Published:Updated:

ஒரே மாதத்தில் 2வது முறையாகத் திறக்கப்பட்ட பைக்காரா அணை! - நீலகிரியில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

ரா.சதீஸ்குமார்

ஊட்டியில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக பைக்காரா அணை திறக்கப்பட்டு, கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Pykara dam
Pykara dam

நீலகிரி மாவட்டத்தில், கடந்த மாத துவக்கத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை கொட்டித்தீர்த்து. இந்த பெருமழையில் 7 பேர் உயிரிழந்தனர். 5,000 பேர் வீடுகளை இழந்து மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டன. சுமார் 300 கி.மீ சாலைகள் சேதமடைந்தன.

Pykara dam
Pykara dam

தற்போது, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி, அவலாஞ்சி, அப்பர்பவானி, கூடலூர் போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூரில் 146 மி.மீ, அவலாஞ்சி 114 மி.மீ, நடுவட்டம் 111மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் பெய்த பெருமழையில் வறண்டுகிடந்த எல்லா அணைகளும் நிரம்பி வழிந்தன. குந்தா, பைக்கார, கிளன்மார்கன் போன்ற அணைகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டது.

தற்போது, இரண்டு நாள்களாக மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பைக்கார அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழுக் கொள்ளளவான 100 அடி உயரத்தை இன்று காலை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, இரண்டாவது முறையாக பைக்காரா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் மசினகுடி, மாயார், தெங்குமராடா உள்ளிட்ட கரையோர கிராமப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Pykara dam
Pykara dam

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கடந்த மாத பெருமழைக்கு முன்பு, பைக்காரா அணையின் நீர்மட்டம் வெறும் 32 அடியாக இருந்தது. இரண்டே நாள்களில் முழுக் கொள்ளளவை எட்டியது. உடனடியாக அணையைத் திறந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மீண்டும் மழை தீவிடமடைந்துள்ள நிலையில், 30 நாள்களுக்குள் இரண்டாவது முறையாக அணை திறக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது'' என்றார்.

பைக்காரா பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கூறுகையில், ``கடந்த இரண்டு நாள்களாக நடுவட்டம், பைக்காரா பகுதிகளில் காற்றுடன் இடைவிடாது மழை பெய்துவருகிறது. இதனால் பைக்கரா அணை, கடல் போல காட்சியளிக்கிறது” என்றார்.