Published:Updated:

`சத்தமில்லாமல் பிடுங்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள்!’ - குமுறும் சூழல் ஆர்வலர்கள்

வேரோடு அழிக்கப்பட்ட மரம்
வேரோடு அழிக்கப்பட்ட மரம்

`ஆறுகளின் ஓரங்களில் உள்ள நாவல், வேம்பு, இலுப்பை, ஈச்சம், விளா, வில்வம், சரக்கொன்றை போன்ற மரங்கள், ஆறுகளின் கரைகளைப் பாதுகாக்குது. சங்க இலக்கிய பாடல்களிலேயே இதைப் பற்றிய குறிப்புகள் இருக்கு'.

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது, ஆறுகளின் ஓரங்களிலும் ஆற்றங்கரைகளிலும் பல ஆண்டுக்காலமாக இருந்து வரும் நாட்டு மரங்கள் அழிக்கப்படுவதாக, இப்பகுதி விவசாயிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கிறார்கள். தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததாலயே, இம்மரங்கள் அழிக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படப்போகும் விளைவு மிகவும் ஆபத்தானது எனவும் இவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தூர்வாரும் பணி
தூர்வாரும் பணி

``ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் போக்குவரத்து தடைபடாமல் இருக்க, தூர்வாரும் பணி மிகவும் அவசியமானது. இவற்றில் மண்டிக்கிடக்கும், நெய்வேலி, கட்டாமணக்கு, ஆகாயத்தாமரை, காட்டுக்கருவை ஆகியவற்றை அப்புறப்படுத்தினால்தான் விவசாயிகளின் நிலங்களுக்கு தண்ணீர் வந்து சேரும். இதற்காகத்தான் தூர் வாரும் பணி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

ஆனால், இதில் என்ன ஒரு துரதிர்ஷ்டம் என்றால், தூர் வாரும் பணியில் ஈடுபடும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், காட்டுக்கருவை, காட்டாமணக்கு ஆகியவற்றை அப்புறப்படுத்துவதைக் காட்டிலும், ஆறுகளின் ஓரங்களிலும் ஆற்றங்கரைகளிலும் பல ஆண்டுக்காலமாக இருந்து வரும் நாட்டு மரங்களை அப்புறப்படுத்துவதில்தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அழிக்கப்பட்ட மரம்
அழிக்கப்பட்ட மரம்

குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் குடவாசல், கூத்தாநல்லூர், நாகங்குடி, பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகளில் ஏராளமான நாட்டு மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் ஆபத்தானது'' எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து பெரும் ஆதங்கத்தோடு பேசும் வனம் கலைமணி, ``விவசாயிகளின் நன்மைக்காகத் தூர்வாரும் பணி நடைபெறுவதை எல்லோருமே வரவேற்கிறோம். ஆனால், இதைக் கண்மூடித்தனமாகச் செய்யக் கூடாது. ஆறுகளின் ஓரங்களில் உள்ள நாவல், வேம்பு, இலுப்பை, ஈச்சம், விளா, வில்வம், சரக்கொன்றை போன்ற மரங்கள், ஆறுகளின் கரைகளை மண் அரிப்பிலிருந்து பாதுகாக்குது. சங்க இலக்கிய பாடல்களிலேயே இதைப் பற்றிய குறிப்புகள் இருக்கு. இதனால்தான் நம் முன்னோர்கள் குடிமராமத்துப் பணிகளின்போது, இந்த மரங்களை அழிக்காமல் பாதுகாத்துக்கிட்டு வந்தாங்க.

வனம் கலைமணி
வனம் கலைமணி

பெரும்பாலும் ஆற்றங்கரைகளில் உள்ள மரங்கள் பறவைகள் எச்சத்தின் மூலமாகவும், நீரினால் அடித்து வரப்பட்ட விதைகள் மூலமாகவும் வளர்ந்த மரங்களாகத்தான் இருக்கும். இந்த மரங்கள் பெரும்பாலும் அரியவகை நாட்டு மரங்களாகவே இருக்கும். ஆற்றங்கரைகளைப் பொறுத்தவரை அழிஞ்சில், கொடுக்காப்புளி, விளா, வில்வம், சரக்கொன்றை, ஆலம், அரசு, இலுப்பை, நாவல், ஈச்சம், பனை மற்றும் செங்கடம்பு உள்ளிட்டவை செழிப்பாக வளர்ந்திருக்கு. இவை மருத்துவக் குணம் கொண்ட மரங்கள். பறவைகளுக்கு உணவளிக்கக்கூடிய பழ மரங்களும் இங்கே நிறைய வளரும். இதனால் நிழலும் கிடைக்குது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் சத்தமில்லாமல், ஆயிரக்கணக்கான மரங்கள் பிடுங்கி எறியப்படுகின்றன. இதனால் கரைகள் பலவீனமடையுது. ஆறுகள்ல அதிமகமாகத் தண்ணீர் வரும்போது, வெள்ளம் ஏற்பட்டு, கரைகள் உடைப்பெடுத்து, ஊருக்குள் தண்ணீர் புகக்கூடிய ஆபத்து அதிகரிக்குது. தூர் வாரும் பணி ஒழுங்கா நடந்ததாகப் பளிச்னு கணக்கு காட்டதான், ஆற்றங்கரைகள் மற்றும் ஆற்றோரங்கள்ல உள்ள மரங்களை அழிக்கிறாங்க. இது உடனடியாகத் தடுக்கப்படணும்” எனத் தெரிவித்தார்.

RTI அம்பலம்... குடிமராமத்து திட்டத்தில் ஏப்பம் விட்ட கோடிகள்! -  பதில் சொல்வாரா முதல்வர் பழனிசாமி?

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ``நீர்வழிப்பாதைகளை அடைத்துக்கொண்டு இருக்கக்கூடிய சிறிய மரங்கள்தான் அகற்றப்பட்டுள்ளன. இதுவும்கூட தவிர்க்க முடியாத சூழலில்தான் அகற்றப்பட்டுள்ளது. இவற்றை அப்படியே விட்டுவிட்டால், இவற்றின் வேர்களால் கரைகளும் பாதிக்கப்படும்" எனத் தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு