள்,

``புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை மும்பாலைதான் கடைமடைப்பகுதி. ஒவ்வொரு வருடமும் கடைமடை வரையிலும் சீராகத் தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த நிலையில்தான், தற்போது கரை உடைப்பால், தண்ணீர் வீணாகியுள்ளது. தற்போது கடைமடை வரும் தண்ணீர் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. காவிரி நீர் வரும் வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும். கரைகளை வலுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்வதே இல்லை. தண்ணீர் முறையாகக் கிடைத்தால்தான் விவசாயம் செய்ய முடியும்" என்றனர் வேதனையுடன்.

கால்வாய் உடைப்பை சரிசெய்யும் பணி
கால்வாய் உடைப்பை சரிசெய்யும் பணி

இதுகுறித்து நம்மிடம் பேசிய கண்காணிப்புப் பொறியாளர் அன்பரசன்,``கரைகளில் எலிகள் அதிகளவில் துளையிட்டுள்ளன. எலித் துளைகள் வழியாக தண்ணீர் உட்புகுந்து சென்றதால்தான் கரை உடைப்பு ஏற்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறும்போது,``ஏற்கெனவே காவிரி நீர் பாயும் இடங்களில் எல்லாம் சிறப்புத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது வேம்பக்குடிக் பகுதியில் ஏற்பட்ட கரை அடைப்பு முழுமையாகச் சரிசெய்யப்பட்டிருக்கிறது. அலுவலர்கள் மேற்பார்வையில் கல்லணைக் கால்வாயின் கரைப்பகுதிகள் அனைத்தையும் கண்காணித்து உறுதி செய்யப் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் வலியுறுத்தி உள்ளோம். மாவட்டத்தில் கடைமடை வரையிலும் காவிரி நீர் தங்குதடையின்றிக் கிடைக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு